

சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட உள்ளாட்சிச் சட்டங்களும் இடஒதுக்கீட்டு முறைகளும் அவற்றின் இலக்கை எட்டுவதற்கு இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என்ற சீற்றத்தையே ஏற்படுத்துகின்றன, கடலூர் மாவட்டத்தின் தெற்குத் திட்டையில் நடந்துள்ள சம்பவங்கள். ஜூலை 17-ல் நடந்த ஊராட்சி மன்றக் கூட்டத்தில் அனைவரும் நாற்காலியில் அமர்ந்திருக்க பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமரவைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, சுதந்திர தினத்தன்று அவரைத் தேசியக் கொடியேற்றுவதற்கு அனுமதிக்காமல் ஊராட்சி துணைத் தலைவரே கொடியேற்றியிருக்கிறார்.
இது பொதுவெளிக்கு வந்ததும், மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு ஊராட்சித் தலைவரை அவமதித்த ஊராட்சி துணைத் தலைவரின் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த ஊராட்சி மன்றச் செயலாளரின் மீதும் வழக்குப் பதிவுசெய்திருப்பதோடு, கொடியேற்ற அனுமதிக்கப்படாதது தொடர்பில் விசாரிப்பதாகவும் உறுதியளித்திருக்கிறது என்றாலும், நடந்த அவமதிப்பு உண்டாக்கும் வலியிலிருந்து அவ்வளவு எளிதாக விடுபட முடியவில்லை.
இதேபோல, திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் ஊராட்சித் தலைவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவருமான அமிர்தம் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தபோது, ஊராட்சி மன்றச் செயலாளரால் அவமதிக்கப்பட்டதை நாம் நினைவுகூரலாம். அந்தச் சம்பவத்துக்கு ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கணவரும் ஊராட்சி மன்றச் செயலாளரும் காரணமாக இருந்தார்கள். மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு, ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தத்தம்மாளுக்குக் கொடியேற்றும் வாய்ப்பை அடுத்த சில நாட்களில் வழங்கியது என்றாலும், இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது நம்முடைய சமூகத்தின் நச்சுச் சூழலையே காட்டுகிறது.
சாதியின் பெயரால் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அவமதிக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்தவுடன் திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களின் ஆட்சியர்கள் உடனடியாகக் களத்தில் இறங்கி, அதற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், இது மாவட்ட நிர்வாகங்கள் அளவில் முடிந்துவிடக் கூடியதல்ல. சமூகநீதியின் பெயரால் ஆட்சிக்கு வந்த மாநிலத்தின் இரு பெரிய கட்சிகளும் இத்தகு சம்பவங்களுக்காக வெட்கப்பட வேண்டும். களத்துக்கு நேரடியாகச் சென்று அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் செயலாற்ற வேண்டும். இரு ஊராட்சி மன்றங்களிலும் அதிமுக - திமுக இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நிர்வாகத்தில் இருப்பார்கள்தானே? அவர்களும் இந்தக் கொடுமைக்குத் துணைபோய் இருப்பார்கள்தானே? அவர்கள் மீது என்ன நடவடிக்கையை சம்பந்தப்பட்ட கட்சிகள் எடுக்கப்போகின்றன? இது அதிமுக - திமுகவுக்கு மட்டும் அல்ல; எல்லாக் கட்சிகளுக்குமே பொருந்தும். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டத்தின் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டாக்கச்சியேந்தல் என நான்கு ஊராட்சிகளில் தலைவர் பதவியில் தலித்துகள் அமருவதைக் காணப் பொறுக்காமல் பத்தாண்டு காலத்துக்குத் தேர்தலையே அங்கு நடத்தவிடாமல் சாதிய சக்திகள் முடக்கிவைத்திருந்த சூழலில், அன்றைய முதல்வர் கருணாநிதி நேரடியாக இதைக் கையில் எடுத்து, தேர்தல் நடக்க வழிவகுத்ததையும் தேர்தலில் வென்ற நான்கு ஊராட்சித் தலைவர்களையும் சென்னைக்கு அழைத்து விழா நடத்தியதையும் இங்கே நினைவுகூரலாம்.
அதிகாரவர்க்கம் நிச்சயம் இதில் இணைந்து பணியாற்ற முடியும். உதாரணமாக, இத்தகு கொடுமைகளுக்குத் துணைபோகும் அரசு ஊழியர்களான ஊராட்சி மன்றச் செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்கலாம். ஆனால், சாதி வெறி புரையோடிப்போன நம் சமூக அமைப்பில், அதிகாரிகள் அளவிலேயே எல்லாவற்றையும் எதிர்கொள்ள முடியாது. அரசியல் தலைவர்கள் கட்சி வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு களம் இறங்க வேண்டும். ஏனென்றால், இத்தகு சம்பவங்கள் ஒட்டுமொத்த மாநிலத்துக்குமே அவமானம். மேலும், சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் தன் ஆன்மாவாகக் கொண்டிருக்கும் அரசமைப்புக்குமான அவமதிப்பு!