Published : 12 Oct 2020 07:33 am

Updated : 12 Oct 2020 07:33 am

 

Published : 12 Oct 2020 07:33 AM
Last Updated : 12 Oct 2020 07:33 AM

குறுவை உணர்த்தும் தேவை: ஒருங்கிணைந்த பூச்சிகள் ஒழிப்புத் திட்டம்

farmer-trouble

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு போதுமான மழையும், காவிரியில் தண்ணீரும் ஒருசேர அமைந்ததால், மேட்டூர் அணையிலிருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு, மாநிலத்தின் உணவுக் களஞ்சியமான காவிரிப் படுகையில், குறுவை சாகுபடியானது நல்ல நெல் விளைச்சலைத் தந்திருக்கிறது. ஆனாலும், இரு பிரச்சினைகளை விவசாயிகள் எதிர்கொள்கிறார்கள். முதலாவது பிரச்சினை, விளைச்சல் நன்றாக இருந்தாலும், இந்த முறை வேளாண் இடுபொருட்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் ஆகியிருக்கும் செலவானது, விவசாயிகளைத் துயரத்தில் தள்ளியிருக்கிறது. குறிப்பாக, பூச்சிகளின் தாக்குதல் கடுமையாக உயர்ந்திருக்கிறது. விளைவாக, பூச்சிக்கொல்லிகளுக்கு ஆகியிருக்கும் செலவு, விளைச்சலின் பலனை விவசாயிகளை அடையவிடாமல் தடுப்பதாக அமைந்திருக்கிறது. இரண்டாவது பிரச்சினை, அரசு நேரடிக் கொள்முதல் நிலையங்களில் முன்கூட்டியே கொள்முதல் இலக்குகள் எட்டப்பட்டுவிட்டதால் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் தங்களது நெல்லை விற்கப் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

குறுவை, சம்பா, தாளடி என்று ஒவ்வொரு நெல் சாகுபடிப் பருவம் தொடங்கும்போதும் போதுமான அளவில் விதைநெல், உரங்கள் ஆகியவற்றுடன் பூச்சிக்கொல்லிகளும் கையிருப்பில் உள்ளன என்று அமைச்சர்களும் அதிகாரிகளும் அறிவிப்பது வழக்கமாக உள்ளது. சம்பா பருவம் தொடங்கும் நிலையில் வேதியுரங்களைப் போலவே பூச்சிக்கொல்லிகளுக்கான விளம்பரங்களையும் அதிக அளவில் பார்க்க முடிகிறது. இது எங்கோ உரங்களைப் போலவே பூச்சிகொல்லிகளும் இயல்பானது என்ற மனநிலைக்கு நாம் வந்துவிட்டோமோ என்ற கேள்வியை எழுப்புகிறது. மனிதர்கள் அதிகமான அளவில் ஒரு குறிப்பிட்ட கிருமியால் பாதிக்கப்படும்போது சுகாதாரத் துறை அதற்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது. வேளாண் துறைக்கும் அப்படியான பொறுப்பு வேண்டும். குறுவை நெற்பயிர்களில் இந்த ஆண்டு செம்பேன், இலைப்பேன் பூச்சிகளின் தாக்குதல் மிகக் கடுமையான அளவுக்கு இருந்தது. தண்டு துளைப்பான் தாக்குதலும், இலைக் கருகல் நோயும் பரவலாக இருந்தன. இதனால், பூச்சிக்கொல்லிகள் வாங்கவும் தெளிக்கவும் கூடுதல் செலவுசெய்ய வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

ஆனால், கோடை காலப் பயிர் என்பதால்தான் குறுவையில் இலைப்பேன், செம்பேன் தாக்குதல் அதிகமாக இருக்கிறது என்றும், இதற்கு மண்ணில் உள்ள உவர்ப்புத்தன்மைதான் காரணம் என்றும் மழைக் காலங்களில் பூச்சிகளின் தாக்குதல் இருக்காது என்று வேளாண் அதிகாரிகளால் விளக்கம் மட்டுமே அளிக்க முடிந்தது; தீர்வாகப் பூச்சிக்கொல்லிகளையே அவர்களால் பரிந்துரைக்க முடிந்தது. பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டை விவசாயத்தில் குறைப்பதற்கான வழிமுறைகளை அவர்கள் கண்டறியவும், விவசாயிகளுடன் இணைந்து இதில் பணியாற்றவும் முற்பட வேண்டும். மேலும், எதிர்பாராத மழை, வெள்ளம், புயல் ஆகியவற்றைப் போல இத்தகைய எதிர்பாராத பூச்சித் தாக்குதல்களையும் கணக்கில்கொண்டு விவசாயிகளுக்கு நிவாரணங்களை அளிப்பது தொடர்பில், அரசும் சிந்திக்க வேண்டும். பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள் பூச்சிகளின் தாக்குதல்களுக்கும் நிவாரணங்கள் அளிப்பதாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். பூச்சிகளின் அதீத இனப்பெருக்கத்துக்கும் தட்பவெப்பச் சூழலுக்கும் நேரடியான தொடர்பு இருப்பதால், வேளாண் பருவங்களுக்கான திட்டங்களை உருவாக்கும்போதும் விவசாயிகளுக்கான ஆலோசனைகளை வகுத்துக்கொள்ளும்போதும் சுற்றுச்சூழலியலாளர்களின் கருத்துகளையும் உள்ளடக்கியதாக அது அமைய வேண்டும். பூச்சிக்கொல்லி பரிந்துரைகளைத் தாண்டி, ஒருங்கிணைந்த பூச்சிகள் ஒழிப்புத் திட்டமொன்றைக் கையிலெடுக்க வேண்டிய காலமிது.

அடுத்ததாக, நெல் கொள்முதல் இலக்குகளை அந்தந்த ஆண்டுகளின் விளைச்சலுக்கு ஏற்ப அரசு தீர்மானித்துக்கொள்வதே சரியானதாக இருக்க முடியும். ஆக, தொடர்ந்து நெல் கொள்முதலை மேற்கொள்வதற்கு அரசு உத்தரவிட வேண்டும்.

குறுவை உணர்த்தும் தேவைஒருங்கிணைந்த பூச்சிகள் ஒழிப்புத் திட்டம்குறுவை சம்பா தாளடி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

tamil-cartoon

ஊழல்!?

கார்ட்டூன்
x