

இந்தியாவின் வரித் துறையினருடனான 13 ஆண்டு காலப் போராட்டத்தில் மற்றுமொரு வெற்றி வோடஃபோன் குழுமத்துக்குக் கிடைத்திருக்கிறது. இது தொடர்பான வழக்கில் சர்வதேசத் தீர்ப்பாயம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது. வோடஃபோனிடம் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் இந்தியா வரி கேட்பது இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான ‘நியாயமான, பாரபட்சமற்ற அணுகுமுறை’ தொடர்பில் இரண்டு தரப்புகள் செய்துகொண்ட முதலீட்டு ஒப்பந்தத்தின் கூறு 4(1) வழங்கும் பாதுகாப்பை மீறுவதாகும் என்று அந்தத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்திருக்கிறது.
ஹட்சிஸன் டெலிகம்யூனிகேஷன்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ஹட்சிஸன் எஸ்ஸார் லிமிடெட்டின் கட்டுப்படுத்தும் பங்குகளை வாங்கும்போது, வோடஃபோனின் நெதர்லாந்து அலகானது வரி பாக்கி வைத்திருந்தது என்று வோடஃபோன் நிறுவனத்தை இந்தியாவின் வரித் துறையினர் 2007-ல் கேட்டதிலிருந்து இந்தப் பிரச்சினை தொடங்குகிறது. இந்தப் பங்குகள் பரிவர்த்தனை இந்தியாவுக்கு வெளியே நடந்ததால் இந்த பேரம் தொடர்பான எந்த வரிக்கும் தாங்கள் பொறுப்பாக மாட்டோம் என்று வோடஃபோன் தொடக்கம் முதலே வலியுறுத்திவந்தது. பாம்பே உயர் நீதிமன்றத்தில் வோடஃபோனுக்குப் பின்னடைவு ஏற்பட்டாலும் 2012-ல் உச்ச நீதிமன்றம் அந்த நிறுவனத்துக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. அன்றைய அரசாங்கம் தனது கோரல்களுக்கு வலு சேர்க்கும் விதத்தில் பின்னோக்கிய வகையில் வரிச் சட்டத்தைத் திருத்தியமைத்தது. இது இந்தியாவின் எல்லா சர்வதேச ஒப்பந்தங்களையும் பாதிக்கக் கூடியது. வோடஃபோன் நிறுவனம் சுயேச்சையான நடுவர் மன்றத்தை நாடியது.
வோடஃபோனைப் பொறுத்தவரை, இந்த வெற்றிக்காக அந்நிறுவனம் ஏராளமாக இழந்திருக்கிறது. 2007-ல் ஹட்சிஸன் எஸ்ஸாரின் 67% பங்குகளை வாங்குவதற்காக வோடஃபோன் நிறுவனம் 1,100 கோடி டாலர்களை செலவிட்டது. அதனால் ஏற்பட்ட சவால்களை சமாளிக்க அந்த நிறுவனம் திணறிக்கொண்டிருக்கிறது. இதனால், நவம்பர் 2019-ல் அந்நிறுவனத்துக்கு இந்தியாவில் இருக்கும் சொத்து பூஜ்ஜியம் என்று கணக்கெழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியாவில் அந்நிறுவனத்தின் செயல்பாடுகளும், அதன் சந்தையும் விரிவடைந்தாலும், அந்நிறுவனத்துடன் ஐடியா செல்லுலார் இணைந்ததால் கிட்டத்தட்ட 30 கோடி சந்தாதாரர்கள் அந்நிறுவனத்துக்குக் கிடைத்தாலும்கூட அந்நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்துவருகிறது. இவற்றோடு அரசுக்கு அது அளிக்க வேண்டிய கணிசமான தொகை, வளர்ந்துவரும் தொழில்நுட்பத்துக்கேற்ப தன் நிதியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நிலை போன்றவற்றையும் சேர்த்துக்கொண்டால் வோடஃபோன் இந்தியாவில் தனது செயல்பாடு தொடர்பில் கவலை கொள்வது இயல்பானதே.
அரசு தற்போதைய தீர்ப்பைத் தாண்டி இனி சட்டபூர்வமான நடவடிக்கைகளை எதிர்நோக்கக் கூடாது. அப்படிச் செய்தால், இந்தியாவுக்கு முதலீடுகள் கிடைப்பதில் பெரும் சறுக்கல்களை அது ஏற்படுத்திவிடும். இதிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ளத் தவறினால் சர்வதேச ஒப்பந்தங்களை மீறும் நாடு இந்தியா என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கருதிவிடும் அபாயம் ஏற்படும்.