Published : 17 Sep 2020 07:09 AM
Last Updated : 17 Sep 2020 07:09 AM

வெள்ளிக் கோள் தரும் உயிர் வெளிச்சம்

சூரியக் குடும்பத்திலேயே மிகவும் சூடான கோள் வெள்ளி. ஆகவே, உயிர் வாழ்வதற்கான சாத்தியம் அங்கு இல்லை என்று சொல்லிவரும் கூற்றை மறுக்க இப்போது புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. விண்வெளி ஆய்வுகளைப் பொறுத்தவரை சமீப காலமாக செவ்வாய்க் கோள் அனுபவித்துவரும் செல்வாக்கை வெள்ளி அனுபவித்ததில்லை. அதன் மேற்பரப்பின் வெப்பம் 460° செல்சியஸுக்கும் மேலே இருக்கிறது. ஆகவே, இந்தக் கோளில் உயிர்கள் வாழ்வதற்கு சாத்தியம் இல்லை என்றே கருதப்பட்டது. புவியின் அளவை ஒத்திருந்ததாலும் பாறைகளால் ஆனதாலும் இது புவியின் ‘சகோதரிக் கோள்’ என்றே அழைக்கப்பட்டுவந்தது. 2011-ல் வெள்ளி வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஓஸோன் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி முகமையின் ‘வீனஸ் எக்ஸ்பிரஸ்’ கண்டுபிடித்ததும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மூன்று ஆக்ஸிஜன் அணுக்களாலான ஓஸோனானது உயிர் வாழ்க்கையின் அறிகுறிகளுள் ஒன்றாகக் கருதப்படுவது. எனினும், சமீபத்தில் வெள்ளியின் வளிமண்டலத்தில் ஃபாஸ்ஃபீன் வாயுவின் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது புவியைத் தவிர ஏனைய கோள்களில் உயிர்வாழ்க்கைக்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா என்ற தேடலுக்குப் புதிய உத்வேகம் தந்திருக்கிறது.

ஃபாஸ்ஃபீன் ஒரு பாஸ்பரஸ் அணுவாலும் மூன்று ஹைட்ரஜன் அணுக்களாலும் ஆனது. இது உயிர்வேதி வினைகளின்போது சில நுண்ணுயிரிகளால் வெளியிடப்படுவது. கார்பன்-டை-ஆக்ஸைடு அதிகமாகச் செறிந்திருக்கும் வளிமண்டலத்தில் ஃபாஸ்ஃபீன் வெகுவிரைவில் அழிந்துபடக்கூடியது. ஆயினும், வெள்ளியின் வளிமண்டலத்தில் நூறு கோடியில் இருபது பங்கு என்ற அளவில் ஃபாஸ்ஃபீன் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இந்தத் தகவலையும் வெள்ளியின் மேற்பரப்பில் நிலவும் அதீதமான சூழலையும் வைத்துப் பார்க்கும்போது வியப்பூட்டும் சாத்தியங்கள் தென்படுகின்றன. அதீதமான வேதிவினைகள், மிக அதிகமான வெப்பநிலை ஆகியவற்றைத் தாண்டியும் ஃபாஸ்ஃபீன் தாக்குப்பிடித்திருப்பது அல்லது உயிர்வாழ்க்கை அடைந்திருக்கக்கூடிய பிடிவாதமான வெற்றி ஆகிய சாத்தியங்களை இவற்றால் நாம் உணர்கிறோம்.

பிரிட்டனின் கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் ஜேன் எஸ். கிரீவ்ஸ் தலைமையிலான சர்வதேச வானியலாளர்களின் குழுவொன்று பல ஆண்டுகளாக மிகத் தீவிரமாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவுதான் இந்தக் கண்டறிதல். ஆராய்ச்சியாளர்களின் ஊகத்தை சீலே நாட்டில் உள்ள ‘அதகாமா லார்ஜ் மில்லிமீட்டர்/ சப்மில்லிமீட்டர் அரே’ மையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் உறுதிசெய்தன. எனினும், இதையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு புவிக்கு வெளியே உயிர்வாழ்க்கை இருப்பதாக நாம் உடனடியாகக் கொண்டாடிவிடக் கூடாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். வெள்ளியின் வளிமண்டலத்தில் நேரடியாகச் செய்யும் ஆய்வுகள் மூலமாக மட்டுமே இதை மேற்கொண்டு உறுதிப்படுத்த முடியும்.

வெள்ளியில் விண்கலத்தைத் தரையிறக்குவதைவிட பாதுகாப்பான உயரத்தில் பறக்கச் செய்து, ட்ரோன்களையும் பலூன்களையும் கீழே அனுப்புவது சற்று எளிதாக இருக்கலாம். நாஸா அடுத்த ஆண்டும், இஸ்ரோ 2023-லும் வெள்ளிக்கு விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது. இதுபோன்ற முயற்சிகளைக் கூட்டாக மேற்கொண்டால் அது மிகுந்த பலனளிக்கும். வெள்ளி அளித்திருக்கும் நம்பிக்கையை மனிதர்களின் தேடலுக்குக் கிடைத்த பரிசாகக் கருதி நம் தேடலை இன்னும் விரிவுபடுத்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x