Published : 10 Sep 2020 07:46 am

Updated : 10 Sep 2020 07:46 am

 

Published : 10 Sep 2020 07:46 AM
Last Updated : 10 Sep 2020 07:46 AM

ஆக்கபூர்வமாக அமையட்டும் பருவகாலக் கூட்டத்தொடர்

parliamentary-session

செப்டம்பர் 14 அன்று தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பல விஷயங்கள் முதன்முறையாக இடம்பெறவிருக்கின்றன என்பதுடன் சவால் நிறைந்ததாகவும் இருக்கப்போகிறது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கு ஏதுவாக மக்களவையும் மாநிலங்களவையும் அடுத்தடுத்த நாட்களில் இயங்கும். பார்வையாளர் மாடங்களில்கூட நாடாளுமன்ற உறுப்பினர்களே அமர்ந்திருப்பார்கள். விடுமுறைகள் ஏதுமின்றி 18 அமர்வுகள் நடக்கவிருக்கின்றன.

1 - 3 மணி வரையிலான இடைவேளையில் அவையில் கிருமிநாசினிகள் தெளித்து சுத்தம் செய்யப்படும். இரண்டு அவைகளையும் அதிகாரிகள் வெள்ளோட்டம் பார்த்திருக்கிறார்கள். கேள்வி நேரம் இருக்காது; ஆனால், எழுத்துபூர்வமான கேள்விகளுக்கு எழுத்துபூர்வமான பதில்களை உறுப்பினர்கள் பெறலாம். தேசிய அளவில் அவசரமான, அவசியமான விஷயங்கள் குறித்து, உறுப்பினர்கள் கவனப்படுத்துவதற்கான நேரமில்லா நேரம் ஒரு மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய நாடாளுமன்ற நடைமுறைகள் பற்றி ஆரம்பத்தில் சிற்சில சலசலப்புகள் இருந்தாலும் எதிர்க்கட்சிகள் பெரிதும் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் உண்மை. சமீபத்தில், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிகள் ஆளும் கேரளம், ராஜஸ்தான், பஞ்சாப், வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றம் கூடினாலும் அவற்றிலும் கேள்வி நேரம் கடைப்பிடிக்கப்படவில்லை.


பெருந்தொற்று தொடங்கிய பிறகு அரசு தனது அதிகாரத்தை அதிகப்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் அதிகாரமானது பெருந்தொற்றுக்கு முன்பே வலுவிழக்கச் செய்யப்பட்டது. ஆட்சியாளர்களின் பொறுப்புத்தன்மையை உறுதிப்படுத்தும் விதத்திலும், மக்களின் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கும் விதத்திலும் இருக்க வேண்டிய நாடாளுமன்றம், தன் கடமையிலிருந்து நழுவுவதுபோல் தெரிகிறது. சட்டமியற்றுதலைப் பொறுத்தவரை அரசு எல்லாவற்றையும் அவசரமாகச் செய்துவருகிறது. ஆரோக்கியமற்ற இந்தப் போக்கானது பெருந்தொற்றால் மேலும் தீவிரமடைந்துவருகிறது.

பெருந்தொற்றை அரசு கையாளும் விதம் தொடர்பில் நாடாளுமன்றம் கேள்வி கேட்க வேண்டும். ஆனால், அப்படி நடப்பதில்லை. சீனாவின் அத்துமீறல், பொருளாதாரத்தில் நிகழ்ந்திருக்கும் பெரும் சறுக்கல்கள், ஜிஎஸ்டி தொடர்பில் மாநிலங்களுக்கு அரசு அளித்த உத்தரவாதத்தின் தோல்வி, பெருந்தொற்றுக்கு நடுவே பிஹாரில் வரவிருக்கும் தேர்தல், ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய நிலை, தனது அண்டை நாடுகளுடன் இந்தியாவின் உறவு மோசமாகிவருதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் நாடாளுமன்றத்தின் கவனம் கோரி வரிசைகட்டி நிற்கின்றன. இந்தப் பிரச்சினைகள் குறித்தெல்லாம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தாலும் அரசு பெரிதும் கண்டுகொள்வதில்லை.

மாநிலங்களை ஆளும் பிராந்தியக் கட்சிகள் பெருந்தொற்றைச் சமாளிப்பதற்காகப் போராடிக்கொண்டிருப்பதால், மற்ற பிரச்சினைகளை அவற்றால் கவனிக்க முடியவில்லை. அவசரச் சட்டங்களைப் பதிலீடு செய்வதற்கான 11 மசோதாக்கள் அரசின் முன் இருக்கின்றன. பி.எம். கேர்ஸ் நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு 100% வரிவிலக்கு தரும் வகையில் வருமான வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கான ‘வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்களுக்கான அவசரச் சட்ட’த்தைப் பதிலீடு செய்யும் மசோதா அவற்றுள் ஒன்று. இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பாக அரசும் எதிர்க்கட்சிகளும் இந்தக் கூட்டத்தொடரைப் பயன்படுத்திக்கொள்வது முக்கியம்.


பருவகாலக் கூட்டத்தொடர்கூட்டத்தொடர்நாடாளுமன்றக் கூட்டத்தொடர்Parliamentary Sessionதனிமனித இடைவெளிCorona virusCovid 19பொருளாதாரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author