மரண தண்டனையின் விதியைத் தீர்மானிக்கப்போகும் தீர்ப்பு!

மரண தண்டனையின் விதியைத் தீர்மானிக்கப்போகும் தீர்ப்பு!
Updated on
2 min read

மும்பை புறநகர் ரயில்களில் 2006 ஜூலை 11-ல் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு, ‘மேக்ஸிமம் சிட்டி’ என்று செல்லமாக அழைக்கப்படும் மும்பை நகரத்தின் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு. நாளொன்றுக்குச் சுமார் 75 லட்சம் பேர் பயணம் செய்யும் மும்பை புறநகர் ரயில்களில் பாதுகாப்பை உறுதிசெய்வது என்பது இன்றுவரை ஒரு பெரும் சவாலாகவே இருக்கிறது.

மத்திய மற்றும் மேற்கு ரயில்வே அமைப்புகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகக் கடந்த 9 ஆண்டுகளில் ரூ. 10 கோடியைச் செலவுசெய்திருக்கிறது ரயில்வே துறை. ஒரு காலத்தில், மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களே இல்லை என்ற நிலையிலிருந்து தற்போது 3,600-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது நல்ல முன்னேற்றம். எனினும், 1993-லிருந்து ஏழு முறை பயங்கரவாதத் தாக்குதல்களைச் சந்தித்த நகரம் மும்பை. அதிலும் மூன்று குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தது புறநகர் ரயில்களில்தான்.

2006-ல் நடந்த ரயில் குண்டுவெடிப்பில் 189 பேர் கொல்லப்பட்டனர். 1993-ல் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்குப் பின்னர் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய சம்பவம் இது. 1993-ல் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை முடிய 14 ஆண்டுகள் பிடித்தன. ஆனால், 2006 குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணையை ஐந்தே ஆண்டுகளில் முடித்துவிட்டார் நீதிபதி ஒய்.டி. ஷிண்டே. மும்பையில் கடும் உயிர்ச் சேதத்துக்குக் காரணமான இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும், விரைவு நீதிமன்றங்களின் மூலம் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதைக் காட்டுகின்றன. வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துவதன் மூலம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய நீதியைப் பெற்றுத்தர முடியும் என்பதுடன், தவறுதலாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிசெய்யவும் முடியும். 2006 குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 37 வயதான ஆசிரியர் அப்துல் வாஹித் ஷேக், 9 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், ஜூலை 30-ல் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்குப் பின்னர், மரண தண்டனை தொடர்பாக விவாதம் எழுந்திருக்கும் சமயத்தில் வழங்கப்படவிருக்கும் தீர்ப்பு இது.

இதற்கிடையே, பயங்கரவாதக் குற்றங்களைத் தவிர, மற்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படக் கூடாது என்று இந்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது. வழக்குரைஞர் யுக் மோஹித் சவுத்ரி தலைமையிலான குழு, மரண தண்டனைக்கு எதிரான வலுவான வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்திருக்கிறது. கீழ் நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 4.3% பேருக்குத்தான் உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதிசெய்திருக்கிறது என்றும், மீதமுள்ளவர்களில் பலர் விடுவிக்கப்பட்டனர் அல்லது அவர்களுக்குத் தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது என்றும் சட்ட ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதை யுக் மோஹித் சவுத்ரி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வதை வைத்துத்தான் இந்த வழக்கு நடந்துவருகிறது எனும் நிலையில், சம்பந்தப்பட்ட நபர்கள் குற்றத்தில் ஈடுபட்டது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால்தான் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். இவ்வழக்கில் வழங்கப்படவிருக்கும் தீர்ப்பின் அடிப்படையில்தான் மரண தண்டனை குறித்த விவாதம் அமையும் எனும் நிலையில், இந்தத் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in