வரவேற்க வேண்டியது மச்சில் தீர்ப்பு!

வரவேற்க வேண்டியது மச்சில் தீர்ப்பு!

Published on

ஆயுதப் படையினரின் பதக்க - பதவி வெறி வேட்கைக்குச் சரியான அடி கொடுத்திருக்கிறது ராணுவ நீதிமன்றம். காஷ்மீரின் மச்சில் என்ற இடத்தில் 2010 ஏப்ரல் 29-ல் ரியாஸ் அகம்மது, முகம்மது ஷஃபி, ஷசாத் அகமத் என்ற மூன்று இளைஞர்களை ‘போலி என்கவுன்டர்’ மூலம் சுட்டுக் கொன்றதாக நிரூபிக்கப்பட்ட வழக்கில், 6 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ராணுவத்தில் வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசைகாட்டி, போலீஸ் அதிகாரி பஷீர் அகமது லோன் என்பவர் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த இந்த 3 இளைஞர்களை ராணுவத்திடம் அழைத்து வந்து ஒப்படைத்திருக்கிறார். இதற்காகத் தலைக்கு ரூ.50,000 என்று ராணுவத்தினரிடம் பணமும் வாங்கியிருக்கிறார். மோதல்களின்போது ஊடுருவல்காரர்களை அல்லது பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றால் தரப்படும் ரொக்க விருதுகளுக்கு ஆசைப்பட்டு, அதிகாரிகள், சிப்பாய்கள் உள்ளிட்ட 6 பேர், இந்த 3 பேரையும் சுட்டுக் கொன்றிருக்கின்றனர்.

இதற்கு முன் பத்ரிபாலில் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தது. வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணைக்குப் போனபோது, இம்மாதிரியான சம்பவங்களை மாநில நீதிமன்றங்கள் விசாரிப்பதற்கு, சம்பந்தப்பட்ட ராணுவப் படைப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டியிருக்கிறது. அதற்குப் பதிலாக ராணுவமே தன்னுடைய நீதிமன்றம் மூலம் விசாரித்து விரைந்து தீர்ப்பு வழங்கலாம் என்று யோசனை தெரிவித்தது. அந்த அடிப்படையில் ராணுவ நீதிமன்றம் மச்சில் சம்பவத்தை விசாரித்து தண்டனை வழங்கியிருக்கிறது. முன்பு பத்ரிபால் சம்பவத்தில் ராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டை ராணுவம் மறுத்தது. ஆனால், அதே ராணுவம் இந்த வழக்கில் உண்மைகள் வெளிவர அனுமதித்திருப்பது வரவேற்கத் தக்கது. மச்சில் சம்பவத்தில், களத்தில் திடீரென்று எதிர்ப்பட்டவர்கள் இன்னாரென்று அடையாளம் தெரியாமல் சுடப்படவில்லை, தவறான முடிவெடுத்து சுடவில்லை, வேண்டுமென்றே சுட்டிருக்கிறார்கள் என்ற முடிவுக்கு ராணுவ அதிகாரிகளே வந்திருக்கின்றனர். பின்னர், அது விருதும் ரொக்கப் பரிசும் வாங்குவதற்காக என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டப்படியே நடவடிக்கை எடுத்திருந்தாலும், தவறான செயல்கள் விசாரிக்கப்படாமல் போகாது, தவறு செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்தியிருக்கிறது.

காஷ்மீரில் நடைபெற்ற மனித உரிமை மீறல் சம்பவம் ஒன்றில் முதல் முறையாக இப்போது தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் மக்கள் ராணுவத்தின் மீது நம்பிக்கை கொள்ள இது வழிவகுக்கும். இந்திய ராணுவத்தை எதிரியாகச் சித்தரித்து, வெறுப்பு அரசியல் மூலம், பிரிவினை விதைகளைத் தூவும் பிரிவினைவாதிகளின் வாய்களையும் இது அடைக்கும். எல்லாவற்றுக்கும் மேல், இந்தத் தீர்ப்பானது ராணுவத் தலைமைகளின் மீதான நெருக்குதலையும் போக்கியிருக்கிறது. ராணுவ வீரர்கள் யாராவது அத்துமீறி நடந்தால் அதைப் பூசி மெழுக வேண்டியதில்லை என்பதற்கான முன்னோடியாக இத்தீர்ப்பு அமையும். காஷ்மீரத்தில் மட்டுமல்ல, நாட்டின் எந்தப் பகுதியாக இருந்தாலும், ராணுவ வீரர்கள் குடிமைச் சமூகத்திடம் சட்டத்துக்கு உட்பட்டே நடந்துகொள்ள வேண்டும் என்பது இத்தீர்ப்பின் மூலம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in