Published : 04 Sep 2020 08:16 AM
Last Updated : 04 Sep 2020 08:16 AM

ஜிஎஸ்டி: மாநிலங்கள் துயர நிலையிலிருந்து மீட்கப்பட வேண்டும்

மூன்றாண்டுகளுக்கு முன்பு, ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற முழக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது தற்போது பெரும் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. பல்வேறு வரிகள் ஜிஎஸ்டிக்குள் உள்ளடக்கப்பட்டதால் மாநிலங்கள் இழந்த வரிவருவாய்க்கான நிவாரணத்தை ஐந்து ஆண்டுகள் அவற்றுக்குக் கொடுப்பதற்கு ஒன்றிய அரசு கடமைப்பட்டிருக்கிறது. ஆனால், நிவாரணத் தொகையில் ஏற்பட்ட குறைவைச் சரிகட்ட ஒன்றிய அரசால் இயலாது என்று சமீபத்திய கூட்டத்தின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிவிட்டார். எல்லா இலக்குகளுக்கும் மாறாக மிகக் குறைவாகவே ஜிஎஸ்டி இந்த ஆண்டு வசூலாகியிருக்கிறது என்பதைக் காரணமாகச் சொன்ன அவர், மாநிலங்களுக்கு இரண்டு வாய்ப்புகளை வழங்கியிருக்கிறார். இந்த இரண்டின்படியும் அவை சந்தையிலிருந்து கடன்பெற்றாக வேண்டும். ஜிஎஸ்டி அமலாக்கத்தில் ஏற்பட்ட பற்றாக்குறை வெறும் ரூ.97 ஆயிரம் கோடிதான் என்றும், ‘கடவுள் செயல்’ (பெருந்தொற்று) காரணமாக ஏற்பட்ட அசாதாரணமான சூழல்தான் ரூ.1.38 லட்சம் கோடி பற்றாக்குறைக்குக் காரணம் என்றும் சொல்லி, இந்தச் சுமை இப்போது மாநிலங்கள் மீது ஏற்றப்பட்டிருக்கிறது.

ஆக, ரூ.97 ஆயிரம் கோடியை மாநிலங்கள் கடனாக வாங்கலாம், அவற்றுக்கான அசலும் வட்டியும் எதிர்காலக் கூடுதல் தீர்வைகளிலிருந்து கொடுத்துக்கொள்ளலாம் என்ற ஏற்பாட்டின்படி அல்லது ஒட்டுமொத்தப் பற்றாக்குறையான ரூ.2.35 லட்சம் கோடியைக் கடனாகப் பெற்று, அவையே வட்டியையும் கட்டிக்கொள்ளலாம். ஒன்றிய அரசு அதிக அளவில் கடன் வாங்கினால் அது வட்டி விகிதத்தை அதிகரித்து அதனால் இந்தியாவின் நிதி நிலைமையே பெரும் பாதிப்புக்குள்ளாகிவிடும். இதைத் தவறான முன்னுதாரணமாகவே – அதாவது, மாநிலங்கள் உட்பட ஒட்டுமொத்த அரசாங்கத்தின் கடனாகவே – தரப்படுத்தல் முகமைகள் பார்க்கும். பல்வேறு மாநிலங்கள் இந்த இரண்டு வழிமுறைகளையும் நிராகரித்திருக்கின்றன. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பெரிய அளவில் செலவழிக்கும் தேவை இருப்பதையும், பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிட வேண்டியுள்ளதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒன்றிய அரசு மறுபரிசீலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் ஒன்றிய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளன. அதுதான் சரி.

எப்படியும் ஸ்தம்பித்துப்போன இந்த நிலைமையைச் சரிசெய்வது ஒன்றிய அரசின் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால், பெரும்பாலான அதிகாரங்களை அதுதான் கொண்டிருக்கிறது. மாநிலங்களை வெறுமனே பொறுப்பாளிகள் ஆக்க முடியாது. இன்று நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரச் சரிவு சாமானியமானது அல்ல. கடந்த காலாண்டில் மட்டும் நாட்டின் ஜிடிபியில் 23.9% சுருங்கிவிட்டது. இந்திய ஜிடிபியில் தனிநபர் நுகர்வு வழக்கமாக 60% இருக்கும், அது தற்போது 26.7%-ஆகக் குறைந்துவிட்டது. நுகர்வுக்கான சக்தியை மக்கள் இழந்துவருவதன் விளைவு இது. ஜிடிபியில் ஐந்தில் ஒரு பகுதி பங்களிப்பைச் செய்யும் ஏற்றுமதியும் வெளிநாட்டில் இந்தியப் பொருட்களுக்கு இருக்கும் தேவையும் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு குறைந்துவிட்டன. முதலீட்டுச் செயல்பாடுகள்தான் கடுமையாக அடிவாங்கியிருக்கின்றன; 47% குறைந்துவிட்டன. இந்தச் சீரழிவுகளிலிருந்து பொருளாதாரத்தை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டும் என்றால், மாநிலங்களின் கை மீண்டும் ஓங்க வேண்டும். படைப்பூக்கத்துடன் புதியன சிந்திக்கும் பலதரப்பட்ட முனைப்புகள் முகிழ்ந்து மலர வேண்டிய காலம் இது. மேலும், ஜிஎஸ்டியை இந்திய அரசு மறுபரிசீலிக்க வேண்டிய தருணமும் இது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x