Published : 18 Sep 2015 08:39 AM
Last Updated : 18 Sep 2015 08:39 AM

வாழ்வாதாரத்துடன் விளையாடாதீர்கள்!

மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது மகாராஷ்டிர அரசு. வரும் நவம்பர் மாதம் மும்பை பெருநகரப் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய ஆட்டோ ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் திவாகர் ராவ்தே, “மராத்தி மொழியில் பேசத்தெரிந்தவர்களுக்குத்தான் உரிமம் வழங்கப்படும்; இருப்பிடச் சான்றிதழும் அவசியம்” என்று தெரிவித்திருக்கிறார். கூடவே “வருங்காலத்தில் டாக்ஸி ஓட்டுநர் களுக்கும் இவ்விதி அமலாக்கப்படும்” என்றும் “இதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார். “மராத்தி மொழி பேசாதவர்களுக்கு ஆட்டோ உரிமம் வழங்கக் கூடாது” என்று சமீபத்தில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையின் தலைவர் ராஜ் தாக்கரே கூறியிருந்த நிலையில்தான், மராத்தியவாதம் பேசும் கட்சி என்று அறியப் பட்டிருக்கும் சிவசேனையைச் சேர்ந்த திவாகர் ராவ்தே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பில், பாஜகவுக்குத் தொடர்பில்லை என்று சொல்லிவிட முடியாது. நடப்பது பாஜக கூட்டணி அரசு என்பதோடு, முதல்வரும் பாஜகவைச் சேர்ந்தவர்தான்.

மத்தியில் ‘இந்துத்வக் கொள்கை’, மாநிலத்தில் ‘மண்ணின் மைந்தர்கள் கொள்கை’ என்பது சங்கப் பரிவாரங்களின் பழைய பாணிதான் என்றாலும், ‘வளர்ச்சி அரசியல்’ பேசி ஓட்டு வேட்டை நடத்தும் இந்த நாட்களிலும் தங்கள் பழைய பாதையைவிட்டு அவை விலகவேயில்லை என்பதையே இந்த அறிவிப்பு காட்டுகிறது. நல்ல வேளையாக ஓட்டு பயத்தில் மவுனம் காக்காமல், எதிர்க்கட்சிகள் உடனடியாக எதிர்வினையாற்றி இருக்கின்றன. “இது ஒருதலைப்பட்சமான முடிவு. மராத்தி தெரிந்திருப்பது அவசியம்தான். ஆனால் அதைக் கட்டாயமாக்கக் கூடாது” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது. “ஆட்டோவில் பயணம் செய் பவர்கள் எல்லோரும் மராத்தி தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?” என்று கேட்கும் காங்கிரஸ் கட்சி, “அரசியல் சட்டத்தின்படி, மொழியின் அடிப்படையில் ஒருவரது வாழ்வாதாரம் மறுக்கப்படக் கூடாது. எனவே, மகாராஷ்டிர அரசின் அறிவிப்பு அரசியல் சட்டத்துக்கு எதிரானது” என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

மகாராஷ்டிர மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ஆட்டோ உரிமம் வழங்கப்படுவதற்கு உள்ளூர் மொழி தெரிந்திருப்பது அவசியம் என்றாலும், அந்தச் சட்டம் இதுவரை அம்மாநிலத்தில் அமல்படுத்தப்பட வில்லை. நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், ஓட்டு அரசியலுக்கான நடவடிக்கைகளில் ஒன்றாக பாஜக கூட்டணி அரசின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரத்தின் ஆட்டோ ஓட்டுநர்களில் 70% பேர் மாற்று மொழி பேசுபவர்கள் எனும் சூழலில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது இது. ஒரு வாடிக்கையாளரிடம் அவர் செல்லவிருக்கும் முகவரியைக் கேட்டு தெரிந்துகொள்ளவும், பேரம் பேசவும் ஆட்டோக்காரர் அதிகபட்சம் எத்தனை வார்த்தைகள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்? மேலும், மொழி தெரியாத எவரேனும் வெளியூர்களில் பிழைக்க முடியுமா என்ன? எளிய மக்களுடனான இப்படியான அபாய விளையாட்டு தடுத்து நிறுத்தப்பட வேண்டியது. இவ்விஷயம் பூதாகாரமாக வெடிப்பதற்கு முன்னர் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுப்பது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x