

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை எப்படியோ அதேபோல, அவருடைய மரணமும் இன்றுவரை ஒரு புரியாத புதிர். 1945-ல் தாய்வானில் விமான விபத்தில் அவர் இறந்துவிட்டதாகச் சொல்லப்படுவது உண்டு. அதன் பிறகும் அவரை ரஷ்யாவில் பார்த்ததாகச் சொன்னவர்கள் உண்டு. இந்தியாவுக்குத் துறவியாகத் திரும்பினார் என்பவர்கள்கூடஉண்டு. இன்றும் அவர் உயிர் வாழ்வதாகக்கூடச் சொல்பவர்களும் உண்டு. இதில் எது சரி, எது தவறு எனத் தெரியாமலே தொடர்ந்து நேதாஜி பேசப்பட்டுவருகிறார். ஆனால், போஸைப் பற்றிய பல ஆவணங்கள் மேற்கு வங்காள அரசிடமும் மத்திய அரசிடமும் உள்ளன.
போஸின் மரணம் தொடர்பான மர்மம் ஒரு வகையில் சுதந்திர இந்தியாவின் முன்னோடிகளுக்கும் காங்கிரஸுக்கும் எதிரான பிரச் சாரத்துக்கு இந்துத்வ அமைப்புகளுக்கு நீண்ட காலம் உதவியது. போஸின் உறவினர்களும் ஏதோ ஒரு வகையில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டனர். போஸின் உறவினரான எழுத்தாளர் சுகதா போஸ் எழுதிய, ‘ஹிஸ் மெஜஸ்டீ'ஸ் ஆப்பனென்ட்’ புத்தகம் இதில் முக்கிய மானது. “போஸை ஒழித்துக்கட்ட நேரு முயற்சித்தார்; இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் அவருடைய குடும்பம் நேருவின் உத்தர வின்பேரில் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டது” என்றெல்லாம் பல சர்ச்சைக்குரிய விஷயங்களை இப்புத்தகத்தில் எழுதியிருக்கிறார் அவர். பொதுவாக, “இந்திய சுதந்திரத்துக்குப் பின்னரும் போஸ் வாழ்ந்தார்; அவருடைய மரண மர்மத்துக்குப் பின் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர்” என்று குற்றஞ்சாட்டும் எவரும் ஒரு விஷயத்துக்கு விளக்கம் தர விரும்புவதில்லை. அவர்களுடைய குற்றச்சாட்டு உண்மையெனில், போஸே அதை வெளிப்படுத்தியிருப்பாரே; ஏன் அது நடக்கவில்லை என்பதுதான் அது.
போஸுக்கும் காந்தி - நேருவுக்கும் இடையே ஏற்பட்ட பிணக்கு கொள்கை அடிப்படையிலானதே தவிர, தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அடிப்படையிலானது அல்ல. தவிர, தேச ஒருமைப்பாடு, மதச்சார்பின்மை, பன்மைத்துவம் போன்ற இந்தியாவின் உரிய விழுமியங்களில் அவர்களிடையே எந்த வேறுபாடும் இருந்ததில்லை. எந்த ஒரு அரசும் நாட்டின் நலன் கருதி சில ரகசியங்களைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாக நேரிடும்; ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு. ஆனால், எல்லாக் காலகட்டத்திலும் பூட்டி மறைக்க வேண்டிய ரகசியங்கள் ஏதும் இல்லை; ஒரு ஜனநாயக நாட்டில்.
அதிலும், பல கருத்து மோதல்களுக்கும் அரசியல் சூழ்ச்சிகளுக்கும் பின்னால் போஸின் மரணம் ஒளிந்திருப்பதாக நம்பப்படும் சூழலில், அதைக் கட்டவிழ்ப்பது அரசின் கடமை. கடந்த ஏழு தசாப்தங்களாக மூடி மறைக்கப்பட்ட நேதாஜியின் ரகசியங்களை வெளிப்படுத்த இப்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி துணிந்திருக்கிறார். நேதாஜி தொடர்பான 64 கோப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். ஆனால், இந்த ஆவணங்கள் மூலமாகவும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முடியவில்லை. “எங்களைப் பின்பற்றி மோடி அரசு, போஸ் குறித்த அனைத்து ஆவணங்களையும் வெளியிட வேண்டும்” என்று கூறியிருக்கிறார் மம்தா பானர்ஜி.
மோடியும் சரி; அவர் சார்ந்திருக்கும் பாஜகவும் சரி; போஸ் மர்மங் களை வெளிக்கொணர வேண்டும் என்பதைத் தொடர்ந்து பேசிவரு பவர்கள்தான். போஸ் மரணம் எங்கே, எப்படி, எதனால் நிகழ்ந்தது? போஸ் தொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் ஆவணங்களில் உள்ள கதைகள் என்ன? அரசு இனியும் மவுனம் காக்க வேண்டியதில்லை!