

ஊரடங்கைத் தொடரும் முடிவைத் தமிழ்நாடு இனியும் நீடிக்கலாகாது என்பதை அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. மாநிலத்தை இயல்புநிலை நோக்கி வேகமாக நகர்த்துவதோடு, இந்திய அரசையும் முழுமையான ஊரடங்குத் தளர்வுக்கு வலியுறுத்த வேண்டிய கடமையும் தமிழ்நாட்டுக்கு இருக்கிறது.
கரோனா பரவலின் காரணமாக மார்ச் 24 அன்று நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட போது, கிருமி பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையோடுதான் அது முன்னெடுக்கப்பட்டது. உலகின் பல நாடுகள் அன்று இத்தகு முடிவை எடுத்தன என்றாலும், வெகுவிரைவில் இயல்புநிலை நோக்கி அவை வேகமாக அடியெடுத்தும் வைத்தன. இரண்டு முக்கியமான காரணங்கள் இதன் பின்னணியில் இருந்தன. ஒன்று, கிருமித் தொற்றை சில வாரங்களில் முற்றிலுமாகக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்ற நம்பிக்கை பொய்த்தது; இரண்டு, கிருமியால் ஏற்பட்ட பாதிப்பைக் காட்டிலும் ஊரடங்கின் விளைவாக ஏற்படும் பாதிப்பு நெடிய விளைவுகளை உண்டாக்குவதானது. இந்தியாவும் அந்த முடிவு நோக்கி வேகமாக நகர்ந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு பெரிய தொய்வு இங்கே நிலவுகிறது. முடிவுகளுக்கு மாநில அரசுகள் பொறுப்பேற்கட்டும் என்று ஒன்றிய அரசும், ஒன்றிய அரசு பொறுப்பேற்கட்டும் என்று மாநில அரசுகளும் கருதுவதும் இந்நிலைக்கு ஒரு காரணம். இரு தரப்புகளும் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி கலந்தாலோசித்து முடிவெடுத்தால், அச்ச அரசியலுக்கு முடிவு கட்டிவிடலாம். எல்லாக் கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டு பொருளாதாரம் மோசமாக சரிந்துவருகிறது என்பதையும், சமூகத்தில் மேல் தட்டுக்குக் கீழே இருப்பவர்கள் அனைவருமே இதனால் பாதிப்புக்குள்ளாகிவருகிறார்கள் என்பதையும் அரசுகள் எண்ணிப் பார்க்க வேண்டும். சராசரியாக, குடும்பத்துக்கு ஒருவரேனும் வேலையிழப்பைச் சந்தித்திருக்கிறார்கள் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
கரோனா தொடர்பில் போதிய அளவுக்கு விழிப்புணர்வுச் செய்திகள் மக்களைச் சரியான முறையில் சென்று சேர்ந்திருக்கின்றன. தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், முகக் கவசங்களை அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் அனைத்து மக்களுமே விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள். எப்போதும்போல சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவதும் நடக்கிறது. அத்துமீறல்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று யோசித்து நடவடிக்கைகளை எடுக்கலாம். ஒட்டுமொத்த செயல்பாடுகளையுமே முடக்கிக்கொள்வது அபத்தம். இந்தியாவில் இன்னும் கரோனாவுக்குத் தடுப்பூசி பரிசோதனைகள் முடிவடையாத நிலையில், அம்முயற்சி வெற்றியடைந்தாலுமேகூட அனைவருக்கும் தடுப்பூசியைக் கொண்டுசேர்க்க குறைந்தபட்சம் இரண்டாண்டுகளேனும் தேவைப்படும் என்ற நிலையில், மேலும் மேலும் மக்களை வீட்டுக்குள் முடங்கச்செய்து அவர்களைப் பட்டினி நோக்கித் தள்ளுவது கொடூரச் செயல்பாடு ஆகிவிடும். வீட்டிலிருந்தே பணிபுரிய வாய்ப்புள்ளவர்கள் தொடரட்டும். கல்வி நிலையங்களைத் திறப்பது முதல் பெரும் கூடுகைகளை நடத்துவது வரையிலான விஷயங்களை மட்டும் தள்ளிப்போடலாம். ஏனையோர் எச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் பழைய இயல்பு நிலைக்குத் திரும்பட்டும். தமிழ்நாடு தன்னுடைய தயக்கத்திலிருந்து விடுபட்டு, ஊரடங்குக்கு விடை கொடுக்கட்டும்.