Published : 27 Aug 2020 08:52 AM
Last Updated : 27 Aug 2020 08:52 AM

இலங்கையில் வேண்டும் அதிகாரப் பரவலாக்கம்

இலங்கைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையானது அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்வதற்கு மக்கள் அளித்த தீர்ப்பாகக் கருதலாம். ஆனால், தாங்கள் செய்ய விரும்பும் மாற்றம் சீர்திருத்தத்தைக் கொண்டுவருமா, முடக்கிப்போடுமா என்பதையும், அந்த மாற்றமானது ஜனநாயகத்தின் அமைப்புகளை வலுப்படுத்துமா, பலவீனப்படுத்துமா என்பதையும் வெற்றியாளர்தான் முடிவுசெய்ய வேண்டும். இலங்கையில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்ச உரையாற்றினார். எதிர்பார்த்தபடியே, அரசமைப்பின் 19-வது திருத்தம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் என்றார். ஆகவே, இலங்கை புதிய அரசமைப்புச் சட்டத்தை நோக்கி நடைபோடவிருக்கிறது. அவர் சார்ந்த எஸ்.எல்.பி.பி. கட்சி, அதன் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்றிருக்கிறது. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் நடக்கும் தேர்தல்களில் இத்தகைய வெற்றி முன்னுதாரணமற்றது.

எப்படியும், 19-வது சட்டத் திருத்தத்தை ஒழிப்பது இந்தக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான மையப்புள்ளியாக இருந்தது. ஆயினும், 19-வது சட்டத் திருத்தத்தால் கிடைத்த நன்மைகளை ஒட்டுமொத்தமாகத் தூக்கியெறிவது தேவையா என்ற கேள்வி முக்கியமானது. இந்தச் சட்டத் திருத்தம் 2015 தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சட்டத் திருத்தம் அதிபரின் வானளாவிய அதிகாரத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், இரண்டு தடவைக்கும் மேல் யாரும் அதிபராக முடியாது என்ற வரன்முறையையும் கொண்டுவந்தது; அதிபர் தன் போக்குக்கு நாடாளுமன்றத்தைக் கலைப்பதைக் கடினமாக்கியது; அதேபோல், அவசியமான கண்காணிப்பு நிறுவனங்களின் சுதந்திரத்தையும் பாதுகாத்தது.

19-வது சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறுவதன் மூலம் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட சுதந்திரமான நிறுவனங்களின் அதிகாரங்களைக் குறைத்தல் என்பது ஜனநாயகத்தின் விழுமியங்களைக் கேலிசெய்வதாகும். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தன்மை காரணமாகத்தான் பெரிதும் அமைதியான வழியில் தேர்தல் நடந்து முடிந்தது. தங்களுக்குப் பெருவெற்றி அளித்த சுதந்திரமான தேர்தலுக்கு மதிப்பு கொடுத்து, 19-வது சட்டத் திருத்தத்தை ஆளுங்கட்சி காத்திட வேண்டும். கூடவே, ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் திருத்தப்படவிருக்கும் அரசமைப்புச் சட்டம், இலங்கையின் பன்மைத்தன்மைக்கும் இணக்கமான சூழலுக்கும் உலைவைத்துவிடக் கூடாது என்பதையும் அது நினைவில் கொள்ள வேண்டும். சிறுபான்மை இனங்களைப் பற்றிய எந்தக் குறிப்பும் இலங்கை அதிபரின் உரையில் இல்லை என்பது கவனிக்க வேண்டியது. பெரும்பான்மை சிங்களர்களின் ஒப்புதல் இல்லாமல் சிறுபான்மையினருக்குச் சலுகைகள் கொடுக்க முடியாது என்ற நிலைப்பாட்டையே இலங்கை அரசியலர்கள் வெகு காலமாகக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மை மக்களின் ஆதரவை ராஜபக்சக்கள் எந்த அளவுக்குச் சார்ந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, அதிகாரப் பரவலாக்கத்தின் திசையில் இலங்கை அடியெடுத்து வைக்காது என்றே தோன்றுகிறது. அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதற்கு இனி வாய்ப்புகள் இல்லை எனும் நிலையில், குறைந்தபட்சம் மாகாணங்களுடன் போதுமான அளவு அதிகாரங்கள் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x