Published : 26 Aug 2020 07:39 AM
Last Updated : 26 Aug 2020 07:39 AM

பணியாளர் தேர்வு இனியேனும் மேம்படட்டும்

உயர் அதிகாரிகள் அல்லாதோரைத் தேர்ந்தெடுப்பதற்காகத் ‘தேசியப் பணியாளர் தேர்வு முகமை’யை உருவாக்க மத்திய அமைச்சரவை எடுத்திருக்கும் முடிவின் மூலம், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம், ஊழியர் தேர்வுக் குழு, வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் போன்றவற்றுக்குத் தனித்தனியாகத் தேர்வெழுத வேண்டிய அவசியம் களையப்படும் என்பதால், அரசின் முடிவை வரவேற்கலாம். கடந்த சில ஆண்டுகளாக, ரயில்வே துறையானது அதன் திட்டப் பணிகளிலும் சேவைகளிலும் ஒப்பந்தப் பணியாளர்களையே ஈடுபடுத்திவந்திருக்கிறது. எனினும், ரயில்வேதான் மிகப் பெரிய பணியாளர் தேர்வு முகமையாக இருந்துவருகிறது. 2019-ல் ரயில்வே துறையில் 1.43 லட்சம் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றார் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல். ஒட்டுமொத்தமாக ‘தேசியப் பணியாளர் தேர்வு முகமை’யின் கீழ் ஒரு ஆண்டுக்கு 1.25 லட்சம் பணியிடங்களுக்குப் பணியாளர் தேர்வு நடைபெறும்; இந்தப் பணியிடங்களுக்கு 2.5 கோடிப் பேர் போட்டியிடுவார்கள். இதற்கு முன்பு வெகு தூரம் பயணித்துவந்து தேர்வு எழுதுவார்கள்; நிறைய தேர்வுகளும் எழுதியாக வேண்டும். ஆனால், தற்போது ஒரு தேர்வு எழுதினாலே போதும். தேர்வர்களின் வசிப்பிடத்துக்கு அருகிலேயே, அந்தப் பிராந்தியத்தின் மொழியிலேயே தேர்வு எழுதலாம். தேர்வெழுதும் திறனை மேம்படுத்திக்கொள்ளுதல், வயது வரையறை, இவற்றில் பெறும் மதிப்பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை மதிப்பு இருத்தல் போன்றவை இதன் நேர்மறையான அம்சங்கள். எனினும், இதுபோன்ற நீண்ட நாள் பெறுமதி கொண்ட சீர்திருத்தங்கள் அரசாங்கத்தின் அக்கறையின் அடிப்படையில்தான் பலனளிக்கும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த முகமையைப் பற்றிய உத்தேசத்தை அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘தேசியப் பணியாளர் தேர்வு முகமை’யானது சுதந்திரமானதாகவும் முறையானதாகவும் நிபுணத்துவம் கொண்டதாகவும் இருக்கும் என்றார். இதன்கீழ் 117 மாவட்டங்களில் உள்ள இணையத் தேர்வுக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அக்கறை காட்டப்படும். இந்த மாவட்டங்கள் பலவும் பின்தங்கிய மாநிலங்களில் இருப்பவை. இவையெல்லாம் பாராட்டத்தக்க நோக்கங்களே. அதே சமயத்தில், மத்திய அரசு வழங்கும் வேலைவாய்ப்புகள் குறைந்துகொண்டே வருகின்றன. புதிய பணியிடங்களுக்கு அவ்வப்போது அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், பேரளவிலான காலியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. ரயில்வே துறையின் முக்கியமான சேவைகளைத் தனியார் துறையிடம் ஒப்படைத்துக்கொண்டிருப்பதால், எதிர்காலத்தில் ரயில்வே துறையில் அரசு வேலைவாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளது.

மத்திய அரசின் கீழ் உள்ள வேலைகளில் ரயில்வே துறையும் பாதுகாப்புத் துறையும்தான் பிரதானமானவை. ஆகவே, சீர்திருத்தமானது பரந்த அளவில் இருக்க வேண்டும். இது போன்ற சீர்திருத்தத்துக்குத் தெளிவாக வரையறுக்கப்பட்ட நடைமுறைகள், மக்களிடம் பரவலாக அறிவிப்பது, திறந்த போட்டிகள் போன்றவை முக்கியம். திறனறிச் சோதனை என்ற வகையில் ‘தேசியப் பணியாளர் தேர்வு முகமை’யானது அரசுச் செயல்பாடுகளுக்கே உரிய தாமதங்களைத் தவிர்க்கலாம், வெளிப்படைத்தன்மையை அதிகப்படுத்தலாம், எல்லோராலும் அணுகுவதற்கு ஏற்ற வகையில் இருக்கலாம். தேர்ந்தெடுப்பதில் உள்ள ஒட்டுமொத்த நடைமுறைகளும் துரிதம், திறமை, நேர்மை போன்றவற்றைப் பொறுத்தவரை முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x