

தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரும், இந்திய கிரிக்கெட்டின் சிறந்த அணித் தலைவர்களில் ஒருவருமான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது ஒரு பெரும் இழப்பு என்றாலும், இயல்பானது. ஆயினும், நினைவுகளில் என்றும் பதிந்திருக்கும் ஓர் ஆளுமையாகத் திகழ்வார் தோனி.
கிரிக்கெட் பரந்த ரசிகர் வட்டத்தைக் கொண்டிருந்தாலும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களிலிருந்து வந்தவர்களாகவே இருந்தனர். இதில் விதிவிலக்காக ஹரியாணாவிலிருந்து வந்த கபில்தேவ் இருந்தார். அடுத்ததாக, மிகவும் பின்தங்கிய பிரதேசமான ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து வந்த தோனியைச் சொல்லலாம். இவர்கள் இருவரும்தான் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தந்தவர்கள். தோனியின் வலிமை, உள்ளார்ந்த திறமை, நிதானம் இழக்காத தன்மை, இக்கட்டான தருணங்களில் சரியானதும் வித்தியாசமானதுமான முடிவுகளை எடுக்கும் இயல்பு போன்றவை அவரை மிகச் சிறந்த விளையாட்டு வீரராக அடையாளம் காட்டின. அவருக்கென்று ஒரு பாணி இருக்குமென்றால், அவர் என்ன செய்யப்போகிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் அவர் செயல்படுவதுதான். அப்படித்தான் யாரும் எதிர்பாராத நேரத்தில் 2014-ல் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். தற்போதும் அப்படியே சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்தும், சர்வதேச டி-20 போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார். முதல் தடவை ஓய்வை அறிவித்தபோது, அது பிசிசிஐயின் அறிவிப்பாக வெளியிடப்பட்டது; தற்போது தோனியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இந்திய அணியை உயரங்களை நோக்கிக் கொண்டுசென்றவர் தோனி. 2009-ல் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்தது. எனினும், தோனியின் மகத்துவத்தை உணர்த்தியவை ஒருநாள் போட்டிகளும், டி-20 போட்டிகளும்தான். எந்தக் கோப்பையையும் வெல்ல முடியும் என்று தன் அணியினருக்கு நம்பிக்கையை விதைத்தது, ஒரு அணித் தலைவராக அவரது பெருஞ்சாதனை. 2007 உலக டி-20 கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன் கோப்பை என்று ஐசிசியின் மூன்று கோப்பைகளை அவரது தலைமையில் இந்தியா வென்றது. உலக அளவில் இப்படி ஐசிசியின் மூன்று கோப்பைகளை வென்ற ஒரே அணித் தலைவர் தோனிதான். தனிப்பட்ட ஆட்டத்திலும் தனித்துவமான பாணியைக் கொண்டவர் அவர். கிரிக்கெட் போட்டியொன்றில் விளையாடி ஓய்வு அறிவித்திருந்தால் அது அவருக்குச் செய்த கௌரவமாக இருக்கும். மாறாக, இன்ஸ்டாகிராமில் ஓய்வை அறிவிக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. எப்படியிருப்பினும், இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்களுள் ஒருவராக எப்போதும் அவர் நினைவுகூரப்படுவார்!