Published : 18 Aug 2020 08:42 am

Updated : 18 Aug 2020 08:42 am

 

Published : 18 Aug 2020 08:42 AM
Last Updated : 18 Aug 2020 08:42 AM

கல்விக் கொள்கை மையமாக இருக்கட்டும்… அமலாக்கம் பரவலாகட்டும்!

new-education-policy

புதிய நூற்றாண்டில் இந்தியாவின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காகக் கல்வி அமைப்பையே மாற்றுவதைத் தன் இலக்காகக் கொண்டிருப்பதான பிரகடனத்துடன் அமலுக்கு வந்திருக்கிறது தேசிய கல்விக் கொள்கை. முன்னதாக, 1986-ல் வெளியிடப்பட்ட கல்விக் கொள்கைக்குப் பிறகு, இதுதான் பல்வேறு கூறுகளின் தொகுப்பாக வெளியாகியிருக்கும் முதல் கொள்கை. அமைப்பில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுடன் இது போராட வேண்டியிருக்கிறது.

தொடக்கப் பள்ளிகளில் எழுத்தறிவு, எண்ணறிவு ஆகியவற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது என்பதும், நடுநிலைப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் இடைநிற்பவர்களின் எண்ணிக்கை கணிசமானது என்பதும், அறிவுத் துறையில் பன்முகச் செயல்திட்டங்களை எதிர்கொள்வதில் உயர் கல்வி அமைப்பு பொதுவாகத் தோல்வியடைந்திருக்கிறது என்பதும் வெளிப்படையான உண்மைகள். அந்த விதத்தில் கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகளைச் சரியாகவே இந்த அறிக்கை புரிந்துகொண்டிருக்கிறது. கற்பித்தலில் உள்ள பிரச்சினைகள், அமைப்புரீதியான அநீதிகள், எல்லோருக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைப்பதில் உள்ள சீர்மையின்மை, எங்கெங்கும் கல்வி வணிகமயமாகியிருக்கும் நிலை ஆகியவற்றைச் சரிசெய்வதை இலக்காக இந்தக் கொள்கை கொண்டிருக்கிறது. ஆயினும், தீர்வுகளைப் பேசுவதற்கும் அமலாக்கத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்கும் இடையில்தான் இந்தியாவில் எந்த ஒரு விஷயமும் இடர்பாட்டை எதிர்கொள்கிறது. அந்த இடர்பாட்டை இந்தக் கல்விக் கொள்கை எப்படிக் கடக்கப்போகிறது என்பதுதான் இதன் முன்னுள்ள பெரும் சவால்.


ஒரு கூட்டாட்சி அமைப்பில், கல்வியில் கொண்டுவரும் எந்தச் சீர்திருத்தமும் மாநிலங்களின் ஆதரவோடுதான் செயல்படுத்தப்பட முடியும். ஏற்கெனவே உள்ள அமைப்பே உள்ளாட்சி அளவுக்கு அதிகாரப் பரவலாக்கத்தை நீட்டிக்க வேண்டியிருந்த நிலையில், புதிய கல்விக் கொள்கையானது மேலும் அமைப்பை மையப்படுத்த முயல்கிறது. இந்தப் புதிய கல்விக் கொள்கை எதிர்கொள்ளும் இன்னொரு பெரும் சிக்கல், அது முன்மொழியும் பல திட்டங்களுக்கும் தேவைப்படும் நிதி கிடைப்பதில் அது கொண்டிருக்கும் உறுதியான நம்பிக்கை. பெரும் செலவு பிடிக்கும் திட்டங்களை அமலாக்குவதற்குக் குறைந்தது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 6% நிதியைக் கல்விக்கான ஒதுக்கீடாக நம்முடைய அரசு ஒதுக்க வேண்டும். நாட்டின் முதலாவது கல்விக் கொள்கையை வகுத்த கோத்தாரிக் குழு தொடங்கி, இந்த நம்பிக்கை அரசால் உத்தரவாதப்படுத்தப்படாதது என்கிற வரலாற்றையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.

மூன்று வயதிலிருந்து குழந்தைகளுக்குக் கல்வியைத் தொடங்குதல், மனப்பாடக் கல்வியிலிருந்து மாறுவது, கணிதத் திறனை மேம்படுத்துவது, தாய்மொழிவழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்ற முடிவுகள் இந்தக் கொள்கையில் உள்ள பெரும் மாற்றங்கள் ஆகும். பரப்பளவில் பெரிதாகவும் பன்மைத்துவம் மிக்கதாகவும் மக்கள் அதிக அளவில் இடம்பெயர்வதாகவும் இருக்கும் ஒரு நாட்டில், அந்த இடப்பெயர்ச்சிக்கு உதவும் ஒரு மொழியைப் படிப்பதற்கான தெரிவு மாணவர்களுக்கு இருக்க வேண்டும். அந்தப் பாத்திரத்தை வரலாற்றுக் காரணங்களை முன்னிட்டு ஆங்கிலம் வகித்துவருகிறது. ஆங்கிலத்தையும் இந்திய மொழியாகக் கருதும் நிலை நோக்கி நாம் நகர்வது முக்கியம். அறிக்கை கொண்டிருக்கும் அருமையான விஷயங்களில் ஒன்று, மதிய உணவுடன் ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவும் வழங்கி, அதன் மூலம் குழந்தைகளின் கல்வித் திறனை மேம்படுத்துவது என்பது ஆகும். ‘உள்ளடக்குதலுக்கான நிதி’யை உருவாக்கி, அதன் மூலம் சமூகரீதியிலும் கல்விரீதியிலும் பின்தங்கியிருக்கும் குழந்தைகள் நல்ல முறையில் கல்வி கற்க உதவுவதும் இன்னொரு நல்ல விஷயம். இவையெல்லாம் சாத்தியம் ஆக அரசு உரிய நிதியைத் தாராளமாக ஒதுக்கிடல் வேண்டும். கல்வித் துறையில் தனியார் பங்களிப்பை ஆக்கபூர்வமாக அணுகுவது நல்ல விஷயம் என்றாலும், கல்வியை முழு வணிகம் ஆக்கிடும் இன்றைய கட்டணக் கொள்ளைக் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டுவதற்குத் தீவிரமான நடவடிக்கைகளுக்கான கல்விக் கட்டண ஒழுங்காற்று அமைப்பை அரசு உருவாக்க வேண்டும். உச்சபட்சக் கட்டுப்பாட்டைச் செலுத்தும் நிறுவனமாகத் தேசிய உயர் கல்வி ஒழுங்காற்றுக் குழு உருவாக்கம் என்பதில் தொடங்கி, தேசிய அளவிலான திறனறித் தேர்வுகள் என்பது வரையிலான யோசனைகளில் நாம் சொல்ல வேண்டியது ஒன்றுதான் இருக்கிறது: நாட்டுக்கான இலக்குகளை மையப்படுத்துங்கள்... நல்லது; அமலாக்கத்தை உள்ளூர்மயப்படுத்துங்கள், அதிகாரங்களைப் பரவலாக்குங்கள். அதுவே இலக்கை அடைய வெற்றிகரமான வழி!


கல்விக் கொள்கைஅமலாக்கம் பரவலாகட்டும்!New education policy

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x