

சூடானின் டார்ஃபர் பகுதியில் 60-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டது முதலாகத் தொடர்ந்து வரும் பதற்றம் உலகெங்கும் உள்ள சமாதான விரும்பிகளிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நாட்டின் சர்வாதிகாரி உமர் அல்-பஷீர் ஆட்சியை விட்டு அகற்றப்பட்ட பிறகு, தொடர்ந்து வன்முறையால் பீடித்திருக்கும் அந்தப் பிரதேசத்தில், தற்போதைய படுகொலைகளால் நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது. அரசுக்கும் நிலவுடைமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்துக்குப் பிறகு தெற்கு டார்ஃபருக்குத் திரும்பிவந்த விவசாயிகளின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலும் இந்த வன்முறைச் செயல்களில் அடங்கும். அதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். அதற்கும் சில நாட்களுக்கு முன்பு வடக்கு டார்ஃபர் பகுதியைச் சேர்ந்த சிறிய நகரமொன்றில் போராட்டக்காரர்கள் ஒரு காவல் நிலையத்தையும் வாகனங்களையும் தீக்கிரையாக்கிய பிறகு, சூடான் வடக்கு டார்ஃபரில் நெருக்கடி நிலையை அறிவித்தது.
அந்த நாட்டின் ஆதிக்க அரபு ஆட்சியாளர்களுக்கும், சூடானிலிருந்து பெரிய அளவுக்குத் தன்னாட்சியைக் கோரும் ஆப்பிரிக்க இனக்குழுக்களுக்கும் இடையிலான மோதல்களால் சின்னாபின்னமடைந்திருக்கும் டார்ஃபரில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவங்கள் வலியுறுத்துகின்றன. அரசு மீதான எதிர்ப்பின் மையப் பிரதேசமாக டார்ஃபரின் நெர்ட்டிட்டி நகரம் இருக்கிறது. இன அழிப்புக்கும் டார்ஃபரில் நடந்த கொடுமைகளுக்கும் காரணமான பஷீரைச் சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுவருகிறது. இந்தக் கேள்வியைப் பொறுத்தவரை சில உயர்நிலை அதிகாரிகள் இதற்கு இணங்கினாலும் பஷீர் மட்டுமல்லாமல், அவருக்கு நெருக்கமானவர்களும் தண்டிக்கப்படும் ஆபத்து இருப்பதாக இந்தத் தற்காலிக அரசாங்கத்தில் உள்ள சில ராணுவ அதிகாரிகள் அச்சப்படுகின்றனர். இதற்கிடையே, கார்ட்டோம் சிறையில் உள்ள பஷீரை நாடுகடத்துவது என்பது அந்த அரசு மேற்குலகுடனான உறவை மீட்டெடுத்துக்கொள்ளவும், பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டு முதலீடுகளை ஈர்க்கவும் வழிவகை செய்யும்.
சூடான் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் என்றும், ஜனநாயகத்துக்கும் சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் கிடைக்க வேண்டும் என்றும் சூடான் நாட்டின் இளைஞர்கள் ஏங்குகிறார்கள். இந்தப் பிரச்சினையானது ராணுவத்துக்கும் அரசுக்கும் இடையிலான பலவீனமான உறவையும், எல்லோரும் பங்கேற்கக்கூடிய ஜனநாயகத்தை நோக்கிய முன்னேற்றத்தையும் கடுமையாகச் சோதித்துப்பார்க்கக் கூடியது. எப்படியிருந்தாலும் சூடானின் மேற்குப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதென்பது கடந்த ஆண்டிலிருந்து அங்கே தளிர்த்துவரும் ஜனநாயகத்துக்கு மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்கும். வன்முறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதே சூடானின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். இயல்புநிலையை மீட்டெடுப்பது ஒன்றே ஜனநாயகரீதியில் தேர்தல் நடத்துவதற்கு சரியான வழி.