

நான்கு தசாப்தங்களுக்கும் மேலே மலேசிய அரசியலில் மிகவும் சக்திவாய்ந்த குரல்களுள் ஒருவராக இருந்த நஜீப் ரஸாக் மீது 7 ஊழல் வழக்குகளில் குற்றவாளி என்று விசாரணை நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்திருப்பது அவரது அரசியல் வாழ்க்கைக்குப் பெரும் பின்னடைவு. நிதி ஊழல் தொடர்பான வழக்கு அது. அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 கோடி டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. 2009-ல் அவர் பிரதமராக இருந்தபோது உருவாக்கிய முதலீட்டு நிதியம்தான் 1எம்டிபி. அதிலிருந்து பல நூறு கோடி மதிப்பிலான டாலர்கள் பணத்தை அந்த நிதியத்தின் ஊழியர்களும் அரசு ஊழியர்களும் கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. ஒரு பிரம்மாண்டமான பாய்மரக் கப்பல், ஒரு பிக்காஸோ ஓவியம், ‘தி வூல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் போன்றவற்றுக்கெல்லாம் அந்தப் பணம் சென்றிருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. அவருடைய வங்கிக் கணக்கில் நூறு கோடி டாலர் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளால் அவருடைய ‘யுனைட்டர் மலாய்ஸ் நேஷனல் ஆர்கனைசேஷன்’ கட்சி 2018-ல் நடந்த தேர்தலில் முதன்முறையாகத் தோல்வி அடைந்தது.
தெற்காசிய நாடான மலேசியா, அரசியல் ஸ்திரமின்மையை எதிர்கொண்டு தத்தளிக்கும் நேரத்தில், இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது. முஹையிதீன் யாஸின் தலைமையிலான புதிய அரசுக்கு நாடாளுமன்றத்தில் மிகக் குறைவான பெரும்பான்மையே இருக்கிறது. இந்த அரசு நஜீபுக்கு உதவ முயல்கிறது என்று அன்வர் இப்ரஹிம் தலைமையிலான எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியது. கடந்த மே மாதத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நஜீபின் வளர்ப்பு மகனான ரிஸா அஸீஸுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு, நஜீபுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொண்டனர். இதனால், அரசியல்ரீதியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
நஜீப் குற்றவாளி என்று தீர்ப்பு வந்திருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரலாம். நஜீபின் ‘யுஎம்என்ஓ’ கட்சியின் 39 எம்பிகள் இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்கிறார்கள். இன்னும் வேறு பல வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் நஜீபை முஹையிதீன் கைவிட்டார் என்றால், ‘யுஎம்என்ஓ’ கட்சியிடமிருந்து அவர் எதிர்ப்பைச் சந்திக்க நேரிட்டு, ஆட்சி கவிழும். விசாரணையில் அவர் தலையிட்டால், அது எதிர்க்கட்சிகளுக்கு வலுசேர்த்து பிரதமருக்கு ஆபத்தாக ஆகிவிடும். முஹையிதீன் சட்டத்தை நிலைநிறுத்தி, நீதித் துறையின் சுதந்திரத்தை மதித்து, நஜீபிடமிருந்து விலகி இருப்பதுதான் நியாயமாக இருக்கும். ஆனால், அப்படிச் செய்தால் அவர் தனது அரசாங்கத்தை இழக்கும் ஆபத்து இருக்கிறது என்றே அர்த்தமாகும். எப்படிப் பார்த்தாலும் மலேசியாவுக்கு இது சிக்காலான காலம் ஆனால், நீதியின் பக்கமே அரசு நிற்க்க வேண்டும்.