கேள்விக்குள்ளாகும் ஜிஎஸ்டி

கேள்விக்குள்ளாகும் ஜிஎஸ்டி
Updated on
1 min read

மாநிலங்களின் இறையாண்மையையும், வரி விதிப்புச் சாத்தியங்களையும் குறுக்கிடும் முறைமையாக விமர்சிக்கப்பட்டுவந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இந்தக் கொள்ளைநோய்க் காலகட்டத்தில் அதன் முழு பலவீனத்தையும் வெளிப்படுத்துகிறது. கரோனா விளைவாகக் கடுமையான நிதிச் சுமையை எதிர்கொள்ளும் மாநிலங்களின் கஷ்டத்தை ஜிஎஸ்டி வழியாகக் கொஞ்சமேனும் குறைக்க முடியுமா என்ற மாநிலங்களின் முறையீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான சமிக்ஞைகளை டெல்லி வெளிப்படுத்துவது இந்த வரிவிதிப்பு முறையில் உள்ள ஓட்டையையே காட்டுகிறது.

மாநிலங்களுக்கு ஏற்படும் ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்புக்கான கடந்த நிதியாண்டு நிலுவையையே கடந்த வாரத்தில்தான் இந்திய அரசால் கொடுக்க முடிந்தது. 2020 மார்ச் மாதத்துக்குரிய கடைசி தவணை ரூ.13,806 கோடியை டெல்லியிடமிருந்து பெற்றபோது, மாநிலங்களால் ஆசுவாசம் அடைய முடியவில்லை. ஏனென்றால், இந்த நிதியாண்டில் ஒரு காலாண்டு கடந்துவிட்ட நிலையில் மாநில அரசுகள் இந்த நிதியாண்டுக்கான நிதிக் கவலையில் ஆழ்ந்தன. புதிய நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரலிலிருந்து ஜிஎஸ்டி நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. ‘நான்கு மாத ஜிஎஸ்டி நிவாரணத் தொகை என்பது தங்கள் மாநிலத்தின் அரசு ஊழியர்களின் இரண்டு மாதச் சம்பளம்’ என்று பஞ்சாப் கூறியிருப்பதிலிருந்து மாநிலங்களுக்கு இந்தத் தொகை எவ்வளவு அவசியம் என்பதை உணரலாம். வங்க முதல்வர் மம்தா உள்ளிட்டோர் இது தொடர்பில் பிரதமருக்குக் கடிதமும் எழுதியிருந்தனர். இத்தகு சூழலில்தான், ‘இனி வரும் காலத்தில் இந்தத் தொகையை இதே விகிதத்தில் செலுத்த முடியாது’ என்று நிதியமைச்சகத்தின் முக்கியமான அதிகாரிகள் பொருளாதார நிலைக்குழுவிடம் கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

2017 ஜூலையில் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டபோது, மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு தனது நிதியிலிருந்து இழப்பை ஈடுகட்டும் என்ற உறுதிமொழி தரப்பட்டது. மாநிலங்களின் வரி வருவாய் ஆண்டுதோறும் சராசரியாக 14% உயரும் என்று கணக்கிட்டு அப்படி அறிவிக்கப்பட்டது. அதற்கு 2015-16-ம் நிதியாண்டு வருவாய் அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக கரோனாவுக்கு முன்னரே வரி வருவாய் குறைய ஆரம்பித்திருந்தது. கரோனாவுக்குப் பின் ஒன்றிய அரசு – மாநில அரசுகள் இரு தரப்புமே வருவாய் இழப்பைச் சந்தித்தன. விளைவு, மாநில அரசுகளுக்கான நிதிப் பகிர்வில் எதிரொலிக்கிறது.

இந்த நிதியாண்டு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். கரோனா நெருக்கடியால் ரூ.8.24 லட்சம் கோடி அளவுக்கு மாநிலங்கள் கடனாளியாகும் நிலை ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. இப்படியான சூழலில், ‘ஐந்து ஆண்டுகள் ஜிஎஸ்டி நிவாரணத் தொகை வழங்கப்படும்’ என்று கூறிவிட்டு, முன்கூட்டியே நிறுத்திக்கொள்வதானது மாநிலங்களை நட்டாற்றில் கைவிடுவதாகும். எதிர்பாராத இடர்கள் உண்டாக்கும் இழப்புகளைப் பிரத்யேகமான வரிகளால் எதிர்கொள்வதே வரி விதிப்பு இறையாண்மையின் முக்கியமான அம்சம். டெல்லி அந்தச் சாத்தியத்தை மீண்டும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். ஜிஎஸ்டியை மறுவரையறுக்க இதை ஒரு தருணமாகக் கருத வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in