Published : 29 Jul 2020 08:13 AM
Last Updated : 29 Jul 2020 08:13 AM

மில்லியனைக் கடந்த தொற்று நமக்குச் சொல்வது என்ன?

இந்தியாவில் கரோனா 15 லட்சம் தொற்றாளர்களை நெருங்கி சென்றுகொண்டிருப்பது எதிர்பாராதது அல்ல; ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் பரிசோதனைகளைக் கையாள்வதில் பிரத்யேகமான ஒரு அணுகுமுறையைக் கண்டறியாமல், அரசுகள் தடுமாறுவது பெரும் கவலையைத் தருகிறது. ஜூலை 16 அன்று வரை உறுதிசெய்யப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொட்டது; மரண எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தொட்டது. ஒரு லட்சம் தொற்றுகள் ஏற்படுவதற்கு 109 நாட்கள் ஆனதென்றால், அது இரட்டிப்பாவதற்கு 15 நாட்களே பிடித்தன. கூடுதலாக, ஒவ்வொரு லட்சம் தொற்றுக்களுக்கான நாட்களும் சுருங்கிக்கொண்டே வருகின்றன. 8 லட்சத்திலிருந்து 10 லட்சத்தை எட்டுவதற்கு ஆறு நாட்களே ஆகியிருக்கின்றன. பரிசோதனைகள் அதிகரித்திருப்பதால் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் தொற்றுகள் கூடுதலாகக் கண்டறியப்படுகின்றன. அதே நேரத்தில், சந்தேகமில்லாமல் சமூகப் பரவல் ஏற்பட்டுவிட்டதும் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணமாகும்.

பரிசோதிக்கப்படுபவர்களில் 10.3% தொற்றாளர்கள் என்ற அளவுக்குப் பரிசோதனை முடிவுகள் வரும் சூழலில், அது சொல்லும் செய்தி ஒன்றுதான்; சமூகத்தில் கணிசமானோர் தொற்றால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், இன்னும் நிறையத் தொற்றாளர்கள் கண்டறியப்படவில்லை. தினமும் சராசரியாகச் செய்யப்படும் பரிசோதனைகள் மூன்று லட்சத்தைத் தாண்டியிருந்தாலும், பரிசோதனைகளின் எண்ணிக்கையைப் பல மடங்கு மேலும் அதிகரிக்க வேண்டிய அவசியம் இங்கிருந்தே எழுகிறது. தொற்றாளர்களைக் கண்டறிதல், பரிசோதித்தல், தனிமைப்படுத்துதல், தொடர்புகொண்டவர்களைக் கண்டறிதல் என்கிற வகைமையில் ஏற்படும் தாமதம் திடீர் பேரலைப் பெருக்கத்துக்கு வழிவகுக்கும்.

எந்தக் கட்டத்திலும் நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என்ற நம்பிக்கையை தாராவி உதாரணம் நமக்குச் சொல்கிறது. ஆனால், அதற்கு கரோனாவை எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர, தரவுகளை மறைப்பதற்குப் போராடக் கூடாது. குஜராத், தெலங்கானா போன்ற மாநிலங்கள் தொற்று எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காக அப்பட்டமாகவே குறைந்த அளவே பரிசோதனையை நடத்துவது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. பரிசோதனைச் செலவுகள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு ஒரு தடையாக இருக்கும் சூழலில் யாருக்குப் பரிசோதனைகளில் முன்னுரிமை என்கிற அணுகுமுறையை அரசு வகுக்கலாம். அதேபோல, சிகிச்சையிலும் தொடர் வீட்டுக் கண்காணிப்பு மற்றும் கவனம் அளித்தலிலும் பெரியோர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். சீக்கிரமே இந்த ஊரடங்குச் சூழலிலிருந்து வெளியேறவும், அதே சமயத்தில் கிருமித் தொற்றை முன்பைக் காட்டிலும் தீவிரமாகக் குறைக்கவும் வித்தியாசமான அணுகுமுறைகளை நாம் சிந்திக்க வேண்டும். குளிர் காலம் நெருங்கும் சூழலில், கிருமி போன போக்கில் நாம் சென்றுகொண்டிருந்தால் பெரும் விலையை இனிதான் நாம் கொடுக்க வேண்டியிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x