

சில மாதங்களுக்கு முன் மத்திய பிரதேசத்தில் நடந்ததைப் போல, தற்போது ராஜஸ்தானிலும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கான தொடர் அறிகுறிகள் தென்படுவது மோசமான விஷயம். ஒரு கொள்ளைநோயை எதிர்கொண்டுவரும் சூழலில் நாட்டின் பெரிய மாநிலம் ஒன்றில் நடக்கும் அரசியல் ஸ்திரமின்மை ஆட்டம் மக்கள் நலனை எல்லோருமே பின்னுக்குத் தள்ளிவிடுகின்றனர் என்கிற செய்தியையே சொல்கிறது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராகப் போர்க் கொடியை உயர்த்திய சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியிலிருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார். ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதி செய்ததாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோர் மீது அரசைக் கவிழ்ப்பதற்குச் சதிசெய்ததாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. சச்சின் பைலட் உள்ளிட்ட 19 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை என்ற காரணத்தின் அடிப்படையிலேயே அவர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் காங்கிரஸுக்கு எதிராக எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை என்று கோரியிருப்பதன் அடிப்படையில் அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. அதற்கு முன்பாக, உறுப்பினர்கள் பதவி நீக்க விவகாரத்தில் சட்டமன்றத் தலைவரின் முடிவில் தலையிடுவதற்கு உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. சட்டமன்றத்தைக் கூட்டி தனக்குப் பெரும்பான்மை ஆதரவு உள்ளதை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்ற அசோக் கெலாட்டின் கோரிக்கையையும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா கண்டுகொள்ளவில்லை. சட்டமன்ற மாண்புகள் குலைவதை அரசின் மற்ற அங்கங்களான நிர்வாக, நீதித் துறைகளும்கூட அமைதியாக வேடிக்கை பார்க்கவே செய்கின்றன.
ராஜஸ்தானில் காங்கிரஸ் இம்முறை ஆட்சியைக் கைப்பற்ற கட்சியின் மாநிலத் தலைவராகச் செயலாற்றிய பைலட்டின் திறன்மிகு தேர்தல் பணிகளும் முக்கியமான ஒரு காரணம். முதல்வர் பதவியை அவர் எதிர்பார்த்தார். ஆயினும், இளையவரான அவர் கொஞ்ச காலம் காத்திருக்கலாம் என்று கருதி மூத்த தலைவரான அசோக் கெலாட்டிடம் ஆட்சியை ஒப்படைத்தது காங்கிரஸ் தலைமை. இளையவரை மூத்தவரால் அரவணைத்துச் செல்ல முடியவில்லை. இளையவருக்குக் காத்திருக்க முடியவில்லை. காங்கிரஸ் மோசமாக எதிர்கொள்ளும் மூத்த தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையிலான யுத்தத்தின் ஒரு அத்தியாயம்தான் இது என்றாலும், ஆட்சிக் கவிழ்ப்பு அளவுக்கு நிலைமை மோசமாக பாஜகவே காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் எல்லாம் ஆட்சியைக் கவிழ்க்க அது காத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு நியாயமற்றது அல்ல. மக்கள் நிலைகுலைந்து நிற்கும் இந்நாட்களில்கூட இத்தகு மோசமான சூழல் ஏற்பட, காங்கிரஸ், பாஜக இரு தரப்பிலுமே யாரெல்லாம் காரணமோ அவர்கள் எல்லோருமே கடும் கண்டனத்துக்கு உரியவர்கள் ஆகிறார்கள். எல்லோருமாக சேர்ந்து ஜனநாயகத்தை வீழ்த்துகிறார்கள்.