

திரையரங்குகளில் கட்டாயமாக இலவசக் குடிநீர் வழங்கப்பட வேண்டும் என அறிவித்திருக்கிறது தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம். திரையரங்கு களில் அதிக விலைக்கு விற்கப்படும் குடிநீர் பாட்டில்களை வாங்குமாறு நுகர்வோரை வற்புறுத்துவது குற்றம் என்றும் அது தெரிவித்திருக்கிறது.
வெவ்வேறு சமூக அடுக்குகளைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து ஒரு நிகழ்ச்சியைக் கண்டுகளிப்பதற்குச் சாத்தியமில்லாத சூழல் நிலவிய காலத்தில், அதை முற்றிலுமாகத் தகர்த்தெறிந்தவை திரையரங்குகள்தான். சாதிய, பொருளாதார வேறுபாடுகளையும் தாண்டி பல்வேறு தரப்பு மக்கள் ஒரே இடத்தில் கூடி கலைப்படைப்புகளை ரசிக்க வைத்ததில் திரையரங்குகளின் பங்கு மகத்தானது.
ஆனால், காலப்போக்கில் மல்டிஃபிளெக்ஸுகள் எனும் அதிநவீன சினிமா அரங்குகள் தோன்றிய பிறகு, பொருளாதார வேறுபாடுகளுக்கான இடமாகத் திரையரங்கம் மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழத் தொடங்கிவிட்டது. இன்றும் ரூ.10-க்கு முதல் வரிசை டிக்கெட்டுகள் விற்கப்பட்டாலும் கூடவே ரூ.120-க்கான உணவைக் கட்டாயம் வாங்க வேண்டும் என்ற நிலை பல மல்டிஃபிளக்ஸ் திரையரங்குகளில் உள்ளது. மேலும், வெளியிலிருந்து குடிநீர் கூட அனுமதிக்கப்படுவதில்லை. திரையரங்கின் உணவரங்குகளில் கிடைக்கும் குடிநீர் பாட்டில்களும் வெளியில் விற்கப்படுவதைவிட அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த ஆண்டு திரிபுரா மாநிலம் அகர்தாலா நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில், குடிநீரைக் கொண்டுசெல்வதற்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, அம்மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஆணையம், புகார்தாரருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் எதிர்த்து சம்பந்தப்பட்ட திரையரங்கு நிர்வாகம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அம்மனுவை விசாரித்த நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையிலான ஆணையம், “திரையரங்குகளுக்குக் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் வருகின்றனர். குடிநீர் இன்றி மூன்று மணி நேரம்வரை இருப்பதென்பது கடினமான ஒன்று. சரியான நேரத்தில் குடிநீர் கிடைக்காதபட்சத்தில் மயக்கமடையும் நிலைகூட ஏற்படலாம். வெளியிலிருந்து குடிநீர் அனுமதிக்காத பட்சத்தில், அது சேவைப் பற்றாக்குறையாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும்” என தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
மேலும், திரையரங்கு செயல்படும் நேரம் முழுவதும், குடிநீர் சுத்திகரிப்பான்கள், குளிர்விப்பான்கள், ஒருமுறை பயன்படுத்தும் டம்ளர்கள் உள்ளிட்டவை கட்டாயம் சரிவர அமைக்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் தண்ணீர் வரத்து தடைப்பட்டால், உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்துதரப்பட வேண்டியது திரையரங்க நிர்வாகத்தின் பொறுப்பு. இந்த நடவடிக்கைகளை நடைமுறைக்குக் கொண்டுவரத் தவறினால், சேவைக் குறைபாடு காரணமாக நுகர்வோருக்கு திரையரங்கு இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும் என்று அந்த ஆணையம் தெரிவித்திருக்கிறது.
குடிநீர் அடிப்படைத் தேவை என்பதாலும், திரையரங்குக்கு வருபவர்கள் அனைவரும் அதிகப் பணம் செலவழித்து குடிநீர் வாங்க முடியாது என்பதாலும் இத்தகைய உத்தரவு அளிக்கப்பட்டிருக்கிறது. திரையரங்குக்கு வரும் ரசிகர்களை ஒரு ஏடிஎம் போலப் பார்க்கும் மோசமான காலாச்சாரத்துக்கு இது ஒரு நல்ல அடி. சென்னையைப் பொறுத்தவரை இந்த உத்தரவை நிறைவேற்றுவதில் ஆட்சேபணை இல்லை என்றே நகரின் முக்கியத் திரையரங்குகளின் உரிமையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இது வரவேற்கத் தக்க விஷயம். ஏனெனில், தாங்கள் நடத்தும் திரையரங்குகளில் திரைப்படங்களை ரசிக்க வரும் பொதுமக்களின் நலன்மீது அக்கறை செலுத்துவது திரையரங்கு உரிமையாளர்களின் தார்மிகக் கடமை!