Published : 09 Sep 2015 08:41 AM
Last Updated : 09 Sep 2015 08:41 AM

காலத்துக்கேற்ற நல்ல முடிவு!

இதுவரை பயன்படுத்தப்படாத 69 சிறிய, விளிம்புநிலை எண்ணெய் வயல்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது எனும் முடிவை எடுத்திருக்கிறது மத்திய அரசு. இந்த அணுகுமுறை, எண்ணெய் வளத்தை அதிகப்படுத்துவதுடன் வேலைவாய்ப்பையும் அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும். இந்த வயல்களை உள்நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் குத்தகைக்கு விடும் முடிவை மத்திய அமைச்சரவை எடுத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, லாபம் வந்தால் அதைப் பகிர்ந்துகொள்வது எனும் நிலைப்பாட்டுக்குப் பதிலாக, வருவாய் என்ன வந்தாலும் அதைப் பகிர்ந்துகொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. லாபத்தைப் பகிர்ந்துகொள்வது என்றால், அந்நிறுவனத்தின் எல்லா வரவு - செலவுகளையும் நுணுகி ஆய்ந்து கண்டுபிடிக்க வேண்டும். இதனால் அரசுக்குப் பணம் கிடைப்பதில் காலதாமதம் ஆகலாம். ஆனால், வருவாயில் பங்கு என்பது எளிதானது, விரைவானது.

புதிய திட்டப்படி, கச்சா பெட்ரோலிய எண்ணெய் அல்லது இயற்கை நிலவாயு என்று எது கிடைத்தாலும் அதைச் சந்தை விலைக்கு விற்றுக்கொள்ளலாம். அரசு அதில் தலையிடாது. வருவாய் மற்றும் ராயல்டி தொகை, சந்தை விலையையே அடிப்படையாகக்கொண்டிருக்கும். சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு நிறுவனங்கள் விற்க நேர்ந்தாலும், சந்தை விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ராயல்டி தொகையை அரசு தொடர்ந்து பெற முடியும். சந்தை விலையைவிட அதிக விலைக்கு விற்க முடிந்தால், அதிக விற்பனை விலையின் அடிப்படையிலான வருவாய் அரசுக்குக் கிடைக்கும். எனவே, எப்படிப் பார்த்தாலும் அரசுக்கு லாபம்தான்.

ஏற்கெனவே இருக்கும் நடைமுறையின்படி, ஒரு வயலில் வெவ்வேறு வகை புதைபடிமப் பொருட்களை எடுக்க வெவ்வேறு உரிமங்கள் வாங்க வேண்டும். இப்போது, நிலத்திலிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய், இயற்கை நிலவாயு, பாறைக்கு அடியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மற்றும் நிலவாயு (ஷேல் முறை) அனைத்துக்கும் ஒரே உரிமம்தான். இதனால், எண்ணெய் துரப்பணத் தொழிலில் உற்பத்தி, வர்த்தகத்தை அதிகரிப்பது என்ற லட்சியம் எளிதில் நிறைவேறும். இந்த 69 எண்ணெய் வயல்களில் சுமார் ரூ. 70,000 கோடி மதிப்புள்ள இயற்கை எண்ணெய், வாயு வளங்கள் இருப்பதாக எண்ணெய் அமைச்சகம் மதிப்பிட்டிருக்கிறது. இப்போது கச்சா பெட்ரோலிய எண்ணெய் சர்வதேசச் சந்தையில் ஒரு பீப்பாய் 45 டாலர்களாக இருக்கிறது. இந்த எண்ணெய் வயல்களிலிருந்து ஆண்டுக்கு ரூ.3,500 கோடி மதிப்புக்கு எண்ணெய், நிலவாயு எடுக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

2014-15-ம் நிதியாண்டில் இந்தியா இறக்குமதி செய்த பெட்ரோலியப் பண்டங்களின் மதிப்பு மட்டும் ரூ.7.6 லட்சம் கோடியாகும். இத்துடன் ஒப்பிடும்போது, ரூ.3,500 கோடி என்பது வாளித் தண்ணீரில் ஒரு சொட்டு போலத்தான். எனினும், சிறுதுளிதானே பெரு வெள்ளத்துக்கு வழிவகுக்கும்!

இப்போதைக்கு இந்த முயற்சி 69 சிறிய எண்ணெய் வயல்களுக்குத் தான் என்றாலும், இது மேலும் விரிவுபடுத்தப்படும் என்று நம்பலாம். இந்தியாவில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தி மந்த நிலையை அடைந்திருக்கிறது, இயற்கை நிலவாயு உற்பத்தி சுருங்கிக் கொண்டே வருகிறது. இந்தச் சூழலில், எண்ணெய் உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருப்பது நம்பிக்கையூட்டுகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x