

கன்னட அறிஞர் எம்.எம். கல்புர்கி படுகொலை அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் தருகிறது.
தமிழகத்தைப் போலவே கர்நாடகத்திலும் பகுத்தறிவு இயக்கம் வலிமையானது. சாகித்திய அகாடமி விருது பெற்றவரான கல்புர்கி, வசன இலக்கியத்தில் கரைகண்ட நிபுணர். பகுத்தறிவாளரான கல்புர்கி மூட நம்பிக்கைகளுக்கும் மூடப் பழக்கவழக்கங்களுக்கும் எதிராகத் தொடர்ந்து பேசியும் செயல்பட்டும்வந்தவர். பொதுப்புத்தியில் கலாச்சாரம் என்று உறைந்துவிட்ட பல விஷயங்களுக்கு எதிராகவும்கூட அவருடைய பேச்சு களும் எழுத்துகளும் தொடர்ந்து எதிர்வினையாற்றின. இந்தக் காரணத் தாலேயே பலரால் நேசத்துடனும் சிலரால் கோபத்துடனும் பார்க்கப்பட்டார்.
கல்புர்கியைக் கொல்லப்போவதாக ஒரு சிறு அமைப்பின் தலைவர் கடந்த ஆண்டு எச்சரித்திருந்தார். இதையடுத்து, 2014 ஜூன் முதல் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டிருந்தது. அந்தப் பாதுகாப்பு வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன்னால் அவர் எழுத்துபூர்வமாகத் தெரிவித்து, போலீஸ் பாதுகாப்பை விலக்கிவிட்டார். பொதுத்தளத்தில் விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு இவை இரண்டுமே பழக்கப்பட்டவை என்பதால், கல்புர்கி இத்தகைய மிரட்டல்களையெல்லாம் ஒருநாளும் தீவிரமாக எடுத்துக்கொண்டதில்லை.
இப்போது அவரைக் கொன்றவர்கள் யார், கொலைக்குக் காரணம் என்ன என்று இன்னும் நிச்சயமாகத் தெரியாவிட்டாலும், யாரெல்லாம் இதன் பின்னணியில் இருப்பார்கள் என்பதை யூகிப்பதில் காவல் துறையினருக்குப் பெரிய பிரச்சினைகள் இல்லை. கல்புர்கியை நன்கறிந்த பலரும் கை நீட்டுவதும் அந்தத் திசை நோக்கித்தான். இன்னார்தான் கொன்றார்கள், இந்த அமைப்புதான் காரணம் என்று அவசரப்பட்டு முத்திரை குத்துவது கூடாது என்றாலும், சில அமைப்புகளின் செயல்பாடுகளையும் அவை தொடர்புள்ள சில நிகழ்ச்சிகளையும் பார்க்கும்போது அனுபவங்களின் அடிப்படையில் சிலர் மீது சந்தேகம் ஏற்படுகிறது. இச்சம்பவத்துக்குப் பிறகு, அடுத்த இலக்கு கன்னட எழுத்தாளர் கே.எஸ். பகவான் என்று ட்விட்டரில் கருத்து வெளியிட்ட ‘பஜ்ரங் தள்’ ஆதர வாளர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். சமூக வலை தளங்கள் வழியே வெறுப்பு நெருப்பு எப்படியெல்லாம் பரப்பப்படுகிறது என்பதற்கு மேலும் ஓர் உதாரணம் இது.
அறிஞர் ஒருவர் இப்படிக் கொல்லப்படுவது கர்நாடகத்தில் இதுவே முதல் முறை என்றாலும், அவர்களுக்கு அருகில் உள்ள மகாராஷ்டிரத்தில் சில முன்னுதாரணங்கள் இருக்கின்றன. பகுத்தறிவு எழுத்தாளர் நரேந்திர தபோல்கர் 2013-லும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவிந்த பன்சாரே 2015-லும் கொல்லப்பட்டனர். இந்த மூன்று படுகொலைகளிலும் கொலைகாரர்கள் இளைஞர்கள், இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். வெகு அருகில் இருந்து கொலைசெய்திருக்கின்றனர். முதல் கொலை நடந்தவுடனேயே தீவிரமாகத் துப்புத்துலக்கி கொலையாளிகளையும் அவர்களை ஏவிவிட்ட சதிகாரர்களையும் பிடித்துத் தண்டித்திருந்தால், இது தொடர்கதையாக மாறியிருக்காது.
பொதுவாக, நம் சமூகத்தில் எழுத்தாளர்கள் விளிம்புநிலையினர். நம்மூரில் ஒரு தெருவில் முண்டா தட்டும் ஒரு சாதியவாதிக்கோ, மதவாதிக்கோ உள்ள பராக்கிரமம், படைபலம் எழுத்தாளர்களுக்கு இங்கே கிடையாது. ஆனால், அவர்கள்தான் இந்த சமூகத்தை அடுத்த தளம் நோக்கி நகர்த்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களில் முக்கிய இடத்தில் இருக்கிறார்கள். பேச்சுரிமையும் எழுத்துரிமையும்தான் சுதந்திரத்தின், ஜனநாயகத்தின் அடித்தளமாக அமைக்கின்றன. கல்புர்கிகளின் மரணங்களுக்கு வெறுப்பு வாதிகள் மட்டும் பொறுப்பல்ல; அவர்களை அடக்கத் தவறும் அரசமைப்புகள், வேடிக்கை பார்க்கும் ஒட்டுமொத்த சமுதாயமும்தான் பொறுப்பும்!