நல்லிணக்கத்தை இழக்கிறது துருக்கி

நல்லிணக்கத்தை இழக்கிறது துருக்கி
Updated on
1 min read

புகழ்பெற்ற துருக்கி அருங்காட்சியகமான ஹாகியா சோஃபியாவை மசூதியாக மாற்றுவது என்று அந்நாட்டின் அதிபர் தய்யீப் எர்டோகன் எடுத்திருக்கும் முடிவு உலகெங்கும் மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே மதவாதிகளின் செல்வாக்கால் சீரழிந்துகொண்டிருக்கும் துருக்கியின் மதச்சார்பின்மை விழுமியங்களுக்கு அதிபரின் முடிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த பைஸாண்ட்டைன் கலைச் சின்னமான ஹாகியா சோஃபியாவானது ஒட்டமான் முஸ்லிம்களுக்கும், கிழக்கு ஆர்த்தடாக்ஸ் கிறித்தவர்களுக்கும் இடையில் பல நூற்றாண்டுகள் நீடித்த மோதலின் மையமாக இருந்தது. கி.பி. 530-களில் பைஸாண்ட்டைன் பேரரசர் முதலாம் ஜஸ்ட்டினியனால் தேவாலயமாகக் கட்டப்பட்ட ஹாகியா சோஃபியா, மன்னர் மெஹ்மது அந்த நகரத்தை 1453-ல் கைப்பற்றிய பிறகு, ஒட்டமானியர்களால் மசூதியாக மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு, ஐந்து நூற்றாண்டுகளாக அந்த மசூதி ஒட்டமான் பேரரசின் மகுடமாக விளங்கியது. நவீன துருக்கியை நிறுவியவரான முஸ்தஃபா கேமல் அடாடர்க் தன் நாட்டை மதச்சார்பற்றதாக மாற்றும் முயற்சியின் ஒரு அங்கமாக அந்த மசூதியை 1930-ல் மூடினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அது அருங்காட்சியகமாகத் திறக்கப்பட்டது. அதிலிருந்து, துருக்கியில் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் கலைச் சின்னமாகவும், கிறித்தவர்கள்-முஸ்லிம்கள் ஒற்றுமைக்கு அடையாளமாகவும் அது இருந்தது. இதைத்தான் எர்டோகன் அரசு இப்போது மசூதியாக மாற்றவிருக்கிறது. ஹாகியா சோஃபியா என்பது எப்போதும் ஒட்டமான் பேரரசுக் காலத்தின் மகத்துவத்துடன் தொடர்புடையதாகப் பார்க்கப்படுவது. அந்த உணர்வுகளை நோக்கித்தான் எர்டோகன் குறிவைக்கிறார்.

வலதுசாரியான எர்டோகனின் ‘நீதி மற்றும் முன்னேற்றக் கட்சி’ (ஏ.கே. கட்சி) 2002-ல், தேசத்தை எல்லோரையும் உள்ளடக்கிய ஒன்றாகவும் ஜனநாயகபூர்வமானதாகவும் ஆக்குவதாக வாக்குறுதி அளித்துதான் ஆட்சிக்கு வந்தது. ஆனால், எர்டோகன் அந்நாட்டை மதவாத நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். துருக்கி நாட்டின் அரசமைப்பை எர்டோகன் திருத்தி எழுதியிருக்கிறார்; அதன் மூலம் எல்லா அதிகாரங்களையும் அதிபரிடத்தில் குவித்திருக்கிறார். கூடவே, ஊடகர்கள், விமர்சகர்களை வேட்டையாடியும்வருகிறார். துருக்கியின் பொருளாதாரம் கடுமையான சரிவைச் சந்தித்துவருகிறது. கரோனா பரவலும் கட்டுக்கடங்காமல் போயிருக்கிறது. எர்டோகனின் புகழ் சரிவைச் சந்தித்துவருகிறது, குறிப்பாக அவரது கட்சி கடந்த ஆண்டு இஸ்தான்புல்லிலும் அங்காராவிலும் உள்ளூர் தேர்தல்களில் தோல்வியுற்ற பிறகு, எடுக்கப்படும் இத்தகைய முடிவுகள், அவருக்கு உள்நாட்டில் அரசியல்ரீதியாக உதவுமோ இல்லையோ, ஆனால் துருக்கியச் சமூகத்தை மேலும் பிளவுபடுத்துவதற்கும், அதன் சர்வதேச உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in