அரசின் கைப்பாவையாக இருக்க முடியாது ஊடகம்

அரசின் கைப்பாவையாக இருக்க முடியாது ஊடகம்
Updated on
2 min read

இந்திய ஊடகங்களுக்கான சுதந்திரவெளி குறைந்துகொண்டே இருப்பதையே ‘பிடிஐ’ மீதான ‘பிரசார் பாரதி’யின் பாய்ச்சல் வெளிப்படுத்துகிறது. இந்திய ஊடக நிறுவனங்களின் கூட்டுச் செயல்பாட்டில் இயங்கும் சுயேச்சையான செய்தி நிறுவனம் ‘பிடிஐ’. பல்வேறு ஊடகங்களுக்கும் செய்திச் சேவை வழங்கும் ‘பிடிஐ’, சமீபத்தில் சீனத் தூதர் - இந்தியத் தூதர் இருவரையும் பேட்டி கண்டது. இந்தப் பேட்டிகளில் வெளியான கருத்துகளுக்காக ‘தேச விரோதச் செயல்பாடு’ என்று ‘பிடிஐ’ நிறுவனத்தைக் கண்டித்துக் கடிதம் எழுதியதோடு, ஆண்டுதோறும் ‘பிடிஐ’யின் செய்திச் சேவைக்காக ரூ.9 கோடிக்கும் மேல் செலுத்திவரும் சந்தாவையும் நிறுத்திக்கொள்ளும் முடிவைப் பரிசீலித்துவருவதாகக் கூறியிருக்கிறது இந்திய அரசு நிறுவனமான ‘பிரசார் பாரதி’.

இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வெய்டன் தன்னுடைய பேட்டியில், “எல்லையில் நடந்துவரும் மோதலுக்கு இந்தியாதான் பொறுப்பு” என்று கூறியிருந்தார். இந்தப் பேட்டியை அங்கும் இங்கும் வெட்டித் தனக்கேற்றவாறு சுருக்கி, சீனத் தூதரகம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. இதைப் பார்த்துவிட்டு பலரும் ‘பிடிஐ’யை வசைபாட ஆரம்பித்தனர். தாங்கள் எடுத்த முழுப் பேட்டியைப் படிக்காதவர்கள்தான் தங்கள் மீது விமர்சனக் கணைகளை ஏவுகிறார்கள் என்று ‘பிடிஐ’ சுட்டிக்காட்டியும் அது யார் காதிலும் விழுவதாக இல்லை. சீனத் தூதரை மட்டுமல்ல; பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதர் மிஸ்ரியையும் ‘பிடிஐ’ பேட்டி எடுத்திருந்தது. “எல்லையைத் தாண்டுவதையும் இந்தியப் பக்கத்தில் உள்ள ‘நடைமுறைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி’யில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதையும் சீனா நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று அந்தப் பேட்டியில் மிஸ்ரி கூறியிருந்தார். இந்திய எல்லைப் பகுதியில் சீனா ஊடுருவவில்லை என்று பிரதமர் கூறியதற்கு மாறாக மிஸ்ரியின் கூற்று அமைந்ததற்கும், ‘பிடிஐ’ மீது பாய்ந்தார்கள்.

எந்த ஒரு விவகாரத்திலும் சம்பந்தப்பட்ட இரு தரப்புகளின் பார்வைகளையும் விருப்பு வெறுப்பின்றி வெளியிடுவது ஊடக தர்மத்தின் அடிப்படை அம்சமாகும். இதற்கு எதிராக தன் குரலிலேயே ஊடகங்களும் பேச வேண்டும் என்று ஓர் அரசு எண்ணுவது ஜனநாயக விரோதம். அகில இந்திய வானொலியையும் தூர்தர்ஷனையும் தன் கையில் வைத்திருக்கும் அரசு நிறுவனமான ‘பிரசார் பாரதி’ எதிரொலிப்பது அரசின் குரலைத்தான் என்பதை விளக்க வேண்டியது இல்லை. பிரிட்டனின் ‘பிபிசி’ போன்று பரந்து விரிந்திருக்க வேண்டிய அமைப்பான ‘பிரசார் பாரதி’ சுருங்கிப்போனதற்குக் காரணமே அரசின் ஊதுகுழலாக அது உருவெடுத்து வளர்ந்ததுதான். தன்னுடைய அரசு துதிபாடல் கலாச்சாரத்தையே ‘பிடிஐ’ போன்ற சுயேச்சையான ஊடக நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என அது எண்ணுவது வெட்கக்கேடு.

ஜம்மு-காஷ்மீரில் ஊடகங்களின் குரலை ஒடுக்கும் வகையில் சமீபத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் ‘ஜம்மு-காஷ்மீர் ஊடக நெறிமுறைகள்’ இந்திய ஊடகங்களுக்கான பெரும் அபாய சமிக்ஞை. இந்திய அரசு முன்வைக்கும் சித்தரிப்புகளிலிருந்து வேறுபட்ட சித்தரிப்பை முன்வைக்கும் ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் எளிதில் தேச விரோத முத்திரை குத்த உதவும் கருவியாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே ‘பிடிஐ’ விவகாரத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. மிக ஆபத்தான இந்தப் போக்கு ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளிவிடும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in