கிராமங்களிலும் பரவும் தொற்று: அரசே, என்ன திட்டம்?

கிராமங்களிலும் பரவும் தொற்று: அரசே, என்ன திட்டம்?
Updated on
1 min read

கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கையில் உலகின் மூன்றாவது இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது இந்தியா. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மொத்த நோய்த்தொற்றுகளில் சுமார் 60% மஹாராஷ்டிரம், டெல்லி, தமிழ்நாடு மூன்றுமே கொண்டிருக்கின்றன. மூன்றிலுமே பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகம் என்பது போக, மூன்றுமே அதிகம் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்கள் என்பதும், மிக முக்கியமாக டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில் தொற்று அதிகமானதன் விளைவு இது என்பதும் ஆகும். இதை அப்படியே தலைகீழ் பார்வைக்கு உள்ளாக்கினால், இன்னும் 70% மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் கிராமப்புறங்களில் கிருமி பெரும் சூறாவளியாக மாறவில்லை. அப்படி மாறினால், இந்தியாவின் நிலை என்னவாகும்? இந்திய அரசும், மாநில அரசுகளும் இதற்கு என்ன திட்டத்தைக் கையில் வைத்திருக்கின்றன?

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், ஊரடங்குக்கு முன்னர் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகமாக இருந்த கிருமித் தொற்று இப்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவிவருவதை அரசின் புள்ளிவிவரங்களே சொல்கின்றன. தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கரோனாவுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அங்குள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு அதிகபட்சம் ஆயிரம் படுக்கைகள் வரையில் மட்டுமே நிர்வகிக்க முடியும். அப்படியென்றால், நிலைமை தீவிரமாகும்போது என்ன செய்வது? இதற்குத் தமிழக அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது?

அடுத்தடுத்த கிராமங்களை உள்ளடக்கிய ஒவ்வொரு தொகுப்புக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா சிகிச்சை அளிக்கத் திட்டமிடப்பட்டுவருவதாகத் தெரிகிறது. அப்படியான முடிவு எடுக்கப்பட்டால், அது மோசமான விளைவுகளையே உண்டாக்கும். ஏனெனில், தற்போது, கரோனா தவிர்த்த அனைத்து நோய்களுக்கான சிகிச்சைகளையும் அரசு மருத்துவமனைகளும் ஆரம்ப சுகாதார நிலையங்களும்தான் மேற்கொண்டுவருகின்றன. அவற்றையும் கரோனா பணியில் ஈடுபடுத்தும்போது மற்ற நோய்களுக்கான சிகிச்சைகள் தொடர்வதைக் கேள்விக்குறியாக்கிவிடும். மேலும், கரோனா போன்ற ஒரு கொள்ளைநோயை எதிர்கொள்வதற்கான கட்டமைப்பில் இருக்க வேண்டிய கச்சிதத்தன்மையையும் அது சிதறடித்துவிடும். இது கிருமிப் பரவலை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும். ஆக, மாவட்ட அளவில் நகரங்களுக்கு வெளியே பெரிய அளவிலான தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்குவதே விவேகமானது. ‘சானிடோரியம் முன்மாதிரி’ இதற்குப் பயன்படலாம். கால விரயம் இன்றி அரசு களத்தில் இறங்கட்டும். சுதாரிக்காவிட்டால் பேரழிவுக்கு கிராமங்கள் ஆளாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in