

தமிழ்நாட்டை உலுக்கிய கொலைகளில் ஒன்றான உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தையும் பிரதானக் குற்றவாளியாகக் கருதப்பட்டவருமான பி.சின்னசாமியை சென்னை உயர் நீதிமன்றம் விடுவித்துத் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கீழ் நீதிமன்றத்தில் விரைவான விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தற்போது உயர் நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்டது மட்டுமல்லாமல், இந்தக் குற்றத்துக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, பட்டப் பகலில் சாலையில் பலர் பார்த்திருக்க 33 வெட்டுகளோடு நடத்தப்பட்ட இந்தக் கொலையில் சங்கருக்குச் சற்றும் பரிச்சயமில்லாத கூலிப்படையினர் ஐந்து பேரைத் தவிர ஏனையோருக்கு எந்தத் தண்டனையும் இல்லை. கூலிப்படையினரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
உயர் நீதிமன்றத்தில் கௌசல்யாவின் தந்தை மீதான குற்றம் நிரூபிக்கப்படாதது விசாரணையின் பலவீனம், அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாத பலவீனத்தோடு நம் சமூகப் பலவீனத்தையும் சேர்த்தே வெளிப்படுத்துகிறது. கௌசல்யாவின் பெற்றோர் இல்லையென்றால், சங்கரைக் கொல்வதற்குக் கூலிப்படை அனுப்பியது யார் என்ற கேள்வி கடக்கவே முடியாதது. திருமணத்தின்போது தனது பெற்றோர் தனது மண வாழ்வில் குறுக்கிடவில்லை என்று சமரசத்துக்காக கௌசல்யா எழுதித் தந்ததை இந்தக் கொலைக்கும் கௌசல்யாவின் தந்தைக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நிரூபிப்பதற்கான ஆதாரமாக நீதிமன்றம் கொண்டது துரதிர்ஷ்டவசமானது. சின்னசாமிக்கும் கூலிப்படையினருக்கும் இடையிலான தொலைபேசி அழைப்புகள், பணப் பரிமாற்றம் போன்றவற்றை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். அரசுத் தரப்பு திருப்திகரமாகச் செயல்படவில்லை என்ற விமர்சனத்துக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து தீவிரமான மேல் முறையீட்டுக்கு அது செல்ல வேண்டும்.
ஆணவக் கொலைகள் அதிகரிப்பது மட்டும் அல்ல; ஆணவக் கொலைகளை ஆதரித்துப் பேசும் அசிங்கமும்கூட இந்தியாவில் அதிகரித்துவருகிறது. சென்ற ஆண்டு ராஜஸ்தானில் ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சட்டம் கொண்டுவந்தபோது அதை நமது பாரம்பரியம் என்று அங்கு பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாஜக அந்தச் சட்டத்தை எதிர்த்தது ஒரு சோறு பதம். சங்கர் கொலை வழக்குத் தீர்ப்பு வெளியான நாளில் தமிழ்நாட்டிலும் சீழ் நாற்றம் அதிகமாவது சமூக ஊடகங்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. சமூக நீதியிலும் வளர்ச்சியிலும் முன்னோடி மாநிலமான தமிழ்நாடு, ஒருகாலத்தில் இரு வீட்டாரும் சேர்ந்து சாதி மறுப்புத் திருமணங்களை நடத்திய அரசியல் வரலாற்றுச் சிறப்பைக் கொண்டது. ஆனால், இன்றைக்கு இந்தத் தீர்ப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் துணிச்சலைக்கூட அந்த வரலாற்றின் வழிவந்த ஆளும் அதிமுக, பிரதான எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் இழந்துவிட்டிருக்கும் மோசமான நிலைக்கு தமிழ்நாடு சரிந்திருப்பது வெட்கக்கேடு. சாதியமோ மதவியமோ தலைதூக்கும்போதெல்லாம் ஒரு குடிமைச் சமூகமாக நாம் தோற்றுவிடுகிறோம்; சக மனிதர்களின் வாழ்வை சகதியில் தள்ளுவதோடு, அதன் வழி பல நூற்றாண்டுகளுக்கு நம் தலைமுறைகளின் எதிர்காலத்தையும் பின்னுக்குத் தள்ளுகிறோம். தார்மீகரீதியாக ஒவ்வொருவரும் பொறுப்பேற்பதன் வாயிலாகவே நம் தோல்விகளிலிருந்து நாம் மீண்டெழ முடியும்.