ஒவ்வொரு உயிருக்கும் அரசு பொறுப்பு

ஒவ்வொரு உயிருக்கும் அரசு பொறுப்பு

Published on

இந்திய அரசியலர்களின் உண்மையான முகத்தைக் காண கரோனா உருவாக்கியிருக்கும் இந்த நெருக்கடியான காலகட்டம் உதவுகிறது. நாட்டின் நம்பிக்கையான தலைவர்களில் ஒருவராகவும், மாற்று அரசியலுக்கான முன்னுதாரணமாகவும் சித்திரிக்கப்பட்ட அர்விந்த் கேஜ்ரிவாலின் பிம்பமும் அப்படி உடைந்து சிதறுவனவற்றில் ஒன்றாகியிருக்கிறது. புலம்பெயர்ந்தவர்களின் நகரமாகவே உருமாறிவிட்ட இன்றைய டெல்லியை இயக்கும் சக்கரங்களாகத் திகழ்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் சில மாதங்களுக்குக்கூடப் பாதுகாப்பான சூழலை வழங்க அவருடைய அரசாங்கத்தால் முடியவில்லை. அகதிகளைப் போலத் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவது தலைநகரிலிருந்தே தொடங்கியது. அப்போது வேடிக்கை பார்த்திருந்தார் அர்விந்த் கேஜ்ரிவால். அடுத்து, டெல்லியில் கரோனா தொற்று அதிகரித்து, மருத்துவமனைகளில் நெருக்கடி நிலவும் சூழலில், ‘டெல்லியர்களுக்கு மட்டுமே மருத்துவமனைகளில் இடம்’ எனும் முடிவை எடுத்தார் அவர். அரசமைப்பின் சட்டக்கூறு 21-ன் கீழ் ‘சுகாதாரத்துக்கான உரிமை’ என்பது ‘உயிர் வாழ்வதற்கான உரிமை’யிலிருந்து பிரிக்க முடியாத பகுதியாகும் என்பதைக் குறிப்பிட்டு, அந்த முடிவை டெல்லியின் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ரத்துசெய்துவிட்டாலும், எவ்வளவு மோசமாக இந்நாட்டு அரசியலர்களால் சிந்திக்க முடியும் என்பதற்கு இது ஓர் உதாரணம் ஆகியிருக்கிறது.

மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்வதைக் கட்டுப்படுத்துவது கொள்ளைநோய் மேலாண்மையில் மிக முக்கியமான வழிமுறைதான். உள்ளூர்வாசிகள் முன்னுரிமைக்குரியவர்கள் எனும் அக்கறையும்கூட புறக்கணிக்க முடியாதது. ஆனால், கேஜ்ரிவாலின் கணக்குப்படி, ‘டெல்லியில் வசிப்பிடச் சான்று வைத்திருப்பவர்களே உயிர் வாழ்வதற்கான தகுதி கொண்டவர்கள்’ என்றால், அவர்கள் யார்; ஏனையோர் யார் என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், வழக்கமாக வெளிமாநிலங்களிலிருந்து சிகிச்சைக்காக டெல்லி நோக்கி வருபவர்களுக்குச் சொல்லப்பட்ட செய்தி அல்ல இது. டெல்லியையே சார்ந்திருப்பவர்களுக்குச் சொல்லப்பட்டது. டெல்லியானது ஹரியானாவின் குருகிராமத்தையும் உத்தர பிரதேசத்தின் நொய்டாவையும் ஒட்டி அமைந்திருக்கிறது. வேலைக்காகவும் மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட பிற தேவைகளுக்காகவும் ஆயிரக் கணக்கானோர் இந்த எல்லைகளைக் கடக்கின்றனர். இப்படிச் செல்லும் மக்கள், இந்த மூன்று பகுதிகளின் வரி வருவாயிலும் பங்களிக்கின்றனர். முக்கியமாக, டெல்லியை அவர்களும் டெல்லி அவர்களையுமாகச் சார்ந்திருக்கின்றனர். இவர்களை எப்படி ஓர் அரசு புறக்கணிக்க முடியும்?

அரசமைப்பின் அடிப்படையில் மட்டும் அல்ல; தார்மீக அடிப்படையிலேயே டெல்லியில் இப்போது தற்காலிகமாகத் தங்கியிருக்கும் ஒரு சுற்றுலாப் பயணியின் உயிருக்கும்கூட டெல்லி அரசே பொறுப்பாகும். முன்னெப்போதையும்விட நம்முடைய மனங்கள் விரிந்து செயலாற்ற வேண்டிய காலம் இது. குறுகிய மனதை ஒரு ஆட்சியாளரே கொண்டிருக்கும் நிலை,அது கொள்ளைநோயைவிடப் பெரும் சமூக நோயாக ஆகிவிடும். நாம் சுருங்கிவிடாமல் பார்த்துக்கொள்வோம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in