Published : 08 Jun 2020 06:54 am

Updated : 08 Jun 2020 06:54 am

 

Published : 08 Jun 2020 06:54 AM
Last Updated : 08 Jun 2020 06:54 AM

குழந்தைகளின் உயிரோடு விளையாடக் கூடாது அரசு

govt-should-not-risk-children-lives

கரோனா பாதிப்பு நாடு முழுவதிலும் வெவ்வேறு அளவில் உள்ள நிலையில், பள்ளிக்கூடங்களைத் திறப்பது தொடர்பில் அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று இந்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு வரவேற்புக்குரியது. வெவ்வேறான சூழல்களைப் பிரதிபலிக்கும் மாநிலங்களைக் கொண்ட இந்தியா முழுவதும் தோராயமாக 25 கோடி பள்ளி மாணவர்கள் இருக்கிறார்கள். டெல்லியிலுள்ள மாணவர்களின் சூழலும், சத்தீஸ்கரிலுள்ள மாணவர்களின் சூழலும் ஒன்றல்ல; அப்படிக் கருதி எடுக்கப்படும் முடிவுகள் பாரதூர விளைவுகளையே உருவாக்கும். அதேசமயம், மாநில அரசுகளும் தம்முடைய பொறுப்பை உணர்ந்து அதிகாரத்தைப் பயன்படுத்திடல் முக்கியம். தமிழ்நாடு அரசு தேர்வுகளை நடத்துவதில் காட்டிவரும் பிடிவாதம், ஒரு மாநில அரசானது குழந்தைகள் விஷயத்தில் எப்படிச் சிந்திக்கக் கூடாது என்பதற்கான மோசமான உதாரணம்.

இந்தியாவிலேயே நல்ல சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்ட மாநிலமான தமிழ்நாடு, கரோனாவால் இவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட இது போன்ற குளறுபடிகளும் தவறான முடிவுகளும்தான் காரணம். கரோனா தொற்று தொடங்கிய நாட்களிலேயே, ‘சென்னை மோசமாகப் பாதிக்கப்படலாம்; முன்னெச்சரிக்கைத் திட்டமிடல்கள் அவசியம்; முக்கியமாக, நெரிசலும் நெருக்கடியுமான சூழலில் உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிட போதிய அவகாசம் அளிப்பது இந்தத் திட்டமிடலில் முதன்மையானதாக இருக்க வேண்டும்’ என்பதை ‘இந்து தமிழ்’ நாளிதழே தொடர்ந்து பல முறை வலியுறுத்தியது. ‘நகரின் மையத்தில் கரோனா சிகிச்சைக்குத் திட்டமிட வேண்டாம்’ என்பதை வலியுறுத்தியது. ‘தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும்போது, இப்போதுள்ள மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டு பராமரிக்க முடியாது; நகருக்கு வெளியே சானிடோரியம் போன்ற கட்டமைப்பைத் திட்டமிடுங்கள்’ என்று வலியுறுத்தியது. இது எதையுமே அரசு பொருட்படுத்தாததால் மக்கள் இப்போது அதற்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.


சென்னையின் நெருக்கடியான பகுதிகளிலேயே தொற்று அதிகமாகப் பரவுகிறது. சென்னையில் சமாளிக்க முடியாமல் வெளியேறுபவர்கள்தான் மாநிலத்தின் ஏனைய பகுதிகளுக்கு இப்போது தொற்றைக் கொண்டுசேர்ப்பதில் முன்னணியில் இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு வேறு வழியில்லை. ஒரு படுக்கையறை வசதியைக் கொண்ட வீடுகளே பெரும்பான்மையாக உள்ளவர்கள் இந்தத் தொற்றுநோயை எப்படிக் கையாள முடியும்? நெரிசலான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருப்பவர்கள் எப்படி சமூக இடைவெளியைப் பராமரிக்க முடியும்? இப்போது பத்து - பதினோராம் வகுப்புத் தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு பத்து லட்சம் பேரைக் களத்தில் இறக்கும் முடிவில் கல்வித் துறை இருப்பது கண்ணைத் திறந்துகொண்டே தீக்குழியில் கால் வைப்பதற்குச் சமானம். பிரச்சினை என்னவென்றால், தீக்குழியில் கால் வைக்கவிருப்பவர்கள் இந்த முடிவுக்குப் பின்னிருக்கும் ஆட்சியாளர்களோ அதிகாரிகளோ அல்ல; யாதும் அறியாத குழந்தைகள்.

தேர்வுக்குச் செல்லவிருக்கும் எட்டு லட்சத்துச் சொச்சம் குழந்தைகளில் குறைந்தது ஒரு லட்சம் குழந்தைகள் உண்டு உறைவிடப் பள்ளிகளில் படிப்பவர்கள்; எல்லா மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள்; சென்னையிலுள்ள ஒரு பள்ளியில், தமிழ்நாட்டின் அத்தனை பிராந்தியங்களைச் சேர்ந்த குழந்தைகளும் படிக்கிறார்கள் என்றால், பள்ளிகள் மூடப்பட்ட பிறகு இப்போது அவர்கள் அத்தனை பேரும் அவரவர் சொந்த மாவட்டங்களில் இருக்கிறார்கள்; இவர்கள் அத்தனை பேரையும் சென்னைக்கு வரவழைத்துப் பள்ளி விடுதிகளில் தங்கச் சொல்கிறது அரசு. ஒரு வாரத்துக்குப் பின் மீண்டும் அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்பச் சொல்கிறது. என்னென்ன விளைவுகளை இது உண்டாக்கும்? சென்னையின் நெருக்கடியான பகுதிகள் பலவும் தொற்றுப்பரவலுக்கு ஆளாகியிருக்கின்றன; தொற்றுக்குள்ளான குழந்தைகள் அல்லது தொற்றுக்குள்ளான பெற்றோரைக் கொண்ட குழந்தைகள் எப்படித் தேர்வு எழுத முடியும்? அறிகுறி இல்லாமல் தொற்றுக்கு ஆளாகியிருப்பவர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள் என்று மருத்துவ நிபுணர்களே சொல்லும் நிலையில், அப்படியானவர்கள் தொற்றுள்ளவர்களுடன் கலக்கும்போது ஏற்படும் விளைவுகளுக்கு யார் பொறுப்பாளி?

மூத்த கல்வியாளர்கள், மதிப்பு மிக்க ஆசிரியர்கள், மனசாட்சியுள்ள கல்வித் துறை அதிகாரிகள் அவ்வளவு பேரும் இதை எதிர்க்கிறார்கள். சென்னை நகரில் நூறு பேர்கூட பாதித்திராத நாட்களில் இதே தேர்வுகளைத் தள்ளிவைத்த அரசு, இப்போது 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நாட்களில், அதுவும் உச்சம் நோக்கி தமிழ்நாடு நகரும் நாட்கள் என்று அரசுசார் மருத்துவப் பல்கலைக்கழகமே எச்சரிக்கும் நாட்களில் தேர்வுகளை நடத்த என்ன நியாயத்தைக் கையில் வைத்திருக்கிறது? மத்திய கல்வி வாரியம்கூட (சிபிஎஸ்சி), தேர்வுகளை நடத்த முடிவெடுத்தபோதும், மாணவர்கள் எந்தெந்த ஊர்களில் தங்கியிருக்கிறார்களோ அந்தந்த ஊர்களின் அருகமைந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. குறைந்தபட்சம் அந்த வசதியைக்கூட தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் யோசிக்க முடியாததன் காரணம், அகங்காரம் அதன் கண்களை மூடியிருப்பதுதான்.

குழந்தைகளை கரோனா கொல்வதில்லை என்பது மூட நம்பிக்கை. தமிழ்நாட்டிலேயே 18 வயதுக்குட்பட்டவர்கள் எத்தனை பேரை இதுவரை பறிகொடுத்திருக்கிறோம்!

ஒப்பீட்டளவில் குழந்தைகள் குறைவாக பாதிப்புக்குள்ளாவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, தொற்றுள்ளவர்களை அவர்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவு; தங்களை முன்னிறுத்திக்கொண்டு குடும்பத்தினர் அவர்களுக்குத் தரும் பாதுகாப்பு. அரசு இப்போது அந்தப் பாதுகாப்போடுதான் விளையாடுகிறது. இப்போதும் மோசம் இல்லை; தேர்வுகளை ஒத்திப்போடுங்கள்; தொற்றில் உச்சப்போக்கைத் தொட்டு, தமிழ்நாட்டில் தொற்று சரியத் தொடங்கும் நாட்களில் தேர்வுகளைப் பற்றி சிந்திப்போம்; பள்ளிக்கூடங்களுக்கு எந்த அவசரமும் இல்லை; நம் எதிர்காலத் தலைமுறையின் உயிரைவிட இப்போது வேறு எதுவும் முக்கியம் இல்லை.


குழந்தைகளின் உயிரோடு விளையாடக் கூடாது அரசுChildren livesகரோனா பாதிப்புபள்ளி மாணவர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x