Published : 04 Jun 2020 07:31 AM
Last Updated : 04 Jun 2020 07:31 AM

வெட்டுக்கிளிகளை எதிர்கொள்ள முன்கூட்டிய உத்திகள் முக்கியம்

நமக்கு இது பெரிய சவாலான காலகட்டம்தான்போல் இருக்கிறது. நெருக்கடி மேல் நெருக்கடிகள் வருகின்றன. 2020 தொடக்கத்திலிருந்து கரோனா பாதிப்புகளை நாடு எதிர்கொண்டுவரும் நிலையில், நாட்டின் கிழக்குப் பகுதி தீவிரமான உம்பன் புயலால் சென்ற வாரம்தான் பாதிக்கப்பட்டது. அடுத்து, நாட்டின் மேற்குப் பகுதி வெட்டுக்கிளிகளின் படையெடுப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அதிகரித்துவரும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழ்நாடு வரை அச்சத்தை உண்டாக்கியிருக்கும் நிலையில், மிகப் பெரிய வேளாண் பேரழிவுக்கு நாட்டை இட்டுச்செல்லுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர இந்தியாவில் 13 வெட்டுக்கிளிப் படையெடுப்புகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்திருக்கின்றன. பெரிய அளவிலான படையெடுப்பு நிகழ்ந்தால், அது இரண்டு வருடங்கள் வரை நீடிக்கும். அதற்குப் பிறகு எட்டு ஆண்டுகள் அவை அமைதியாக இருக்கும். தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் படையெடுப்பு, சமீப காலத்தில் மிக மோசமான ஒன்றாக இருக்கும் என்று ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ‘வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பு’ (எல்.டபிள்யூ.ஓ.) எச்சரித்துள்ளது. தற்போது பெருகிக்கொண்டிருப்பதும் விவசாயத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவாகிக்கொண்டிருப்பதுமான வெட்டுக்கிளிகள், இந்தியப் பெருங்கடல் வெப்பமாகிக்கொண்டிருப்பதன் மறைமுகமான விளைவு என்று வானிலை வல்லுநர்களில் சிலர் கூறுகிறார்கள். கடந்த ஆண்டு பருவமழை குறைவாகப் பெய்யலாம் என்று அஞ்சப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக நடந்தது. இதனால், இந்தியாவுக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும் நல்ல மழை கிடைத்தது. ஆகவே, ஆப்பிரிக்கப் பாலைவனங்களில் ஈரப்பதம் அதிகரித்து வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம் அதிகரித்தது. கூடவே, மழைமேகங்களைச் சுமந்த காற்று, அந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவை அடைவதற்குச் சாதகமாக அமைந்தது. ஒரே ஆறுதல் என்னவென்றால், மேற்கிந்தியாவில் பெரும்பான்மை நிலங்களில் பயிர் அறுவடை முடிந்துவிட்டது. அதேசமயம், விதைப்புக் காலத்தில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருப்பது, வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் செய்வதற்கு மிகவும் சாதகமான சூழல் என்பது கவலை தரும் விஷயமாக இருக்கிறது.

வெட்டுக்கிளிகள் படையெடுப்புக்குத் தமிழ்நாடும் இலக்கான வரலாறு உண்டு. பெரும் பஞ்சத்தை அது உண்டாக்கியதையும் வழக்காறுகள் நமக்குச் சொல்கின்றன. வெட்டுக்கிளிகளின் கடுமையான தாக்குதலுக்கு ஒருவேளை தமிழ்நாடு இலக்கானால், அதை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குத் தமிழக அரசு தயாராக வேண்டும். தேசிய அளவிலான ஆலோசனைகளைப் பெறுவதோடு, சர்வதேச அளவில் அடிக்கடி வெட்டுக்கிளி தாக்குதல்களை எதிர்கொள்ளும் சமூகங்களின் அனுபவங்களையும் அவர்கள் கைக்கொள்ளும் அணுகுமுறைகளையும் தமிழ்நாடு அரசு கேட்டறிவதும் முன்கூட்டி நாம் உத்திகளை வகுக்க உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x