இந்திய - சீன எல்லையில் நடப்பது என்ன?

இந்திய - சீன எல்லையில் நடப்பது என்ன?
Updated on
1 min read

இந்திய ராணுவத்தினருக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே எல்லைக்கோட்டில் கடந்த ஒரு மாத காலமாகத் தகராறு நடந்துகொண்டிருக்கிறது. பாங்காங் ட்சோ ஏரியில் மே-5-ல் நடைபெற்ற முதல் மோதலிலிருந்து அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது தொடர்பில் இந்திய அரசுத் தரப்பிலிருந்து நாட்டு மக்களுக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. எனினும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் சமீப காலத்தில் இந்த அளவுக்கு மோதல் ஏற்பட்டதில்லை என்பதை உறுதிப்படுத்தும் தகவல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன.

சீன ராணுவத்தினரின் எண்ணிக்கை, இந்திய வீரர்கள் மீது அவர்கள் காட்டும் மூர்க்கம், பல இடங்களில் இதுபோன்ற மோதல்கள் நிகழ்வன போன்றவற்றுக்குப் பின் சீனத் தளபதிகளின் தெளிவான திட்டம் இருப்பதை உணர முடிகிறது. இரு தரப்புகளும் தங்கள் கூற்றுகளிலும் அறிவிப்புகளிலும் எச்சரிக்கையாக இருந்தாலும், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்று இரண்டு தரப்புகள் திரும்பத் திரும்பச் சொல்கின்றன; ஆயினும் பிரச்சினை முடிவதற்கான உயர்நிலை அரசியல் தலையீடுகள் ஏதும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. இப்படியே பதற்றச் சூழல் நீடிப்பது இரு தரப்புக்குமே நல்லதல்ல.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார். அமெரிக்காவின் இந்தத் தலையீடு தேவையற்றது என்பதை இரு நாடுகளுமே உணர்ந்து, அதை நிராகரித்தது நல்ல விஷயம் என்றாலும், உடனடி உயர்நிலை இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தற்போதைய பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவது இந்திய அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். தொடர்ந்து மூத்த அதிகாரிகள் எல்லைக்கோட்டின் வரையறை குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும்.

சத்தமில்லாமல் எல்லைப் பகுதியில் எப்படி அவ்வளவு சீன வீரர்கள் குவிந்தனர் என்பது குறித்தும், இந்திய ராணுவம் ஏன் முன்னெச்சரிக்கையாக இல்லை என்பது குறித்தும் அரசு விசாரணை நடத்த வேண்டும். சீனாவின் நோக்கங்கள் என்ன என்பதை அறியவும் முயல வேண்டும். கரோனா கொள்ளைநோயால் எழுந்த பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பவோ, காரகோரம் கணவாய்க்குச் சாலைகளையும் பாலங்களையும் இந்தியா கட்டுவதை நிறுத்துவதற்காகவோ சீனா இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம். கூடவே, அமெரிக்காவுடனான இந்தோ-பசிஃபிக் ஒப்பந்தம் குறித்த சிந்தனையில் இந்தியா இருக்கும்போது அதன் எல்லைகள் எவ்வளவு பலவீனமாக இருக்கின்றன என்பதைக் காட்டுவதற்கான நடவடிக்கையாகவும் இருக்கலாம். இவற்றில் எதுவாக இருந்தாலும் எல்லைப்புறத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு வெளிப்படையாகத் தெளிவுபடுத்துவது முக்கியம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in