

கரோனாவுக்கு முற்றிலுமாக விடைகொடுத்து, முழு பழைய இயல்புநிலைக்குத் திரும்பிடல் என்பது இப்போதைக்குச் சாத்தியம் இல்லை என்பது தெளிவாகிவிட்ட நிலையில், ஊரடங்குக்கு விடைகொடுப்பது தொடர்பில் இந்திய அரசு சிந்திக்க வேண்டும்.
‘கிருமியோடு வாழக் கற்றுக்கொள்வோம்’ என்று அரசு கூறும்போது, ‘ஏனைய கிருமிகள், வியாதிகள் மத்தியில் எப்படி அததற்கேற்ற முன்னெச்சரிக்கை நடைமுறைகளோடு வாழ்கிறோமோ, அப்படியே கரோனாவையும் எதிர்கொள்வோம்’ என்பதுதானே அர்த்தம்! அப்படியானால், ஏன் ஊரடங்கை இனியும் நீடிக்க வேண்டும்?
கொஞ்ச காலத்துக்கு மாநில எல்லைகளை மட்டும் பூட்டிவிட்டு, அந்தந்த மாநிலங்கள் – மாவட்டங்கள் – வட்டங்கள் என்கிற அளவில், கிருமிப் பரவலுக்கேற்பக் கட்டுப்பாடுகளை விதிக்கும் அணுகுமுறையோடு, சாத்தியமுள்ள எல்லாப் பணிகளுக்கும் திரும்பிடலே நல்ல வழிமுறையாகும். இந்திய அரசு அதுபற்றி யோசிக்கட்டும். ஒருவேளை அது இந்த யோசனைக்கு வர நாட்கள் எடுத்துக்கொண்டாலும், தமிழக அரசு தன்னுடைய அதிகார எல்லைக்குட்பட்டு இந்த வழிமுறை நோக்கியே நகர முற்பட வேண்டும்.
தொற்றுப் பரவல் அதிகமாக உள்ள சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்கள் நீங்கலாக ஏனைய பகுதிகளைப் பழைய இயல்புநிலை நோக்கி நகர்த்தும் முடிவு நோக்கியே தமிழக அரசு நகர்கிறது என்றாலும், அதன் வியூகத்தில் தெளிவும், முடிவுகளில் தீர்க்கமும் இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது. பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த தொழிற்சாலைகளை இயக்க அரசு அனுமதிக்கிறது; ஆனால், குறைவான ஆட்களோடு! பேருந்துகளை முழு அளவில் இயக்க விரும்புகிறது; ஆனால், ஒரு இருக்கைக்கு ஒருவர் என்ற எண்ணிக்கையோடு! கடைகள் – வணிகச் செயல்பாடுகளை உத்வேகப்படுத்த விரும்புகிறது;
ஆனால், இரவு ஏழு மணிக்குள் மூடிவிட வேண்டும் என்ற வரையறையோடு! இந்த வரையறைகளுக்கு உள்ளே மட்டும் கரோனா பரவாதா என்ன? ஒரு விடுதியில் உணவைப் பரிமாறுபவர் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கும்பட்சத்தில், வாடிக்கையாளருக்கு உணவை அங்கேயே அவர் பரிமாறினாலும் கிருமி தொற்றும்; பொட்டலம் கட்டிக் கொடுத்தனுப்பினாலும் கிருமி தொற்றும். ஆகையால், கிருமிப் பரவல் அதிகமுள்ள பகுதிகளில் கவனம் குவித்து, ஏனைய பகுதிகளை இயல்புநிலை நோக்கி அனுமதிப்பதே சரியான வியூகமாக இருக்கும். ஒரே விஷயம், மாநிலம் தழுவிய எந்த நிகழ்ச்சிகளையும் அது இப்போது சிந்திக்கக் கூடாது; அது பள்ளித் தேர்வாக இருந்தாலும் சரி, போக்குவரத்தாக இருந்தாலும் சரி. அதேபோல, கிருமியை எதிர்கொள்ள, அதிகமான நோயாளிகளைக் கையாள சுகாதாரக் கட்டமைப்பைத் தொடர்ந்து பலப்படுத்த வேண்டும். இப்போதைக்கு இதுவே நல்வழி!