Published : 28 May 2020 07:01 AM
Last Updated : 28 May 2020 07:01 AM

கருத்துச் சுதந்திரத்தை அரசினர் கற்கட்டும்

தமிழகத்தின் பொதுவாழ்க்கையில் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டிருக்கும் ‘அவதூறு வழக்குகள் கலாச்சாரம்’ மீது சரியான சவுக்கடியை வீசியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகைகளின் மீது குற்றவியல் அவதூறு வழக்குகளை ஓர் ஆயுதம்போலப் பயன்படுத்துவது தொடர்பில் தன்னுடைய ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள், அடுத்தடுத்த இரு தீர்ப்புகளில் சொல்லியிருக்கும் பல விஷயங்கள் இனி அவதூறு வழக்குகள் விசாரணையில் வழிகாட்டல்களாகவே திகழும்.

2011-12 ஆண்டுகளில் தொடர்ந்து பதிவான பல்வேறு அவதூறு வழக்குகளைத் தள்ளுபடிசெய்து நீதிபதி அப்துல் குத்தூஸ் அளித்திருக்கும் தீர்ப்பானது, அரசு ஊழியர்கள் தொடர்பாக அரசால் முன்னெடுக்கப்படும் அவதூறு விசாரணைகள் அவசரகதியிலும் தவறான வகையிலும் இருப்பதைத் தடுத்து நிறுத்தும் வகையில் சில கோட்பாடுகளை அளித்துள்ளது. விமர்சிக்கும் எந்தவொரு செய்தியின் மீதும் முன்யோசனைகள் எதுவும் இல்லாமல் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் அரசு வழக்குரைஞர் அவதூறு வழக்கைத் தொடரக் கூடாது என்பது அந்தத் தீர்ப்பின் அடிப்படை அம்சமாகும். அத்தகைய முன்யோசனைகள் இல்லாத நடவடிக்கைகளை ஜனநாயகத்தின் மீதான அடக்குமுறைகள் என்றே நீதிமன்றம் கருதுகிறது. அவதூறு வழக்குகள் தொடுப்பதற்கான விதிமுறைகளை இன்னும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அது அரசுக்கு அறிவுறுத்துகிறது. தனிப்பட்ட முறையில் ஒரு அரசு ஊழியர் அவதூறுக்கு உள்ளாக்கப்படுவதற்கும் அரசாங்கம் அவதூறுக்குள்ளாவதற்கும் இடையிலுள்ள சட்டரீதியான வேறுபாடு நடைமுறையிலும் கடைப்பிடிக்கப்பட்டாக வேண்டும். அரசாங்கம் எவ்வாறு அவதூறுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான உரிய விளக்கம் இல்லாமலே அரசு வழக்கறிஞர்கள் மூலமாக வழக்குகள் தொடரப்படுவதற்கு நீதிபதி குத்தூஸ் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனால் அளிக்கப்பட்டுள்ள மற்றொரு தீர்ப்பு, அமெரிக்காவின் பிரபலமான ‘நியூயார்க் டைம்ஸ் எதிர் சல்லிவன்’ வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பையும் ‘கெட்ட நோக்கத்துடன் தீங்கு விளைவித்தல்’ என்ற கோட்பாடு தொடர்பிலும் விளக்கியுள்ளது. ஒரு பத்திரிகையாளர் மற்றும் ஒரு செய்தித்தாளுக்கு எதிராகத் தொடரப்பட்ட தனிநபர் வழக்கைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்ட நீதிபதி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 499-ன் கீழ் ‘அரசு ஊழியர்களின் பணிநிமித்தமான நடத்தை’, ‘பொது விஷயங்கள் பற்றிய எந்தவொரு நபரின் நடத்தை’ ஆகிய இரண்டு விதிவிலக்குகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தால் சில நாட்கள் இடைவெளியில் அளிக்கப்பட்டிருக்கும் இந்த இரண்டு தீர்ப்புகளும் கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்தை வலுப்படுத்தும் முக்கியமான முன்னெடுப்புகள். ஆட்சியாளர்கள் இனியேனும் இந்நாட்டின் ஜனநாயகம் அளிக்கும் சுதந்திர விழுமியங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்; விமர்சனங்களுக்கு முகங்கொடுக்கும் ஆக்கபூர்வ மனதையும் சகிப்புத்தன்மையையும் பெற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x