Published : 10 Aug 2015 08:59 AM
Last Updated : 10 Aug 2015 08:59 AM

நகர்மயமாக்கலுக்கு முன் படிக்க வேண்டிய பாடம்!

இந்தியாவை ஒரு பெரும் கிராமங்களின் தொகுப்பாகப் பார்த்தார் தேசப்பிதா காந்தி. ஆனால், இன்றைக்கோ உலகிலேயே நகர்மயமாக்கலை நோக்கி மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடு இது. சர்வதேச அளவில் ஏனைய நாடுகளின் நகரங்களின் சுத்த ஒப்பீட்டில் நம்முடைய நகரங்கள் எவ்வளவு பின்தங்கியிருக்கின்றன என்பது நமக்குத் தெரிந்ததுதான். நமக்குள்ளான ஒப்பீட்டுக்கு பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு உதவுகிறது.

ஒரு லட்சத்துக்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்ட நகரங்களை வைத்து மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை நடத்தியிருக்கும் இந்த ஆய்வின் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட பட்டியலில், நாட்டின் 476 நகரங்களில் முதல் இடத்தை மைசூரு பெற்றிருக்கிறது. திருச்சி, நவி மும்பை, கொச்சி, ஹசன், மாண்டியா, பெங்களூரூ, திருவனந்தபுரம், அலிசாகர், காங்டாக் ஆகியவை அடுத்த இடங்களைப் பிடித்து முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கின்றன. இதேபோல, சுத்தமாக உள்ள தலைநகரங்களில் பட்டியலில் பெங்களூரூ முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. திருவனந்தபுரம், காங்டாக், டெல்லியின் சிறு குறிப்பிட்ட பகுதியான புது டெல்லி மாநகராட்சிப் பகுதி, சண்டீகர், புதுச்சேரி, அகர்தலா, போர்ட் பிளேர், அய்ஜால், குவாஹாட்டி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கின்றன.

நாட்டின் தலைநகரம் டெல்லியின் பெரும் பகுதி 379-வது இடத்தில் இருக்கிறது இந்தப் பட்டியலில். அதேபோல, மும்பையின் பெரும்பகுதி 147-வது இடத்தில் இருக்கிறது. பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ள நகரங்களில் 25 மேற்கு வங்கத்தைச் சார்ந்தவை. நாட்டிலேயே அதிகமான மாநகராட்சிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்திலோ இட்டாவா மட்டுமே 100 இடங்களுக்குள் இடம்பெற்றிருக்கும் ஒரே மாநகரம். இந்தத் தரவரிசைப் பட்டியலில் நாட்டிலேயே கடைசி இடத்தைப் பெற்றிருக்கும் நகரம் மத்தியப் பிரதேசத்தின் தாமோ. இதேபோல தலைநகரங்களில் மோசமான நகரம் பிகாரின் பாட்னா. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி குப்பைக்கூளங்கள் நிரம்பிய ஊர்களின் பட்டியலில்தான் முன்னணியில் இருக்கிறது. அதாவது, ஒட்டுமொத்தமாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 476 நகரங்களில் 418-வது இடத்தில் வாரணாசி இருக்கிறது.

தமிழகத்தைப் பொருத்த அளவில் திருச்சி நீங்கலாக, சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய மூன்று நகரங்கள் முதல் 200 இடங்களுக்குள் வந்திருக்கின்றன. மதுரை 20-வது இடத்தில் இருக்கிறது. தலைநகர் சென்னை 61-வது இடத்தில் இருக்கிறது. கோவை 196-வது இடத்தில் இருக்கிறது.

இந்தத் தரவுகளின் முக்கியத்துவம் என்னவென்றால், இவை நம்முடைய நகர்மயமாக்கல் சிந்தனைகளை அப்படியே புரட்டிப்போடக் கூடியவை என்பவைதான். அதாவது, நகர்மயமாக்கலில் நவீன வளர்ச்சி என்று நாம் எதைச் சொல்லிக்கொண்டிருக்கிறோமோ, எதை நம்பிக்கொண்டிருக்கிறோமோ அதைச் சுக்குநூறாக உடைக்கின்றன இவை. சுத்தம் என்பது இங்கே அழகோ, அலங்காரமோ அல்ல. நாம் வாழ்வதற்கு ஏற்ற சூழலைத்தான் அது குறிக்கிறது. எத்தனை நூறு கோடிகளைக் கொட்டினாலும், சுத்தம் சுகாதாரத்துக்கும் வெற்றுப்பகட்டுக்கும் இடையே உள்ள தூரத்தை இந்தத் தரவுகள் துல்லியமாகச் சுட்டிக்காட்டுகின்றன. என்ன செய்யப்போகிறோம்? பெங்களூரு, மைசூரு வரலாறு தெரிந்தவர்களுக்கு வெற்று முழக்கங்களுக்கும் தொலைநோக்குப்பார்வைக்கும் உள்ள வித்தியாசம் புரியவரும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x