

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றிய அரசின் ‘கரோனா நிவாரணத் தொகுப்பு’ அறிவிப்புகள், சாமானிய மக்களிடமிருந்து வெகு தொலைவில் அரசு இருப்பதையே உணர்த்துகின்றன. ஊரடங்கின் விளைவாகப் பெரும் தேக்கத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் மக்களையும் பொருளாதாரத்தையும் உடனடியாகக் கை தூக்கிவிடுவதற்கான நடவடிக்கைகளைக் காட்டிலும், நீண்ட கால நோக்கில் அரசின் கருவூலத்துக்குக் குறைந்தபட்ச சேதாரமே ஏற்படும் வகையில் பொருளாதாரத்தை அனுசரித்தல் எனும் வியூகம் எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வறிவிப்புகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது, முதலீடுகளை எளிதில் கிடைக்கச் செய்தல், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்களை வலுப்படுத்துதல்; இரண்டாவது, அரசின் வெகுநாள் கணக்கில் இருந்த சில தனியார்மய நடவடிக்கைகள் - நாடாளுமன்றத்தில் விவாதித்து அறிவிக்கப்பட வேண்டியவை நாடாளுமன்றத்தை மறைமுகமாகப் புறக்கணித்து எடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலானவை கடன் தரும் திட்டங்களாகவும் கடனுக்குப் பிணை நிற்கும் திட்டங்களாகவும் இருக்கின்றன.
முன்னதாக, மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவையும் அதில் உத்தேசமாகத் தெரிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்படாத திட்டங்களும்கூட இந்த அறிவிப்பில் சேர்ந்துகொண்டுள்ளன. அறிவிப்புகளின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகபட்சம் 3% அளவுக்கு இருக்கலாம் என்று பொருளியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சிதம்பரம், ‘மொத்தமாகவே ரூ.1.86 லட்சம் கோடிக்குதான் நிவாரணத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 0.91%தான்; கடுமையான பொருளாதாரச் சிக்கலில் அகப்பட்டுத் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு இது கொஞ்சமும் போதாது’ என்று கூறியிருக்கிறார். நிதி நிர்வாகம் என்ற அளவில் இந்த அறிவிப்புகளை மெச்சலாம்; பொருளாதார நிவாரணம் என்றோ, ஊக்குவிப்போ என்றோ அறிவிப்பதற்குப் பொருத்தக் குறைவானவை.
அறிவிப்புகளில் எளிய மக்களுக்கு ஓரளவு உடனடி ஆறுதல் அளிப்பதாக இருப்பது, ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட’த்தின் பட்ஜெட்டை மூன்றில் இரண்டு மடங்கு (கூடுதலாக ரூ.40,000 கோடி) அளவுக்கு உயர்த்தும் முடிவுதான். மிகுந்த வரவேற்புக்குரிய அறிவிப்பு இது. நகரங்களிலிருந்து தங்கள் சொந்த ஊர் நோக்கித் திரும்பும் தொழிலாளர்களுக்கும் இது வேலைவாய்ப்பளிக்கப் பயன்படலாம். கரோனாவை எதிர்கொள்ளும் பணியில் களத்தில் நிற்பதோடு, பெரும் செலவுகளையும் எதிர்கொண்டுவரும் மாநில அரசுகள், ‘கடன் வாங்கும் வரம்பை உயர்த்த வேண்டும்’ என்று விடுத்திருந்த கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் கூடவே அறிவிக்கப்பட்டிருக்கும் தேவையற்ற நிபந்தனைகள் மாநிலங்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றன. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமானது என்று தமிழக முதல்வர் உட்பட பலரும் எதிர்த்திருப்பது நியாயமானது. கூட்டாட்சியைப் பலவீனப்படுத்துவதுபோலவே, தனியார்மயமாக்கலைத் தீவிரப்படுத்தவும் ஒரு கொள்ளைநோய் காலகட்டத்தை அரசு பயன்படுத்துவது மோசமானது.
பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த தொழில்கள் மறுபடியும் செயல்படுவதற்கும், பொருளாதாரச் சுழற்சி மறுபடியும் இயல்புநிலைக்குத் திரும்புவதற்குமான நிதி ஊக்க அறிவிப்புகள் ‘விநியோகத்தை ஊக்கப்படுத்தல்’ என்ற உத்தியின் அடிப்படையிலேயே வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த உத்தி வென்றால் மகிழ்ச்சி; ஒருவேளை, அப்படி நடக்காதுபோனால், பெரிய விலையை நாடு கொடுக்க வேண்டியிருக்கும்.