Published : 05 Aug 2015 09:49 AM
Last Updated : 05 Aug 2015 09:49 AM

ரசிகர்களின் நம்பிக்கை மைதானத்துக்கு வெளியே!

கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வீரர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், அணியில் தங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.

கிரிக்கெட் விளையாட்டில் நடைபெறும் சூதாட்டத்தை முதன்முதலில் அம்பலப்படுத்தியவர்கள் டெல்லி போலீஸார். கடந்த 15 ஆண்டுகளில் இரு முறை அவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றனர். 2000-ல், ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரருக்கும் சூதாட்டங்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் தரகருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய ஒலிப்பதிவு நாடாவைக் கைப்பற்றி முதல் முறை அம்பலப்படுத்தினர். 2013-ல் ஐ.பி.எல். போட்டிகளில் நடந்த ‘ஸ்பாட்-ஃபிக்ஸிங்’ சூதாட்ட நடைமுறைகளை அம்பலப்படுத்தினர். முதல் சம்பவம் தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைவராக அப்போது இருந்த ஹன்ஸி குரோன்யே விசாரிக்கப்பட்டார். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அணியிலிருந்தே நீக்கப்பட்டார். ‘ஐ.பி.எல்-6’ போட்டியின்போது நடந்த ‘ஸ்பாட் ஃபிக்ஸிங்’ சூதாட்டத்தில், 42 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. தாவூத் இப்ராஹிம் அவருடைய சகாக்கள் சோட்டா ஷகீல், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாவேத் சுட்டானி, சல்மான், எதிஷாம் உட்பட ஆறு பேர் ‘தலைமறைவுக் குற்றவாளிகள்’என்று அறிவிக்கப் பட்டனர். எஞ்சிய 36 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. கிரிக்கெட் வீரர்கள் எஸ்.  சாந்த், அஜீத் சாண்டிலா, அங்கீத் சவாண் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். பிறகு, இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்கள் மீது விசாரணை நடத்தியது. அந்த மூவரும் விலக்கிவைக்கப்பட்டனர்.

சூதாட்ட வழக்கை, டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா விசாரித்தார். முதலில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வழக்கைப் பதிவுசெய்த டெல்லி போலீஸார், பிறகு விசாரணையில் கோட்டை விட்டனர். ஆதாரங்களைச் சேகரிக்கத் தவறினர். விளைவு, போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு நிற்கவில்லை. கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது. அதற்குச் சவால் விடும் வகையிலான வியாபாரமாக சூதாட்டம் உருவாகிவருகிறது. கிரிக்கெட்டை ஆதாரமாக வைத்து நடத்தப்படும் சூதாட்டமும் அதை முன்வைத்து நடத்தப்படும் பேரங்கள், காய் நகர்த்தல் களும் யாரும் அறியாதவை அல்ல. ஆனாலும், தடுத்து நிறுத்த ஆதாரங் களை போலீஸாரால் திரட்ட முடியவில்லை. குற்றவாளிகளைத் தண்டிக்க நம்மால் முடியவில்லை. முக்கியமான விஷயம், இதுபோன்ற முறைகேடு களை, நம்பிக்கைத் துரோகங்களைத் தடுக்கக் கடுமையான சட்டங்கள் கூட நம்மிடம் இல்லை.

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட மூன்று வீரர்களும் தங்களை மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைதுள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை அது நியாயமானதுதான். போதிய ஆதாரங்கள் இல்லையென்று நீதிமன்றம் விடுவித்தாலும், அவர்கள் மீதான நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. தங்களுடைய ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணை அறிக்கை அடிப்படையில் தடை விதிக்கப்பட்டதாக அது தெரிவிக்கிறது. நீதிமன்றத்துக்குத் தேவைப்படும் ஆதாரங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்குத் தேவையில்லை. எனவே, அதன் அறிவிப்பில் குறைகாண ஏதுமில்லை. எல்லாமும் சட்ட / விதிகளின்படி நியாயம். ஆனால், தர்மத்தின்படி அப்படிச் சொல்ல முடியுமா? கிரிக்கெட் வாரியத்தில் தொடங்கி வீரர்கள் வரை புரையோடிக்கிடக்கும் ஊழல்கள் கிரிக்கெட் ரசிகனை அடித்துத் துவைக்கின்றன. அவனுடைய ரசனை, நம்பிக்கை எல்லாம் மைதானத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டிருக்கின்றன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x