

கரோனாவை எதிர்கொள்வதற்காக மார்ச் 25-ல் தொடங்கிய நாடு தழுவிய ஊரடங்கு, நான்காம் கட்டமாக மே 18 முதல் 31 வரை தொடரவுள்ளது; முந்தைய ஊரடங்குகளைக் காட்டிலும் இது வித்தியாசமானதாக இருக்கும் என்று பிரதமர் முன்கூட்டியே அறிவித்திருந்தாலும் மத்திய அரசிடமிருந்து அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வருவதற்கு முன்பே மஹாராஷ்டிரம், பஞ்சாப், தமிழ்நாடு என்று பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்து அறிவித்துவிட்டன. தொற்று குறைவான மாநிலங்கள் ஊரடங்கை வேறு வழியின்றி சகித்துக்கொண்டிருக்கின்றன. நாடு தழுவிய ஒரே அணுகுமுறையான ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவருவதே சரியானது. ஒரு மாநிலத்துக்குள் இப்போது வெவ்வேறு மாவட்டங்களின் சூழல்களுக்கேற்ப மாநில அரசு முடிவெடுத்துக்கொள்வதுபோல, ஒட்டுமொத்த மாநிலத்துக்கான ஊரடங்கைத் தீர்மானிக்கும் முடிவையும் அந்தந்த மாநில அரசுகளிடமே ஒப்படைக்கும் முடிவை இந்திய அரசு எடுக்க வேண்டும். ஒன்றிய அரசும் சரி; மாநில அரசுகளும் சரி; ஊரடங்கை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பதற்கான உத்தி வகுத்தலை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மே 31 வரையில் மாநிலம் முழுவதுமே கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதியில்லை, பொதுப் போக்குவரத்து கிடையாது, மக்கள் கூடுகைகளுக்கும் அனுமதியில்லை. சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. தொற்று இல்லாத அல்லது குறைவாக உள்ள 25 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மாவட்டத்துக்குள்ளான போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. சென்னை தவிர, மற்ற நகரங்களில் 100 பேருக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள் முழு எண்ணிக்கையுடன் வழக்கம்போலச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் பழனிசாமி பிறப்பித்திருக்கிறார். சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இயல்பு நிலையைக் கொண்டுவரும்வகையில் இந்தத் தளர்வுகள் அமைந்துள்ளன.
தமிழக அரசு தொற்றின் பரவலுக்கு ஏற்றவகையில் ஊரடங்கு நடைமுறைகளைக் கையாளத் தொடங்கியிருப்பது சரியான அணுகுமுறை. ஆனால், ஊரடங்கைத் தளர்த்துவதால் நாம் பொருளாதாரச் சுணக்கத்திலிருந்துதான் விடுபட முயல்கிறோமேயொழிய, நோய்ப்பரவலிலிருந்து அல்ல என்பதைத் தமிழக அரசு உணர வேண்டும். ஊரடங்கிலிருந்து படிப்படியாக வெளியேறுவதற்கான வியூகம் எதையும் வகுக்காமலேயே அதை நோக்கி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அபாயமானதாக மாறிவிடக்கூடும். பத்தாம் வகுப்புத் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை காட்டிவரும் அவசரம், அரசின் தவறான போக்குக்குச் சிறந்த உதாரணம். சென்னை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அவசர அவசரமாக வெளியிட வேண்டியதன் அவசியம் என்ன? ஒரு நெருக்கடிச் சூழலில் உள்ள மாணவர்களிடம் இது எத்தகு மனநிலையை உருவாக்கும்? தொடக்கம் முதலாகவே பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கரோனா தொற்றை அணுகுவதிலும், திட்டமிடுவதிலும் சொதப்பிவருகிறார்கள். அரசும் இதை அங்கீகரிப்பது ஆபத்தானது. அலுவலகங்களை வேகவேகமாக இயக்கத்துக்குக் கொண்டுவரும் முனைப்பும் இந்த அவசரத்தின் வெளிப்பாடுதான்.
உலகளாவிய கரோனா அனுபவங்களின்படி கணக்கிட்டால், மே-ஜூன் மாதங்கள் தமிழ்நாட்டில் பரவல் உச்சத்தைத் தொடும் சாத்தியமுள்ள மாதங்கள்; வாழ்க்கைப்பாட்டுக்காக பொருளாதார நடவடிக்கைகளை இயங்க அனுமதிப்பது தவிர்க்கவே முடியாதது. ஆனால், ஜூன் தொடக்கத்திலேயே எல்லோரையும் வீதியில் இறக்கிவிடக் காட்டும் முனைப்பானது, கிருமிப் பரவல் அபாயத்தை அரசு குறைத்து மதிப்பிடுவதையே வெளிப்படுத்துகிறது. அப்படியானால், அதற்கு நாம் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். இதுவரை பட்ட பாடு வீணாகும். ‘கரோனாவைத் துணிச்சலுடன் எதிர்கொள்வோம்’ என்ற முழக்கத்துக்கான பொருள், ‘நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அத்தனையையும் தவிர்த்துவிட்டு, அதன் பாதிப்புகளை ஏற்றுக்கொள்வோம்’ என்பதல்ல.
வீட்டிலிருந்தபடி பணியாற்றும் சாத்தியமுள்ளோருக்கு அதற்கான உத்வேகத்தை அளிப்பது, ஓரிரு மாதங்கள் வீட்டிலேயே வைத்திருக்கச் சாத்தியமுள்ள மாணவர்களை தொற்று உண்மையாகவே குறையத் தொடங்கும் வரை வீட்டிலேயே இருக்கச் செய்வது, அன்றாடம் வெளியில் வந்து பணியாற்றிட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பவர்களுக்கு அதற்கேற்ற வசதிகளையும் உதவிகளையும் அளித்திடுவது, இவை எல்லாம் ஒருபுறம் நடக்க... மறுபுறம் கரோனா பரிசோதனைகளை மேலும் அதிகப்படுத்துவது, நம் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவது, கிருமியை எதிர்கொள்ளப் புதிய சாத்தியங்களைக் கண்டறிவது என்பதே இன்றைக்கு நம் ஆட்சியாளர்கள் கைக்கொள்ள வேண்டிய உத்தியாகும். ஊரடங்கிலிருந்து பழைய அன்றாடத்துக்குத் திரும்ப நிறைய யோசனைகள், முன்னேற்பாடுகள் வேண்டும்.