

கரோனா கிருமியை எதிர்கொண்டபடியே வாழ தமிழ்நாடு மெல்லப் பழகிவருகிறது; நோய் தொடர்பிலான விழிப்புணர்வைச் சரியான தருணத்தில் உருவாக்கிவிட்டால், வாழ்க்கையையே அதற்கேற்ப அனுசரித்து மாற்றித் தகவமைத்துக்கொள்ளும் சமூகம்தான் இது. கரோனாவைப் பொறுத்தவரை தமிழகம் தொடக்கத்தில் சறுக்கிவிட்டது. கேரளத்தில் முதல் நோயாளிக்குத் தொற்று கண்டறியப்பட்டதுமே நாம் விழித்துக்கொண்டிருக்க வேண்டும். மேலும், கரோனாவை எதிர்கொள்வதற்கு நமக்கு என்று பிரத்யேகமான செயல்திட்டத்தை வகுத்திருக்க வேண்டும். இரண்டிலுமே சறுக்கியது தமிழக அரசு. குறிப்பாக, செயல்திட்டம் வகுப்பதில் டெல்லியை எதிர்பார்த்து நின்றதாலேயே நிறையத் தவறுகள் நடந்தன. ஆனால், சீக்கிரமே நம் அரசு இயந்திரம் சுதாகரித்தது. டெல்லிக்கு என்று பெரிய திட்டங்கள் ஏதும் இல்லை என்பதை நம் அதிகாரிகள் உணர்ந்தனர். விளைவாக, இன்று பல விஷயங்களில் தயக்கங்களைக் கடந்து சுதந்திரமாக நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். இது பாராட்டுக்குரியது. இந்த இடத்தில் நாம் முதல்வருக்கும் அமைச்சரவைக்கும் அழுத்திச் சொல்ல விரும்புவது இதைத்தான்: ‘இந்தியாவிலேயே நிர்வாகத்தில் சிறந்த அதிகாரிகளைக் கொண்ட மாநிலம் நம்முடையது; அவர்களை நம்பி முழுச் சுதந்திரத்தையும் உற்சாகத்தையும் அரசு கொடுக்கட்டும்.’
மக்களின் உயிரும் முக்கியம், மக்கள் உயிர் வாழ்வதற்கான வாழ்வாதாரமும் முக்கியம் என்பதை உணர்ந்து ஊரடங்கின் இடையே வணிகச் செயல்பாடுகளை அனுமதிக்கும் முடிவைத் தமிழக அரசு எடுத்திருப்பது வரவேற்புக்குரியது. அதே சமயம், சுதந்திரமாக வணிகர்களைச் செயல்பட அனுமதிப்பதே சரியான உத்தியாக இருக்க முடியும். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை என்பதான காலவரையறையோ, அதிகாரிகளை இஷ்டப்படி வணிகர்களைக் கையாள அனுமதிப்பதோ மோசமான விளைவுகளையே கொண்டுவரும். வாணியம்பாடி நகராட்சி ஆணையர் வணிகர்களிடம் அதிகாரத் திமிருடன் நடந்துகொண்ட சம்பவம் தனித்த ஒன்றல்ல; பல அத்துமீறல்கள் பொதுவெளியின் கவனத்துக்கு வெளியே நடக்கின்றன. மேலும் காவல், வருவாய், உள்ளாட்சி அதிகாரிகள் விதிமீறல் என்ற பெயரில் அதிகாரபூர்வமற்ற வகையில் கடைகளை மூடி முத்திரையிடுவது, பின்னர் கையூட்டு பெற்றுக்கொண்டு கடைகளைத் திறக்க அனுமதிப்பதைப் பல இடங்களில் மக்கள் பேசக் கேட்க முடிகிறது. இது அரசுக்கு அவப்பெயரை உண்டாக்குவதுடன் வணிகச் செயல்பாட்டையும் முடக்கும். இக்கட்டான தருணத்தில் தடைகளுக்கு மத்தியில் மீண்டும் வணிகத்தைத் தூக்கி நிறுத்த முற்படுகிறார்கள் வணிகச் சமூகத்தினர்; உரிய வழிகாட்டுதல்களுடன் அவர்களுக்கு உற்சாகம் அளிப்பது அரசின் கடமை.