ஊடகங்கள் கவனம் விரியட்டும்.. நாடு இயல்புக்குத் திரும்பட்டும்

ஊடகங்கள் கவனம் விரியட்டும்.. நாடு இயல்புக்குத் திரும்பட்டும்
Updated on
1 min read

கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் அமலாக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டைப் பழைய இயல்புநிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற குரல்கள் வெகுமக்கள் மத்தியில் பெருகிவரும் நிலையில், இது சம்பந்தமான விவாதங்கள் கருத்துருவாக்கர்கள் மத்தியில், குறிப்பாக ஊடகங்களில் நிகழ்வது முக்கியம். துரதிர்ஷ்டவசமாக கரோனா நேரடியாக உருவாக்கும் சமூகப் பாதிப்புகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், இங்கு ஊரடங்கின் விளைவாக மறைமுகமாக ஏற்படும் பாதிப்புகளுக்கு அளிக்கப்படவில்லை.

சீனாவிலும், தொடர்ந்து ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கரோனா பரவியபோது கரோனா தொடர்பில் இந்தியாவின் அறிதல்கள் குறைவு. ஆனால், ஊரடங்குக்குப் பிந்தைய இந்த ஐம்பது நாட்களில் கரோனாவை எதிர்கொள்வது தொடர்பில் தனக்கென்று சில புரிதல்களை நாடு எட்டியிருக்கிறது. அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் அளவுக்கு இங்கே பாதிப்புகள் இல்லை என்பது போக, பாதிப்புகளை எதிர்கொள்வதிலும் வடக்கு, தெற்கு, வடகிழக்கு இடையே பொருட்படுத்தத்தக்க மாறுபாட்டைக் காண முடிகிறது; மிக முக்கியமாக, அந்தந்த மாநிலச் சூழலுக்கேற்பச் செயல்படுவதே சிறந்த அணுகுமுறையாக இருக்க முடியும் என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது. அதேசமயம், கரோனா ஊரடங்கின் விளைவாக நாடு முழுக்க சாமானியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

விழிப்புணர்வோடும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடனும் இயல்புநிலைக்குத் திரும்புவதே சிறந்த முறையாகத் தென்படும் நிலையில், ஊரடங்கு முடிவுக்குக் கொண்டுவரப்படுதல் அவசியம். இதற்கு ஊடகங்களும் முக்கியப் பங்காற்ற வேண்டும். ஆனால், ஊடகங்களின் சிந்தனையோ மொத்தமாக கரோனாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. இரு மாதங்களுக்கும் மேலாக கரோனா சம்பந்தப்பட்ட செய்திகளே எல்லா ஊடகங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் நிலையில், சகலரின் சிந்தனைகளையும் அது பீடித்துவிட்டிருக்கிறது. விளைவாக, கரோனா நீங்கலான ஏனைய எல்லா முக்கியச் செய்திகளும் மக்கள் கவனத்துக்கு அப்பால் மடிந்து விழுகின்றன. ஆட்சியாளர்களுக்கு இது அபாரமான வாய்ப்பு. ஊரடங்கின் விளைவாக அரசியல் செயல்பாடுகள் தேக்கத்தைச் சந்தித்திருக்கும் சூழலில், நிறைய மக்கள் விரோதச் செயல்பாடுகள் அரங்கேறுகின்றன. தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி, தொழிலாளர் நலச் சட்டங்களை அடுத்த சில ஆண்டுகளுக்கு முடக்கிவைக்கும் நடவடிக்கை பரவத் தொடங்கியிருப்பது ஒரு சோறு பதம்.

நிச்சயமாக கரோனாவுக்கு உரிய முக்கியத்துவம் செய்திகளில் அளிக்கப்படல் முக்கியம். அதேசமயம், கரோனா செய்திகள் மட்டுமே செய்திகள் அல்ல. ஊடகங்கள் தங்கள் கவனக் குவிமையத்தை விரிக்காத வரை மக்களாலும் இந்த உளவியல் வலையிலிருந்து விடுபட முடியாது. அது யாருக்கும் நல்லதல்ல!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in