Published : 11 May 2020 07:32 AM
Last Updated : 11 May 2020 07:32 AM

கூகுளும் ஃபேஸ்புக்கும் தம் வருமானத்தைப் பகிர்வதே ஜனநாயகத்துக்கு நல்லது

பத்திரிகைகளுக்குத் தெம்பூட்டும் ஒரு நடவடிக்கையை ஆஸ்திரேலிய அரசு எடுத்துள்ளது. இணைய ஜாம்பவான்களான கூகுளும் ஃபேஸ்புக்கும் ஆஸ்திரேலிய ஊடகங்களின் செய்திகளையும் கட்டுரைகளையும் தங்கள் ஊடகத்தில் காட்டுவதன் மூலம் பெறும் வருமானத்தை ஆஸ்திரேலிய ஊடகங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றவிருக்கிறது ஆஸ்திரேலிய அரசு. மிகுந்த வரவேற்புக்குரிய நடவடிக்கை இது.

உலகம் முழுவதும் பத்திரிகைகள் கடும் போராட்டத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கும் காலம் இது. பத்திரிகையின் ஒவ்வொரு செய்தியின் பின்னாலும் செய்தியாளர்கள், செய்தி ஆசிரியர்கள், வடிவமைப்பாளர்கள், ஆசிரியர் என்று ஒரு படையின் உழைப்பு அடங்கியிருக்கிறது. அசாதாரண சூழலே செய்தியாளர்களின் யதார்த்தச் சூழல். நெருக்கடியான காலகட்டங்களில் அவர்கள் தங்களின் உயிரையும்கூடப் பொருட்படுத்தாமல் உழைக்கிறார்கள். அதன் பலனைத்தான் பத்திரிகைகளில் நாம் பார்க்கிறோம். பொய்ச் செய்திகள் இன்றைய அரசியலின் ஒரு அங்கமாகிவிட்டிருக்கும் காலத்தில், பத்திரிகைச் செய்திகள் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன; மக்களின் கடைசி நம்பிக்கையை அவையே உத்தரவாதப்படுத்துகின்றன.

தொலைக்காட்சிகளும் அதைத் தொடர்ந்து இணையத்தின் வழி சமூக ஊடகங்களும் வந்த பிறகு, பாரம்பரிய ஊடகமான பத்திரிகைகள் பெரும் போட்டியையும் வருமான இழப்பையும் சந்திக்கலாயின. கூகுள், ஃபேஸ்புக் போன்ற இணைய நிறுவனங்கள், பத்திரிகைச் செய்திகளைத் தம்முடையதாகப் பாவிக்கத் தொடங்கியபோது, இது மேலும் அதிகமானது. இது ஒருவகை உழைப்புத் திருட்டு என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், இப்படிப் பாவிப்பதன் வழி அவை விளம்பர வருவாயும் ஈட்டுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், ஆஸ்திரேலிய அரசு எடுத்திருக்கும் முடிவானது பத்திரிகைகளுக்கு மட்டுமல்லாது, ஜனநாயகத்துக்கும் நல்ல செய்தி. பத்திரிகைகளுக்கு மட்டும் அல்லாது, எழுத்தாளர்களின் இணையதளங்களுக்கும் வருவாய்ப் பகிர்வு கிடைப்பதற்கான சூழலை உருவாக்குவதாக அந்தச் சட்டம் விரிவாக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக முதன்முதலில் சட்டம் இயற்றுவது ஆஸ்திரேலிய அரசுதான் என்றாலும், ஏற்கெனவே கூகுளுடனும் ஃபேஸ்புக்குடனும் மோதிய அனுபவம் ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு உண்டு. காப்புரிமைச் சட்டம் சார்ந்து இந்தப் பிரச்சினையை அந்த நாடுகள் எடுத்துச்சென்றதால் அவற்றுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றும், தாங்கள் தொழில் போட்டி சட்டத்தின் மூலம் இதை அணுகப்போகிறோம் என்றும் ஆஸ்திரேலியா கூறியிருக்கிறது. நல்ல விஷயம். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஆஸ்திரேலிய வழியை இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x