தொழிலாளர்கள் இனியும் துயரத்துக்குள்ளாகக் கூடாது!

தொழிலாளர்கள் இனியும் துயரத்துக்குள்ளாகக் கூடாது!
Updated on
1 min read

தமிழகத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆங்காங்கே நூற்றுக்கணக்கில் திரண்டெழுந்து ஆர்ப்பாட்டங்களை நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சிறப்பு ரயில்கள் மூலமாகத் தங்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கை. இதேபோல மும்பையின் தாராவி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழ்நாடு வர விரும்பும் தொழிலாளர்களை இங்கே அழைத்துவர ஏனைய மாநில அரசுகளைப் போல தமிழக அரசு இன்னமும் அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்ற குரல்களும் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. இரு விஷயங்களிலுமே தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சொந்த ஊர், தாய்மொழி, உறவுகள் எல்லாவற்றையும் விட்டுப் புலம்பெயர்ந்து செல்லும் ஒரு குடிநபர், இக்கட்டான சூழலில் தன்னைத் தன் அரசாங்கம் தாங்கிப் பிடிக்கும் என்ற நம்பிக்கையிலேயே வெளியேறத் துணிகிறார். இக்கட்டான காலகட்டங்களில் அந்த நம்பிக்கையைக் காப்பது அரசுகளின் கடமை. எந்த அவகாசமும் அளிக்காமல் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட இந்த ஊரடங்கில், மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள்தான். இந்தியத் தொழில் துறையும் நகரங்களும் உயிரோட்டமாக இயங்கிடத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் இவர்களை உடனடியாக நம்முடைய அரசுகள் தாங்கிப் பிடித்திருக்க வேண்டும்.

ஏனோ தெரியவில்லை; பிடிவாதமாக அவர்களை அவரவர் பிழைப்பில் இருந்த நகரங்களிலேயே தங்கச் சொன்னது இந்திய அரசு. நடைப்பயணமாகச் செல்ல முற்பட்டபோதும்கூட அவர்களை அனுமதிக்கவில்லை; மூன்றாவது கட்ட ஊரடங்கும் அமலாக்கப்பட்ட பின்னர், மாநில அரசுகளின் அழுத்தம் காரணமாகச் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்குத் தொழிலாளர்களை அனுப்ப ஒப்புக்கொண்டது. மிகக் கால தாமதமான இந்த நடவடிக்கையிலும் அரசின் முழுமையான திட்டம் என்னவென்று தெரியவில்லை. ஏனென்றால், பல லட்சம் தொழிலாளர்கள் ஊர் திரும்பக் காத்திருக்கும் நிலையில், சில ஆயிரம் பேரை அனுப்புவதற்கான ரயில்களே இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த ரயில்களுக்கும் வழக்கமான கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது பெரும் கொடுமை. எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனம், ‘தொழிலாளர்களுக்கான பயணச் செலவை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளும்’ என்ற அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் அறிவிப்பு ஆகியவற்றின் விளைவாக, இப்போது பயணச் செலவை ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் ஏற்கும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. நல்லது. தொழிலாளர்கள் முழு மூச்சில் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படட்டும். தமிழக அரசும் தன்னை நம்பியிருப்பவர்களைக் காக்கட்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in