

பாகிஸ்தான் மீண்டும் அழிவு ஆட்டத்தில் இறங்கியிருக்கிறது. பஞ்சாபின் குருதாஸ்பூரில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்து காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தில் நடந்திருக்கும் தாக்குதல் பாகிஸ்தான் தன்னைத் திருத்திக்கொள்ளப் போவதில்லையோ எனும் சந்தேகத்தையே எழுப்புகிறது.
இந்திய - பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைக்கப்பட்டிருக்கும் வேலி, மழைக் காலத்தில் ஆங்காங்கே தகர்ந்துவிடுகிறது. இப்படிக் கிடைக்கும் இடைவெளியைப் பயன்படுத்தி, இரு பயங்கரவாதிகளை ஆற்றில் இறக்கி இந்தியாவுக்குள் அனுப்பியிருக்கின்றனர். எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது அவர்கள் நடத்திய தாக்குதலில் நம்முடைய இரு வீரர்கள் தன் இன்னுயிரை இழந்திருக்கின்றனர். தொடர்ந்து நடத்தப்பட்ட எதிர்த் தாக்குதலின் விளைவாக ஒருவர் கொல்லப்பட, மற்றொருவர் உயிருடன் பிடிக்கப்பட்டிருக்கிறார்.
பிடிபட்டவர் தன்னுடைய பெயர், தான் பிறந்த ஊர், தனக்கிடப்பட்ட கட்டளை என்று அனைத்தையும் தடையின்றிச் சொல்லியிருக்கிறார். “ஆயுதங்கள் தந்து, ‘கண்ணில்படும் இந்துக்களையெல்லாம் சுட்டுக் கொல்லுங்கள்’என்று கூறி அனுப்பினார்கள்” என்றும் சொல்லியிருக்கிறார். இந்தியாவில் வசிக்கும் எவர் உயிர் போனாலும், அது இந்திய உயிர்தான்; ஒரு இந்துவைச் சுட்டால், இங்கு முஸ்லிம் பார்த்துக்கொண்டிருப்பாரா அல்லது முஸ்லிமைச் சுட்டால், இந்து பார்த்துக்கொண்டிருப்பாரா? ஆயுதங்களைக் கொடுத்தனுப்பும் கொடூர மூளைகள் இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள நிறைய இருக்கிறது.
பாகிஸ்தான் அரசு எடுத்த எடுப்பிலேயே பிடிபட்டவர் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்று தெரிவித்தாலும், பாகிஸ்தானில் வசிக்கும் அவருடைய தந்தை, பிடிபட்டது தன்னுடைய மகன்தான் என்று இந்திய, பாகிஸ்தானிய ஊடகங்களிடம் உறுதிசெய்திருக்கிறார். கூடவே, இனி தன்னுடைய குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து என்றும் அச்சம் தெரிவித்திருக்கிறார். ஆக, அம்புகளை அனுப்பிய கரங்கள் யாருடையவை என்பதைப் பற்றி பெரிய விவாதங்களுக்கு இடம் இல்லை.
ரஷ்யாவின் உஃபா நகரில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேசி பயங்கரவாதத்தை ஒடுக்குவதுபற்றிக் கூட்டறிக்கை வெளியிட்ட பிறகுதான், குருதாஸ்பூர் சம்பவம் நடந்தது. இப்போது இரு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்தித்துப் பேசுவதற்கு முன், உத்தம்பூர் தாக்குதல் நடந்திருக்கிறது. ஒரு வாதத்துக்கு, பாகிஸ்தான் அரசு தனக்கு இத்தாக்குதல்களில் பங்கு இல்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்வோம்; சரி, இப்படி நிழல் யுத்தத்தில் ஈடுபடும் அமைப்புகளைத் தடுக்க என்ன நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு எடுக்கப்போகிறது?
இந்தியாவுடன் நேரடிப் போரில் ஈடுபட்டால், பதிலடி கடுமையாக இருக்கும் என்பதாலேயே நிழல் யுத்தங்களை பாகிஸ்தான் கையில் எடுத்தது. கடந்த மூன்று தசாப்தங்களில் அதற்குக் கடுமையான விலையை நம்மைவிடவும் பாகிஸ்தான் அரசே கொடுத்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான காய் நகர்த்தலில் மட்டும் அல்ல; ஆப்கன் அனுபவமும் அதையே பாகிஸ்தானுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. சோவியத் ஒன்றி யத்துக்கு எதிராகப் போரிட ஜிகாதிகளுக்கு உதவிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானம் நவீனமடைந்துவிடாமல் தடுத்தது. ஆனால், அதன் காரணமாகவே அதன் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் சீர்குலைந்து அமைதியை இழந்தது. பயங்கரவாதம் எப்போதும் கைப்பிடி இல்லா கொடுவாள். இரண்டு பக்கங்களையும் சேர்த்தே அது நாசமாக்கும். பாடம் கற்றுக்கொள்ளாவிட்டால் எப்படி?
இந்திய அரசுக்கு இரட்டை வேலை இருக்கிறது; எல்லையிலும் சரி, சர்வதேச அரங்கிலும் சரி… நாம் மேலும் நம்மைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்!