மாநில அரசுகள் சொல்வதற்கு மத்திய அரசு செவிசாய்க்கட்டும்

மாநில அரசுகள் சொல்வதற்கு மத்திய அரசு செவிசாய்க்கட்டும்
Updated on
1 min read

ஊரடங்கு விரைவில் முடியலாம் என்று பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில், ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுவதற்கான சமிக்ஞைகள் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. இந்தியாவில் கரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், மே 3-க்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிக்கும் யோசனையை டெல்லி, மஹாராஷ்டிரம், ஒடிஷா உள்ளிட்ட சில மாநிலங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. தமிழ்நாடு, குஜராத், ஆந்திரம் உள்ளிட்ட சில மாநிலங்கள், ஒன்றிய அரசின் வழிகாட்டலையே பின்பற்றும் எண்ணத்தில் இருப்பதாகத் தெரிகிறது. கேரளா போன்ற சில மாநிலங்கள் ஊரடங்கைப் பகுதி அளவில் தளர்த்தும் யோசனையை முன்மொழியலாம் என்று தெரிகிறது. எப்படியும் இன்று முதல்வர்களுடன் பிரதமர் நடத்தும் கலந்தாய்வுக் கூட்டத்தில், பெரும்பான்மை முடிவுக்கு மாற்றாக, அந்தந்த மாநிலங்களின் சூழல்களுக்கு ஏற்ப அவற்றின் யோசனைகளை அனுமதிக்கும் முடிவை ஒன்றிய அரசு எடுப்பது சிறந்த வழிமுறையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

ஊரடங்கு என்பது கிருமியை எதிர்கொள்வதற்கு அரசும் சமூகமும் தயாராக எடுத்துக்கொள்ளும் அவகாச உத்திதானே தவிர, அதுவே தீர்வு அல்ல. நாம் தீர்வை நோக்கி வேகமாக நகர வேண்டும். அதற்கு அந்தந்தச் சூழல்களுக்கேற்ற முடிவே சிறந்ததாக இருக்கும். நாட்டில் தொழில் வளர்ச்சியின் முன்னுதாரணமாகச் சொல்லப்படும் குஜராத், கரோனாவுக்கு முன் தடுமாறுவதையும், அதைக் காட்டிலும் பல மடங்கு மோசமான நிதி நிலைமை கொண்ட ஒடிஷா ஒப்பீட்டளவில் திறம்படப் பணியாற்றுவதையும் காண்கிறோம். இது நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகாரத்தைப் பரவலாக்க முடியுமோ அவ்வளவுக்கு இந்தப் பிரச்சினையைத் தீர்க்கப் புதுப் புது வழிமுறைகளை நாம் கண்டடைய முடியும். மஹாராஷ்டிரம் திரும்பத் திரும்ப புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாப்பாக அவர்களது மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திவருகிறது. உலகிலேயே அதிகமான ஜனநெருக்கடி கொண்ட நகரங்களில் ஒன்றான மும்பையை நிர்வகிப்பதில் உள்ள சிரமத்தை அந்த மாநில அரசுதானே உணர்ந்திருக்க முடியும்? நிபா தொற்றை எதிர்கொண்ட அனுபவத்திலிருந்து கேரளம் ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்தும் ஒரு திட்டத்தை முன்மொழிந்திருக்கிறது. இவை எல்லாமே பரிசீலிக்கப்பட வேண்டியவை. தொற்றுத் தடுப்பு, சிகிச்சை, நிவாரணங்கள் என்று ஒவ்வொரு நிலையிலும் மாநிலங்கள் தம் தேவைக்கேற்ப முடிவெடுத்துக்கொள்வதற்கு உத்வேகம் அளிப்பதே ஒன்றிய அரசின் இன்றைய கடமையாக இருக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in