ஊரடங்கு காலத்தில் மின்வெட்டுக்கு என்ன வேலை?

ஊரடங்கு காலத்தில் மின்வெட்டுக்கு என்ன வேலை?
Updated on
1 min read

கரோனாவை எதிர்கொள்ளும் விதமான ஊரடங்கின் தொடர்ச்சியாக ஒட்டுமொத்தத் தொழில் துறையின் இயக்கமும் முடங்கிக்கிடக்கும் இந்தக் காலகட்டத்திலும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலாக்கப்படுவதை என்னவென்று சொல்வது? தமிழ்நாடு இன்று மின் மிகை மாநிலம் ஆகிவிட்டது என்று ஆளும் அதிமுக அரசு பெருமிதத்தோடு பிரகடனப்படுத்திக்கொள்ளும் இந்நாட்களில்தான், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், குறிப்பாகக் கிராமப்புறங்களிலும் சிறுநகரங்களிலும் மின் விநியோகம் கடுமையான சிக்கலை எதிர்கொண்டுவருகிறது. நள்ளிரவிலும் அதிகாலையிலும் அமலாக்கப்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகளும் குறைந்த மின்னழுத்தமும் மக்களைக் கடும் துயரத்துக்கு ஆளாக்கிவருகின்றன.

பொதுவாகவே, வெயிலும் புழுக்கமும் அதிகரிக்கும் கோடைகாலத்தில் மின் பயன்பாடு அதிகரிப்பது இயல்பு; மேலும், நிலத்தடிநீர்ப் பாசனத்தையே பெரிதாக நம்பியிருக்கும் தமிழ்நாட்டில், விவசாயப் பயன்பாட்டிலும் மின்சாரத்தின் தேவை மிகும். இதற்கேற்ப அரசுகள் திட்டமிட்டு இயங்கும். ஊரடங்கின் ஒரு பகுதியாகத் தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகள் இயங்கவில்லை என்பதோடு, வணிகச் செயல்பாடுகளும் பெருமளவில் முடங்கியிருக்கின்றன. ஆகையால், மின் தேவையும் பெருமளவில் குறைந்துள்ளது. அதையே காரணம் காட்டி 6,000 மெகாவாட் மின் உற்பத்தியைத் தமிழக அரசு குறைப்பதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார். நிச்சயமாக மின் தடை ஏற்படாது என்று அரசு சார்பில் அடிக்கடி அறிவிப்புகள் வெளிவந்துகொண்டிருந்தாலும் மின் தடை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

மின்வெட்டுகள் பின்னிரவிலும் அதிகாலையிலும் மேற்கொள்ளப்படும்போது, கோடையின் புழுக்கமும் கொசுக்கடியும் சேர்ந்து மக்களை வீட்டுக்கு வெளியே தள்ளுகின்றன. மேலதிகம், கிராமங்களில் குறைந்த மின்னழுத்தப் பிரச்சினை வேறு இருப்பதால், மின் சாதனங்களை இயக்குவதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பல கிராமங்களில் குடிநீர்த் தேக்கத் தொட்டிகளை நிரப்புவதற்காக ஊராட்சி அமைப்புகள் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி மோட்டார்களை இயக்க நேர்வதைப் பார்க்க முடிகிறது. காவிரிப் படுகை உட்பட பல்வேறு பிராந்தியங்களிலும் விவசாயத்துக்கான மின் விநியோக நேரமும் குறைக்கப்பட்டிருக்கிறது. மின் பற்றாக்குறை இல்லாத நாட்களில் நிலவும் இந்தச் சூழலும் சிரமங்களும் முற்றிலும் தவிர்க்கப்படக் கூடியவை; நிர்வாகத் திட்டமிடலில் உள்ள கோளாறைத் தாண்டி, இதற்கு வேறு எந்த நியாயமும் இருப்பதற்கு இல்லை. தமிழக அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் அக்கறை செலுத்த வேண்டும். திட்டமிடலில் தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையே பற்றாக்குறை இருக்கும்பட்சத்தில், நிறுத்தி வைக்கப்பட்ட மின் உற்பத்தியை மீண்டும் தொடங்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in