அகதிகள் குடியுரிமைக்கான அளவுகோல்கள் என்ன?
பாகிஸ்தானிலிருந்தும் வங்கதேசத்திலிருந்தும் மதக் காரணங் களுக்காகத் துன்புறுத்தப்பட்டவர்கள் இந்தியாவுக்கு அகதி களாக வந்தால், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கு வது என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இந்துக்கள் மட்டு மின்றி பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், ஜோராஸ்டிரியர்கள் (பார்சிகள்), சீக்கியர்கள், ஜைனர்களும் இப்படிக் குடியுரிமை பெறத் தகுந்தவர்கள் என்று கருதும் அரசு, அதற்காக இந்தியக் குடியுரிமைச் சட்டத்துக்குத் திருத்தம் கொண்டுவர உத்தேசித்திருக்கிறது.
மதரீதியாக ஒடுக்கப்படுவதால்தான் வருகிறோம் என்பதை அகதிகளால் நிரூபிக்க முடியும்பட்சத்தில், குடியுரிமை வழங்க அவர்கள் பின்பற்றும் மதத்தை ஒரு அளவுகோலாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இஸ்லாத்தைச் சேர்ந்த சிறுபான்மைக் குழுக்களும்கூட பாகிஸ்தானில் அலைக்கழிப்புக்கு உள்ளாவதாகத் தகவல்கள் வருகின்றன. உண்மையிலேயே மத நம்பிக்கைக்காக ஒடுக்கப்பட்டு வருகிறவர்கள் யார், வேலைவாய்ப்புக்காக வருகிற வர்கள் யார் என்று அடையாளம் காண்பதில்தான் சிக்கலே வரும்.
‘‘வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்து குடியேறியவர் களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து கூறிவருகிறது. 2014 மக்களவைப் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாஜக தலைவர்கள், “வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் ஊடுருவியர்கள் நாடு திரும்புவதற்குத் தங்களுடைய மூட்டை முடிச்சுகளைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்” என்று முழங்கினர். இந்துக்களை மட்டும் வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் கூறினர். இப்போது ஒருபடி மேலே போய், ‘‘இந்தியாவில் தோன்றிய பிற மதங்களைச் சேர்ந்தவர்களையும் சேர்த்துக்கொள்ளத் தயார்’’ என்று அறிவித்துள்ளனர்.
உயிர் ஆபத்துகளைச் சுமந்துவரும் அகதிகளை - மனிதர்களை இப்படியெல்லாம் மத அடிப்படையில் பிரித்துப் பார்க்க முடியுமா? ஐக்கிய நாடுகள் சபை 1951-ல் நடத்திய அகதிகள் மாநாட்டு உடன்பாடு என்ன சொல்கிறது? ‘உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவோ, சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலையிலோ அகதியாகத் தங்கள் நாட்டு எல்லைக்குள் புகுந்துவிட்ட ஒருவரை மீண்டும் அவருடைய நாட்டுக்குத் திருப்பியனுப்பக் கூடாது’ என்கிறது. இந்த உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திடாவிட்டாலும், மனித உரிமைகளைக் காப்பாற்ற உலக அளவில் அறிவிக்கப்பட்ட பிரகடனம் நமக்கும் உரியதுதான். இனம், மதம், தேசிய அடையாளம், சமூக அடையாளம், அரசியல் கருத்து ஆகியவற்றுக்காக ஒருவர் அரசால் அலைக்கழிக்கப்பட்டால் அவருக்கு அகதி என்ற அந்தஸ்து கிட்டிவிடுகிறது. அப்படிப்பட்டவர் பிற நாட்டில் புகலிடம் கோரும்போது அதை மறுத்து அவரை வெளியேற்றக் கூடாது என்று அந்தப் பிரகடனம் வலியுறுத்துகிறது.
வங்கதேசத்துடன் இப்போது இந்தியாவுக்கு நல்லுறவு நிலவுகிறது. இப்போது அங்கே இந்துக்கள் ஒடுக்கப்படுவதாகக் கூறி அவர்களை வரவேற்பதோ, இங்கே குடியிருக்கும் வங்கதேசிகளை அடையாளம் கண்டு அவர்களை வலுக்கட்டாயமாக அவர்களுடைய நாட்டு எல்லைக்குள் திரும்ப அனுப்புவதோ இருதரப்பு உறவில் கசப்பைத்தான் ஏற்படுத்தும். அத்துடன் மனிதாபிமானமற்ற செயலாகவும் அது பார்க்கப்படும். இந்திய அரசு நிதானத்துடன் செயல்பட வேண்டும். மனித உரிமைகளையும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் புறக்கணித்து இந்திய அரசு செயல்பட்டுவிட முடியாது. இந்திய அரசின் உத்தேச யோசனையால் பிரச்சினைகள் ஏற்படும் என்றால், அந்த யோசனைகள் சரியில்லை என்றுதான் அர்த்தம். எனவே, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
