Published : 22 Apr 2020 07:41 AM
Last Updated : 22 Apr 2020 07:41 AM

உலக சுகாதார நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும்

கரோனாவுக்கு எதிரான உலக நாடுகளின் போராட்டத்தின் மையத்தில் உலக சுகாதார நிறுவனம் சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. கரோனா பரவல் தொடர்பில் உலக நாடுகளுக்கு முழுமையான விவரங்களையும், தீவிரமான எச்சரிக்கைகளையும் தர உலக சுகாதார நிறுவனம் தவறிவிட்டது என்ற பேச்சை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிரட்டல் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா அளித்துவரும் நிதியுதவியையே நிறுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறார் ட்ரம்ப்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு ரூ.3,825 கோடிக்கும் மேலே நிதி வழங்கும் அமெரிக்காதான் அதன் மிகப் பெரிய புரவலர். இதுவரை உலகிலேயே அதிகமாக 6 லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, 26 ஆயிரம் பேரைக் கிருமிக்குப் பறிகொடுத்தும்விட்டிருக்கும் அமெரிக்கா கரோனா தொடர்பில் ஆத்திரத்துக்கு உள்ளாவதும் புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால், கரோனா அனுபவம் எல்லோருக்குமே அதிர்ச்சிக்குரிய வருகை என்பதையும், அதன் போக்கைப் படிப்படியான ஆய்வுகள் வழியாகவே உணர்ந்துகொள்ள முடிகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைக்கு உலகை இணைத்திருக்கும் ஒரே சுகாதார அமைப்பு உலக சுகாதார நிறுவனம்; கடந்துவந்திருக்கும் காலங்களில் பல்வேறு இன்னல்களிலிருந்து மனித குலத்தை அது காத்திருக்கிறது. எல்லா நாடுகளையும் முன்கூட்டி எச்சரிக்க வேண்டிய பொறுப்பு அதற்கு இருக்கிறது என்றாலும், உறுப்பு நாடுகள் தரும் தகவல்களின் அடிப்படையிலேயே அது செயல்பட வேண்டியிருக்கிறது. சீனாவிலிருந்து தகவல் வரத் தொடங்கியது முதலாக உலகை எச்சரிக்கத் தொடங்கிய அது, ஜனவரி இறுதியிலேயே கரோனா தொற்றை உலக சுகாதார நெருக்கடியாக அறிவித்தது; கிருமி தொற்றியிருக்கும் நாடுகளுக்கான விமானப் பயணங்களையும் தவிர்க்க அறிவுறுத்தியது. அமெரிக்கா மட்டும் அல்ல; இன்று கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் பல நாடுகளும் அப்போது அந்த எச்சரிக்கைகளைப் புறந்தள்ளின.

அதிபர் ட்ரம்ப் இன்றும்கூட கரோனா விவகாரத்தை அலட்சியமாகவே கையாள்கிறார். இன்றைய சூழலிலும்கூட அமெரிக்காவின் பல மாநிலங்களில் ஊரடங்கு நீடிப்பதை அவர் எதிர்க்கிறார். ட்ரம்ப் நிர்வாகத்தின் அலட்சியம்தான் அமெரிக்காவை இந்நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது. கரோனா நெருக்கடியை எதிர்கொள்வதில் திணறும் ட்ரம்ப், பழிபோட ஆட்களைத் தேடிக்கொண்டிருக்கிறார். ஒருவேளை ஜப்பான் சொல்வதுபோல உலக சுகாதார நிறுவனத்தில் சில சீர்திருத்தங்கள் தேவைப்படலாம்; ஆனால், அதற்கான நிதியை எவர் நிறுத்தினாலும் மனித குலத்துக்கே ஊறு விளைவிப்பதாக அது மாறிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x