

உலக நாடுகள் அனைத்தையும் இன்று அச்சுறுத்தும் வார்த்தை ‘கரோனா’ என்றால், அதற்கு அடுத்த வார்த்தை ‘நிதிப் பற்றாக்குறை’. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், ஒரு பேரிடரை எதிர்கொள்ளும் சமயத்தில் முன்கூட்டி மக்கள் தயாராக இருப்பதற்குத் தாராளமான நிதி ஒதுக்கீடுதான் சரியான வழிமுறையாக இருக்க முடியும். ஏனென்றால், கிருமியின் தாக்குதல் வேகம் அதிகரிக்கும் முன்னரே அதற்கு எதிரான எல்லாக் கட்டமைப்புகளையும் உருவாக்கிட வேண்டும்; பல கோடி ஏழைகள் வீட்டில் இருக்கும் சூழலில் அவர்களுக்கான குறைந்தபட்ச ஊட்டச்சத்து மிக்க உணவும் இப்போது கிருமியை எதிர்கொள்ளும் ஒரு வழிமுறைதான். எல்லா நாடுகளுமே இதை உணர்ந்திருக்கின்றன. ஆகையால்தான், தனது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10-20% வரை கரோனாவை எதிர்கொள்ள அவை அறிவித்திருக்கின்றன.
அமெரிக்க அரசு இரண்டு லட்சம் கோடி டாலர்களை நிவாரணமாக அறிவித்திருக்கிறது. இது அந்நாட்டு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ஏறக்குறைய 10%. பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% தொகையை நிவாரணமாக அறிவித்துவிட்டன. பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் 10-15% நிவாரணத் தொகை வழங்குவதாய் உறுதியளித்திருக்கின்றன. கரோனா தாக்குதலை எதிர்கொள்ள 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையொட்டி, கரோனா பாதிப்புகளை மக்கள் எதிர்கொள்ளும் விதமாக ரூ.1.75 லட்சம் கோடி ஒதுக்கீட்டை அறிவித்தது இந்திய அரசு. மொத்தமாகவே இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வெறும் 0.8% மட்டுமே. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் சமூக நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை இதில் கழித்துவிட்டால் புதிய ஒதுக்கீடு சுமார் ரூ. 1 லட்சம் கோடி; அதாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 0.5% மட்டுமே. மாநிலங்கள் அதனால்தான் டெல்லி முன் திரும்பத் திரும்ப நிதிக் கோரிக்கைகளை வைக்கின்றன. தமிழக முதல்வர் மட்டுமே ரூ.20,000 கோடிக்காகத் தொடர்ந்து பேசிவருவது இங்கே பொருத்திப் பார்க்கப்பட வேண்டியது.
ஊரடங்கை இந்திய அரசு தொடரும் நிலையில், நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது முக்கியம். மனித வளமே நம்முடைய பெரிய பலம். அதைக் காத்திட இப்போது அரசு செலவிடுவது முக்கியம்.