

ஊரடங்கின் விளைவாகப் பாதிக்கப்படும் சமூகத்தின் விளிம்புநிலைக் குழுக்களுக்குத் தமிழக அரசு உதவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவது வரவேற்புக்குரியது. இந்த உதவிகளின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும்; மேலும், சாதாரண நாட்களில் பாதுகாப்பான சூழலில் இருந்து, இத்தகைய காலகட்டத்தில் விளிம்புநிலை நோக்கி நகரும் மேலும் பல குழுக்களையும் கண்டறிந்து இந்த உதவி வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும். உதாரணமாக, அன்றாடம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இத்தகு காலகட்டத்தில் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியும் பாதிப்பு. ஆனால், பதிப்பகங்களிலும் புத்தக நிலையங்களிலும் காகித விற்பனையகங்களிலும் அச்சகங்களிலும் பைண்டிங் நிலையங்களிலும் பணியாற்றுவோரின் பாதிப்பு கண்மறைவுப் பிரதேசத்தில் நடக்கும்.
தமிழகத்தில் சில ஆயிரம் பதிப்பகங்களும் புத்தக நிலையங்களும் இருக்கின்றன. குடிசைத் தொழில்போல இத்துறையில் ஈடுபட்டிருப்போரின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு இருக்கும். அது பெருவெள்ளமோ வறட்சியோ சமூகம் ஓர் இடர்மிகு காலகட்டத்தில் காலடி எடுத்துவைத்தால், முதலில் பாதிப்புக்குள்ளாகும் துறைகளில் ஒன்று இது. வெள்ளத்தால் ஒரு சமூகம் பெரும் சேதத்தை எதிர்கொள்ளும் நாட்களில் எத்தனை பேர் புத்தகக்கடைக்குச் செல்வார்கள், எத்தனை பேர் புத்தகங்களை வாங்கச் செலவிடுவார்கள்? மேலும், நல்ல நாட்களிலேயே புத்தகத்துக்குத் தொடர்ந்து செலவிடும் கலாச்சாரத்தைக் கொண்டதல்லவே இந்தியச் சமூகம்?
ஆக, எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியாத இன்றைய ஊரடங்குச் சூழலும், அதற்கு அடுத்து வரவிருக்கும் ஒரு பெரும் பொருளாதார மந்த காலகட்டமும் பதிப்புசார் துறையினருக்குப் பெரிய சவாலைத் தரக்கூடியவை. புத்தக விற்பனை நின்ற மாத்திரத்தில் மூச்சுத்திணறலைச் சந்திக்கும் நிலையிலேயே பெரும்பாலான பதிப்பகங்கள் உள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்றால், கட்டாயம் அரசின் உதவி தேவை.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொது நூலகங்களுக்கு நிறையப் பதிப்பாளர்கள் புத்தகம் அனுப்பியிருக்கிறார்கள். ஓராண்டு ஆகியும் இதற்கான தொகையில் 75% நிலுவையிலேயே இருக்கிறது. இதை உடனே விடுவிக்கலாம். ஒவ்வொரு நூலக ஆணையின்போதும் 2.5% தொகையைப் பதிப்பாளர் நல வாரியத்துக்காக அளித்திருக்கிறார்கள் பதிப்பாளர்கள். இத்தொகை மாநில அரசிடம்தான் சேர்ந்திருக்கிறது. இந்தத் தொகையை இப்போது பதிப்பாளர்கள் மீட்சிக்காக விடுவிக்கக் கேட்டிருக்கிறது பதிப்பாளர் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி). இதை உடனடியாகச் செய்யலாம். எல்லாவற்றுக்கும் மேல் அங்கீகரிக்கப்பட்டும் அங்கீகரிக்கப்படாமலும் பதிப்புத் துறை சார்ந்து இயங்கும் அனைவருக்கும் ஏனைய தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அளிக்கப்படுவதுபோலான உதவிகள் அளிக்கப்பட வேண்டும். பதிப்புத் துறை ஓர் உதாரணம்தான். இப்படியான ஒவ்வொரு குழுக்களும் அடையாளம் காணப்பட்டு உதவப்பட வேண்டும்.