

கரோனா பரவல் தடுப்பு தொடர்பில் முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, நாடு தழுவிய ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவருவதைப் பற்றி பொதுத் திட்டத்தை வகுக்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக மத்திய அமைச்சரவையின் செயலர், ‘இந்த முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற செய்தியில் உண்மை இல்லை’ என்று கூறியிருந்த நிலையில், பிரதமரின் கூற்று அரசு எதிர்கொள்ளும் சங்கடத்தைச் சுட்டுவதாக அமைந்திருக்கிறது. முழு ஊரடங்கு தொடரும்பட்சத்தில் பொருளாதாரம் மேலும் கடுமையாகப் பாதிக்கப்படும், அடித்தட்டு மக்கள் துயரம் மேலும் அதிகமாகும்; மாறாக, ஊரடங்கு முற்றிலுமாக நீக்கப்பட்டால் கரோனா பரவலைக் கட்டவிழ்த்துவிட்டதாக மாறிவிடும்.
இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு? சுயக்கட்டுப்பாடுக்கு நம் சமூகம் பழகுவதே தீர்வு! குறைந்தது அடுத்த ஓரிரு மாதங்களுக்கேனும் பொதுவெளியில் பழைய ஜனநெரிசலைத் தவிர்ப்பது தவிர்க்கவே முடியாதது என்பதையே அதிகரித்துவரும் கரோனா தொற்று எண்ணிக்கை சுட்டுகிறது. இதற்கான தீர்வாக ‘பகுதியளவிலான ஊரடங்கு’ உத்தியை அரசு யோசிக்கலாம்.
இந்த ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகான ஓரிரு நாட்களுக்கு மட்டும் புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்புவோருக்கு அனுமதி வழங்கிவிட்டு, மாநில எல்லைகளைத் தொடர்ந்து மூடிவைத்தல்; பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களில் வீட்டிலிருந்தபடி பணியாற்றுதல் முறைமையைத் தொடரச்செய்தல்; அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள், சந்தைகளுடன் வணிக நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுடன் கூடிய அனுமதி அளித்தல், அஞ்சல் சரக்கு சேவைகளை முடுக்கிவிடுதல், பகுதி பொதுப் போக்குவரத்தை அனுமதித்தல், தனிநபர் இடைவெளிப் பராமரித்தலைப் பொதுமக்களின் பொறுப்பாக்குதல் எனும் முடிவு நோக்கி அரசு நகரலாம்.
இதற்கு நம் சமூகம் பெரிய அளவில் தயாராக வேண்டும். சமூகத்தில் கொஞ்சம் வசதியுள்ளோரும் இந்தப் பொறுப்பேற்றலில் முன்வரிசையில் நிற்க வேண்டும். வாரம் முழுக்கக் காய்கறிச் சந்தைக்குச் செல்ல அரசு அனுமதிக்கலாம்; அதனாலேயே தினமும் காய்கறி வாங்க வெளியே செல்ல வேண்டியது இல்லை; குறைந்தது ஒரு வாரத்துக்கான திட்டமிடல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வேண்டும்; தவிர்க்கவே முடியாத சூழலில்தான் வெளியே ஒருவர் செல்ல வேண்டும் என்ற முடிவை ஓர் உறுதியாகக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வெளியே அன்றாடம் வர வேண்டிய கட்டாயத்தில் இருப்போர் பாதுகாப்பாகப் பணியாற்றி வீடு திரும்ப முடியும். அத்தியாவசியச் சேவைகள் தடையின்றித் தொடர முடியும். சீக்கிரமே கரோனவை நாடு விரட்டியடிக்க முடியும்!