Published : 03 Apr 2020 07:52 AM
Last Updated : 03 Apr 2020 07:52 AM

மாநில அரசுகள் கேட்பதை மத்திய அரசு அளித்திட வேண்டும்

கரோனாவுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு தழுவிய ஊரடங்கைத் தொடர்ந்த, மத்திய அரசின் ரூ.1.7 லட்சம் கோடி திட்ட அறிவிப்பும், இதனூடான தமிழக அரசு உள்ளிட்ட மாநில அரசுகளின் உதவிகளும் வரவேற்புக்குரியன. ஊரடங்கின் விளைவாக அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் அடித்தட்டு மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரையோடு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் பணி தமிழகத்தில் தொடங்கியிருப்பது நல்ல விஷயம். அதேசமயம், இந்த ஒதுக்கீடுகள் எல்லாமே அதிகரிக்கப்படுவது அவசியம். வெங்காயம் ஒரு கிலோ ரூ.100 எனும் அளவுக்குக் காய்கறி விலை எகிறியிருக்கும் இந்நாட்களில், ரூ.1,000 உதவித்தொகை எத்தனை நாள் தேவையைப் பூர்த்திசெய்யும்? ஏதோ பொங்கல் பண்டிகைப் பரிசு, வெள்ள நிவாரணத் தொகைபோல இதை அரசு கருதிடக் கூடாது. எளியோரின் முழு வருமானமும் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், உதவித்தொகை குறைந்தபட்சம் ஐந்து மடங்காக்கப்பட வேண்டும்.

மாநிலங்களாலேயே இந்தியா ஆளப்படுகிறது என்பதை இந்த இடர்மிகு காலகட்டம் மீண்டும் நிரூபிக்கிறது. செயல்திட்டங்களை மத்திய அரசு வகுத்தாலும் மாநில அரசுகளே களத்தில் நிற்கின்றன. வெவ்வேறு மாநில அரசுகள் எடுக்கும் பல நடவடிக்கைகள் கவனம் ஈர்க்கின்றன. கரோனா தொற்றியவர்களுக்காக நாட்டிலேயே பெரிய மருத்துவமனையைத் தயார்செய்துவருகிறது ஒடிசா அரசு. கரோனா தொற்று அறிகுறி இருப்பவர்கள் வீட்டில் சுயவிலக்கத்தை உருவாக்கிக்கொள்ளும் வசதி இல்லாத சூழலில், அவர்கள் 14 நாட்கள் தங்குவதற்காக 31 விடுதிகளை ஏற்பாடுசெய்துள்ளது வங்க அரசு. ஊரடங்கால் பாதிக்கப்படும் அடித்தட்டு மக்களின் பாதிப்பு கருதி இரண்டு மாத ரேஷன் பொருட்களை முன்கூட்டியே வழங்க முடிவெடுத்திருக்கிறது ஜார்க்கண்ட் அரசு. தன்னார்வலர்களைக் கொண்டு அத்தியாவசியப் பொருட்களை வீட்டுக்கே சென்று விநியோகிக்கிறது கோவா அரசு. இவையெல்லாம் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதற்கான பாடங்கள்.

தமிழகத்தின் சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் நிவாரண உதவிகளுக்காகவும் ரூ.9,000 கோடி நிதியுதவி வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டிருக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி. மேலதிகம் தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் விடுவிக்கக் கோரியிருக்கிறார். தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் அவர்களுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு இத்தருணத்தில் உடனடியாக அளிப்பதே செயல்பாட்டுக்கு உத்வேகம் அளிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x